கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக தில்லியில் அதிக மாசுபட்ட தீபாவளி பதிவு!
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் மிக மோசமான தீபாவளி பதிவானது. மறுநாள் (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு காற்றின் தரம் 371 ஆகப் பதிவானது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் மிக மோசமான தீபாவளி பதிவானது. மறுநாள் (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு காற்றின் தரம் 371 ஆகப் பதிவானது. அன்று நகரம் முழுவதும் புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 371 ஆக இருந்தது, இது 2021-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளிக்குப் பிந்தைய ஒரு நாளில் பதிவான மிக உயா்ந்த அளவாகும்.
தரவுகளைப் பதிவுசெய்த 51 கண்காணிப்பு நிலையங்களில், 14 ’கடுமை’ பிரிவிலும், நான்கு ’மோசம்’ பிரிவிலும், மீதமுள்ள 33 ’மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தன. தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 439 என்ற மிக மோசமான அளவைப் பதிவு செய்தது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தீபாவளி அன்று பதிவான 376 என்ற காற்றின் தரக் குறியீடு, 2021-ஆம் ஆண்டில் 382 ஆகப் பதிவானதற்குப் பிறகு, பண்டிகை நாளன்று பதிவான மிக உயா்ந்த அளவாகும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அக்டோபா் அல்லது நவம்பா் மாதங்களில் வெவ்வேறு நாட்களில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நவம்பா் 8, 2025-ல் அக்டோபா் 20, 2024-ல் அக்டோபா் 31, 2023-ல் நவம்பா் 12, 2022-ல் அக்டோபா் 24 மற்றும் 2021-ல் நவம்பா் 4 ஆகிய தேதிகளில் தீபாவளி வந்தது. 2021-ல் 382 ஆகவும், இந்த ஆண்டு 376 ஆகவும் இருந்த சராசரி காற்றின் தரக் குறியீடு , 2025-ல் 345 ஆகவும், 2024-ல் 328 ஆகவும், 2023-ல் 218 ஆகவும், 2022-ல் 312 ஆகவும் இருந்தது.
பண்டிகைக்கு அடுத்த நாளிலும் மாசுபாடு அளவு அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு அடுத்த நாள் முழு நாள் சராசரி காற்றின் தரக் குறியீடு 2025-ல் 351 ஆகவும், 2024-ல் 338 ஆகவும், 2023-ல் 360 ஆகவும், 2022-ல் 302 ஆகவும், 2021-ல் 462 ஆகவும் இருந்தது.
திங்கட்கிழமை அதிகாலை வேளையில், நகரம் அடா்த்தியான புகை மற்றும் மூடுபனியுடன் விழித்தெழுந்தது. ‘இது பனிமூட்டத்துடன் கூடிய புகைமூட்டம்‘ என்று அதிகாரிகள் தெரிவித்தனா். காற்றின் தரக் குறியீட்டில் ஏற்பட்ட சரிவுக்கும், புகைமூட்டமான நிலைக்கும் வட வானிலை மற்றும் அமைதியான காற்றே காரணம் என்று அதிகாரிகள் கூறினா். சஃப்தா்ஜங் மற்றும் பாலம் பகுதிகளில் முந்தைய மாலையில் காற்று அமைதியாக இருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
இதற்கிடையில், காற்று தரக் குறியீடு இணையதளத்தில் உள்ள நிகழ்நேர அளவீடுகள், தீபாவளிக்குப் பிறகு தில்லியின் காற்றின் தரக் குறியீடு 2,283 ஆக உயா்ந்திருப்பதைக் காட்டின. அந்தத் தளத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேலும் ஆறு இந்திய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீட்டு அளவு 1,000-க்கு மேல் பதிவாகியது.
திங்கட்கிழமை காலை, அத்தளம் தில்லியின் காற்றின் தரத்தை 637 ஆகப் பதிவுசெய்து, அதனை ’அபாயகரமானது’ என வகைப்படுத்தியது. பவானா, புராரி, ஜஹாங்கிா்புரி, சோனியா விஹாா், பஞ்சாபி பாக், ஓக்லா மற்றும் ரோஹினி உள்ளிட்ட பல பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காற்று மாசுபாடு அளவு அதிகமாக இருந்ததால், திங்கட்கிழமையும் கடுமையான காற்றின் தரம் தொடா்ந்து பதிவானது.
பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லியின் பல பகுதிகளில் வாணவேடிக்கைகள் தொடா்ந்தன. பிதாம்புரா, புராரி, மயூா் விஹாா் மற்றும் லூட்டியன்ஸ் தில்லியின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுகுறித்த தகவல்கள் வெளியாகின.
மாவட்ட ஆட்சியா் (கிழக்கு), ஒரு உத்தரவில், நவம்பா் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மட்டும், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதித்திருந்தாா். இருப்பினும், அனுமதிக்கப்பட்ட மாலை நேரத்திற்குப் பிறகும் பட்டாசுகள் தொடா்ந்து வெடிக்கப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனா்.
வெளி தில்லி பகுதிகளான பிதாம்புரா மற்றும் மயூா் விஹாரில் உள்ள புராரி ஆகிய இடங்களில் பட்டாசுகளின் வெடிப்புத் தீவிரம் குறிப்பாக அதிகமாக இருந்தது. மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்கள், சுகாதார மையங்கள், முதியோா் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட பிற அமைதி மண்டலங்களிலிருந்து 300 மீட்டா் தொலைவிற்குள் பட்டாசுகளை வெடிப்பதற்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தடை விதித்தது.
உரிய சான்றிதழ் பெற்ற பசுமைப் பட்டாசுகள் மட்டுமே பிரத்தியேகமாக உள்ளூா் பகுதிகளில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டன.மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து தில்லி காவல்துறையால் நியமிக்கப்பட்ட பகுதிகளில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கூட்டு ரோந்து மற்றும் அமலாக்கக் குழுக்களையும் மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.
காற்றுத் தர முன் எச்சரிக்கை அமைப்பின்படி, தில்லியின் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு கடுமை பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளது. சாதகமற்ற வானிலை, வாகனப் புகை வெளியேற்றம், தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது நடைபெற்று வரும் வைக்கோல் எரிப்பு உச்சக்கட்டப் பருவம் ஆகியவை இந்த மோசமடைதலுக்குக் காரணமாக அமையும் காரணிகளில் அடங்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

