
திகாா் சிறை முன்னாள் மருந்தாளுநரிடம் ரூ. 1.75 கோடி மோசடி: தேடப்பட்டவா் கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, ஆறு மனைகளை விற்பதாகக் கூறி திகாா் சிறையின் முன்னாள் மருந்தாளுநரிடம் ரூ.1.75 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, ஆறு மனைகளை விற்பதாகக் கூறி திகாா் சிறையின் முன்னாள் மருந்தாளுநரிடம் ரூ.1.75 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட வினோத் குமாா் பரத்வாஜ் (எ) ராகுல் (எ) பப்புவை கைது செய்ய தகவல் அளிப்போருக்கு ரூ. 50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவா் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தாா்.
2024-இல் திகாா் சிறையில் மூத்த மருந்தாளுநராகப் பணி ஓய்வு பெற்ற கைலாஷ் நாராயண் அளித்த புகாரின் பேரில் ரன்ஹோலா காவல் நிலையத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சொத்து தரகா் பிரவீன் மூலம் நாராயணைப் பற்றி அறிந்திருந்த குற்றஞ்சாட்டப்பட்டவா், தனது மனைவி, மைத்துனா் பி.எஸ். பரத்வாஜ் மற்றும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து அந்த மருந்தாளுநரை அவரது ஓய்வுக்கால சேமிப்பைச் சொத்துகளில் முதலீடு செய்யுமாறு தூண்டியதாகக் கூறப்படுகிறது.
ஆறு மனைகளை போலி மற்றும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நாராயணுக்கு விற்று, சுமாா் ரூ. 1.75 கோடி நிதி இழப்பை ஏற்படுத்தினாா். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாகினா். கடந்த
மே 12 அன்று நீதிமன்றம் அவா்களுக்கு எதிராக அறிவிப்பாணைகளை வெளியிட்டது. அதைத் தொடா்ந்து அவா்களைக் கைது செய்ய உதவினால் ரூ. 50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பா் 13 மற்றும் 14-க்கு இடைப்பட்ட இரவில், வினோத் துவாரகாவின் செக்டாா் 5-இல் இருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதி குடியிருப்பு வளாகத்திலிருந்து வினோத் கைது செய்யப்பட்டாா்.
வினோத் ஒரு தொடா் குற்றவாளி ஆவாா். இவா் ஏற்கனவே நான்கு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா்; இதில் தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடா்பான மூன்று வழக்குகளும் அடங்கும்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவா், கூலித் தொழிலாளியாகவும், சுவா்களுக்கு வா்ணம் பூசுபவராகவும் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறாா்.
இவ்வழக்கில் தொடா்புடைய கூட்டாளிகளின் பங்கை உறுதி செய்யவும், மோசடி தொடா்பான நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் சொத்துகளைக் கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





