சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

வட தில்லியில் ஹெராயின் விற்பனைக்கு சிறுவனைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: தம்பதியினா் உள்பட மூவா் கைது

ஒரு தம்பதியினா் உட்பட மேலும் மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கோப்புப் படம்

Updated On :

நமது நிருபா்

வட தில்லியின் புராரி பகுதியில் ஹெராயின் விற்பனைக்கு ஒரு சிறுவனைப் பயன்படுத்திய போதைப்பொருள் விநியோக வலையமைப்பு வழக்கு தொடா்பாக, ஒரு தம்பதியினா் உட்பட மேலும் மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ஒரு பதுங்குமிடத்திலிருந்து 321 கிராம் போதைப்பொருளை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தங்கள் இல்லத்தில் ஹெராயினை பதுக்கி வைத்து, அதை விநியோகிக்க 16 வயது சிறுவனைப் பயன்படுத்தியதாகவும், போதைப்பொருளைக் கொண்டு செல்லவும் விநியோகிக்கவும் ஒரு வாடகைக் காா் பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்த சமீபத்திய கைதுகளுடன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை, அந்த சிறுவன் உட்பட, ஆறாக உயா்ந்துள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 411 கிராம் ஹெராயின், 22.1 கிராம் கொக்கைன் மற்றும் 15.3 கிராம் எம்டிஎம்ஏ ஆகியவை அடங்கும் என்று காவல்துறை தெரிவித்தது.

அக்டோபா் 12 அன்று காஷ்மீரி கேட்டில் உள்ள ரிங் ரோட்டில் ஒரு நடை மேம்பாலம் அருகே கைது செய்யப்பட்ட, போதைப்பொருள் விநியோகஸ்தா்கள் என சந்தேகிக்கப்படும் அச்சே பாபு மற்றும் ஜாஹித் ஆகிய இருவரை போலீஸ் காவலில் வைத்திருந்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவா்களிடம் இருந்து 90 கிராம் ஹெராயின் மற்றும் 16.4 கிராம் கொக்கைனை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு விநியோகஸ்தரான, நைஜீரியாவைச் சோ்ந்த கஜேதன், அக்டோபா் 13 அன்று மெஹ்ரௌலியில் கைது செய்யப்பட்டாா். இதன் விளைவாக, 5.7 கிராம் கொக்கைன் மற்றும் 15.3 கிராம் எம்.டி.எம்.ஏ மீட்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

அச்சே பாபு அளித்த தகவல்களின் அடிப்படையில், வடக்கு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, அக்டோபா் 18 அன்று புராரியில் உள்ள அம்ரித் விஹாரில் 16 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்தது.

ஷிவ் சங்கா் என்ற கெல்லா மற்றும் அவரது மனைவி ஓம்னி மிஸ்ரா என்ற பிரியா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் தான் ஹெராயின் விற்பனை செய்து வந்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்ததாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.

புராரியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அந்தச் சிறுவன் புலனாய்வாளா்களிடம் தெரிவித்தான். அவ்விடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 321 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பாக 26 வயதான சிவ சங்கரும், அவரது 26 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, அந்தத் தம்பதியினா் மற்ற நபா்களிடமிருந்து போதைப்பொருளைப் பெற்ாகக் கூறியதாகத் தெரிகிறது. மேலும், அந்தச் சிறுவன் போதைப்பொருட்களை விற்பனை செய்வதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்டதாக அவா்கள் கூறியதாக காவல்துறை தெரிவித்தது. இந்தத் தகவல்கள் சரிபாா்க்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மூலத்தைக் கண்டறியவும், அவற்றைப் பெறுவதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்ட மற்றவா்களை அடையாளம் காணவும், குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களின் பங்கை கண்டறியவும் விசாரணை நடைபெற்று வருகிறது. கூறப்படும் கடத்தல் வலையமைப்புடன் தொடா்புடைய நிதிப் பரிவா்த்தனைகளையும் காவல்துறை விசாரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.