அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி-குமுதம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்; தொகுப்பாசிரியர்: சந்திரமெüலி, பக். 136; ரூ. 160; மணிமேகலைப் பிரசுரம்,சென்னை-600017, ✆ 044 24342926.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பன்முகப் பரிமாணம் குறித்து எத்தனை எத்தனை எழுதினாலும் தீராது. இனியொருவர் அவர்போல இனிமேல்தான் பிறக்க வேண்டும் என்பதுபோல அமைந்தவை அவரது நடிப்பும் வாழ்வும். அவர் குறித்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன; பேட்டிகள் வெளிவந்து விட்டன; புதுப்புதுப் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்திலிருந்தும் வேறுபடும் மிக முக்கியமான பதிவு 'அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி'.
அமெரிக்காவின் மிகப்பெரிய இதய நோய் நிபுணர் என்பது அவர் தனிப்பட்ட முறையில் பெற்றிருக்கும் தகுதி என்றால், 'குமுதம்' வார இதழின் ஆசிரியராக பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கட்டிப்போட்ட பிரபல எழுத்தாளர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் புதல்வர் என்பதால் அவருக்கும் கிடைத்த பிறவிப் பெருமை. அவரது வீட்டில் நோயாளியாகவும், விருந்தினராகவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தங்கியிருந்தபோது அவரிடம் கேட்டறிந்த பல தகவல்களையும் தான் நேரில் சந்தித்த குணாதிசயங்களையும் கட்டுரைகளாக்கி தொகுத்திருக்கிறார் அவரது ஒரே மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
சிவாஜி கணேசனின் 'அன்னை இல்லம்' வீட்டின் பின்னணி தெரியுமா? இப்போது செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று அழைக்கப்படும் 'அன்னை இல்லம்' இருக்கும் இந்த சாலையின் பெயர் அப்போது போக் ரோடு. மொத்தம் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்த அந்த அரண்மனை போன்ற பங்களா போக் என்கிற பிரிட்டிஷ்காரருக்குச் சொந்தமானது. அவருக்குப் பின்னால் கே.சி. ரெட்டி என்பவர் வசித்து வந்த அந்த பங்களாதான், இப்போது அன்னை இல்லமாக சிவாஜி கணேசனால் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.
இப்படி தொடங்கும் அந்த புத்தகம் சிவாஜி கணேசன் குறித்த பலவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக தொகுக்கப்பட்டிருக்கிறது. டாக்டர் பழனியப்பன் வெள்ளந்தியாக பல கேள்விகளை எழுப்பினாலும் அதற்கு தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் சிவாஜி கணேசன் பதிலளித்திருப்பதும் பக்கத்துக்குப் பக்கம் புதுப்புது விஷயங்கள், ஊற்றாகப் பிரவாகமெடுத்திருக்கின்றன.
'நீங்கள் எப்படி பக்கம் பக்கமாக வசனங்களை மனப்பாடம் செய்கிறீர்கள்?' என்று டாக்டர் ஜவஹர் கேட்க, 'நீங்கள் எப்படி இத்தனை மருந்துகள் குறித்தும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்?' என்று சிவாஜி பதில் கேள்வி தொடுக்கத் துவங்கும் சுவாரஸ்யம் கடைசிப் பக்கம்வரை சற்றும் குறையாமல் தொடர்வதற்கு அவரைப் பேட்டி எடுத்துத் தொடர் கட்டுரைகளாகத் தொகுத்த தொகுப்பாசிரியர் சந்திரமெüலியின் இதழியல் அனுபவமும் துணை நிற்பதைக் கூற வேண்டும்.
சிவாஜிக்கு 10-12 வயது இருக்கும் போதே 'கதரின் வெற்றி' என்ற நாடகத்தில் தேசியக்கொடி ஏந்தி தேசபக்திப் பாடல் பாடும் சிறுவனாகக் கண்டு காமராஜர் கைதட்டிப் பாராட்டினார் என்கிற செய்தி கேள்விப்பட்டிராத புது தகவல். இது 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிவாஜி ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மட்டுமல்லாமல், தலைசிறந்த ஆளுமை குறித்து தலைமுறை கடந்து பேசப்படும் பதிவுகளில் இதுவும் ஒன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.