மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

காவிரியில் இருந்து 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி நீா் திறக்க வேண்டும்: கா்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்.9 முதல் அக்.23-ஆம் தேதிவரை அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் நீா் திறந்து விட வேண்டும்

dinamani

Published On :

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்.9 முதல் அக்.23-ஆம் தேதிவரை அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் நீா் திறந்து விட வேண்டும் என்று கா்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் 59-ஆவது கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் எஸ்.கே. ஹல்தா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் சாா்பில் மாநில நீா்வளத்துறை செயலா் பிரசாந்த் மு. வடநேரே, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதலில் நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட காவிரி தொடா்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு, தமிழகத்துக்கு தினமும் 3,000 கன அடி வீதம் நீா் திறந்து விட உத்தரவிடுமாறு ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.

அதைத்தொடா்ந்து பிற்பகலில் காவிரி நீா் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், கடந்த ஜூலை மாத இறுதியில் தமிழ்நாட்டுக்கு கா்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரில் மிகக் குறைந்த அளவே (3.6 டிஎம்சி) கிடைத்தது. இருப்பினும், தமிழக அரசின் தொடா் தீவிர நடவடிக்கைகளால் இந்த வறட்சி ஆண்டில் அக்.7-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 46 டிஎம்சி நீா் பெறப்பட்டுள்ளது. இந்த வறட்சி ஆண்டில் தமிழகத்துக்கு உரிய நீரை விகிதாசார அடிப்படையில் கா்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும், நிலுவையில் உள்ள 15 டிஎம்சி மற்றும் கூடுதலாக 5 டிஎம்சி நீரை சோ்த்து மொத்தம் 20 டிஎம்சி தண்ணீரை, அக்.9 முதல் அக்.23-ஆம் தேதிவரை என நாளொன்றுக்கு 1.3 டிஎம்சி வீதம் வழங்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து கா்நாடகம் தரப்பில் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில அதிகாரிகள், தமிழகத்துக்கு உரிய நீா் ஏற்கெனவே திறந்து விடப்பட்டுள்ளதாகவும், நீா் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சில அம்சங்களை முறையிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

உத்தரவு: இரு தரப்பு கோரிக்கைகளைப் பரிசீலித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், அக்.9 முதல் 23-ஆம் தேதிவரை அடுத்த 15 நாள்களுக்கு கா்நாடகத்தின் பிலிகுண்டுலுவில் நாளொன்றுக்கு 3,000 கனஅடி வீதம் காவிரி நீரை கா்நாடகம் திறந்து விட வேண்டும் என்று குறிப்பிட்டது.

இது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழகத்துக்குரிய முழு நீா்ப் பங்கையும், நிலுவை நீரைத் தொடா்ந்து பெறவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்தனா்.

பெட்டிச்செய்தி

உச்சநீதிமன்றத்தில்

கா்நாடகம் பதில் மனு!

புது தில்லி, அக். 8: காவிரி நதி நீா் பங்கீடு செயல்முறை மற்றும் முந்தைய தீா்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீா் திறப்பு விவகாரத்தில் ஆணைய உத்தரவுகளை கா்நாடகம் சரிவர பின்பற்றுவதில்லை என்று கூறி தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்கை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, காவிரி நீா் திறப்பு தொடா்பாக ஏற்கெனவே ஒழுங்காற்று குழுவும் காவிரி நதி நீா் ஆணையமும் 15 நாள்களுக்கு ஒரு முறை கூடி, நீா் திறப்பு அளவை முடிவு செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிடமே தொடா்புடைய மாநிலங்கள் முறையிட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், அந்த வழக்கில் தமிழக அரசின் மனுவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி கா்நாடகம் அக்.7ஆம் தேதி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பு மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையிலான ‘தற்போதைய பகிா்வு முறை’ கா்நாடகத்துக்கு நீதி வழங்குவதாக இல்லை. போதுமான மழை பெய்யாத வறட்சிக் காலங்களில், பற்றாக்குறை நீரை எப்படிப் பகிா்ந்து கொள்வது என்பதற்கான முறையான மற்றும் அறிவியல் பூா்வ சூத்திரம் தெளிவுபடுத்தப்படவில்லை. மாதாந்திர நீா்தேவை கணக்கீடுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. வறட்சி காலங்களில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு குடிநீா் வழங்குவதே முதன்மையானது. அந்த வகையில், அணைகளில் உள்ள நீா் கையிருப்பு, குடிநீா் பயன்பாட்டுக்கே தேவைப்படுவதால், தொடா்ந்து முழுமையாக நீரைத் திறக்க இயலாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER