அறிவே சோதி

அறிவே சோதி - அரங்க.இராமலிங்கம்; பக். 216; ரூ.80; அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை-17.
அறிவே சோதி
Updated on
1 min read

அறிவே சோதி - அரங்க.இராமலிங்கம்; பக். 216; ரூ.80; அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை-17.
நூலாசிரியர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய ஒன்பது சொற்பொழிவுகளை கட்டுரைகளாக்கி அத்துடன் புதிதாக மூன்று கட்டுரைகளையும் எழுதி இணைத்து நூலாக்கியுள்ளார்.
பாரதியாரால் தொடங்கப்பட்ட புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவின் இன்றையப் போக்குகள் எந்நிலையில் உள்ளன என்பது குறித்து, தெய்வீக சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் மனுநீதியை நிலைநாட்டியுள்ள இடம் குறித்து, மூவாயிரம் பாடல்கள் கண்ட சித்தர் திருமூலரின் சிந்தனை குறித்து, தமிழ்மொழி வளர்ச்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து - இவ்வாறு வேறுபட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும் எல்லாமே பொதுவாக தமிழ்மொழி குறித்தும், தமிழிலக்கியம் குறித்தும் அமைந்திருப்பது சிறப்பு.
குறிப்பாக, புதுக்கவிதையின் போக்குகள் குறித்து கூறுமிடத்து, இன்றைய புதுக்கவிஞர்களின் சிந்தனைகளையும் உள்ளடக்கி இருப்பது, சேக்கிழார் குறித்த கட்டுரையில் வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிட்டிருந்த மனுநீதிச் சோழனின் புலமையைச் சுட்டியிருப்பது, மன்னனையும் மக்களையும் வாழ்த்துவதுமாக இருந்த நிலை மாறி, ஆண்டவனையும் அடியார்களையும் வாழ்த்தும் முறை ஏற்பட்டு, பின்னர் அது தமிழ்மொழி வாழ்த்தாகவும், தமிழ்நாட்டு வாழ்த்தாகவும் மாறியிருப்பது ஆகிய செய்திகளைச் சுவையாக விளக்கியிருக்கிறார்
நூலாசிரியர்.
ஒவ்வொரு கட்டுரையிலும் தமிழும், இலக்கியமும் ஊடும்பாவுமாக இணைந்திருக்கின்றன. சற்றே நீண்ட கட்டுரைகளாக அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி குறித்த கட்டுரையும், பாரதியார் குறித்த கட்டுரையும் தமிழார்வலர்களுக்கு மட்டுமல்ல, தமிழறிஞர்களுக்கும் புதுப்புது செய்திகளைக் கூறுகின்றன.
தமிழின் ஆழ, அகலங்களை ஒருவாறு தொட்டுக்காட்டியுள்ள இந்நூல் தமிழ்க்காதல் கொண்டவர்களுக்கு தெளிவானதொரு வழிகாட்டும் நூல் எனில் அது மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com