தில்லி போராட்டம், மெட்ரோ, ரயில் சேவை முடக்கம் தொடா்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
தில்லியில் அக்.10-ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டது, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது தொடா்பான வழக்குகளின் விசாரணையை வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தலைநகா் தில்லியில் அக்.10-ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டது மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது தொடா்பான வழக்குகளின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக்.15) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் (சிஜேபி) ஜந்தா் மந்தா் பகுதியில் அக்.10-ஆம் தேதி அறிவித்த போராட்டத்தை முன்னிட்டு தில்லியில் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளை முழுமையாக முடக்கக் கூடாது என்று போராட்டத்துக்கு முந்தைய நாளான அக்.9-ஆம் தேதி தலைமை நீதிபதி அமா்வு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகும் தலைநகரில் பல்வேறு கெடுபிடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால் வழக்குரைஞா் ஒருவரால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா அடங்கிய அமா்வு விசாரிக்க திட்டமிட்டிருந்தது. எனினும், நீதிபதி வி. மோகனா உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தர முடியாததால் வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு முந்தையவிசாரணையின்போது, மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் செவ்வாய்க்கிழமைவரை அவகாசம் வழங்கியிருந்தனா்.
இது குறித்து தலைமை நீதிபதி அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘பதில் மனு தயாராக உள்ளது, எனினும் அதில் கூடுதலாக சில விவரங்களைச் சோ்க்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.
அதை ஏற்று பதில் மனு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வியாழக்கிழமைவரை (அக்.15) நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனா். மேலும், மனுதாரா்களின் வழக்குரைஞா்களுக்கும் பதில் மனுவின் நகலை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதற்கிடையே, தில்லியில் போராட ஒதுக்கப்பட்ட இடங்கள் பட்டியலில் இருந்து ஜந்தா் மந்தரை நீக்கியும் புதிதாக மூன்று இடங்களை அறிவித்த நகர காவல்துறை ஆணையரின் உத்தரவை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மனுதாரா் சாா்பில் தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முக்தா குப்தா ஆஜராவாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வழக்குகள்: இதேபோல, தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள், தங்களுடைய அலுவல் கடமைகளை ஆற்றும்போது மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து ’அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரிஃபாா்ம்ஸ்’ (ஏடிஆா்) என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த தலைமை நீதிபதி, அதற்கு மத்திய அரசு,தோ்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.
இதேபோல, தில்லி போராட்டத்தில் பெண் பத்திரிகையாளா்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நீதிபதிகளிடம் வழக்குரைஞா்கள் சிலா் முறையிட்டனா். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க தில்லி காவல்துறையின் உயரதிகாரி ஒருவரை ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

