கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல்களில் இலக்கியச்சுவை- இரா.வே. இளங்கோவன்; பக். 328; ரூ. 330; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044- 2434 2926.
'காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்!' என எம்ஜிஆருக்காகவும், கே.ஆர்.விஜயாவுக்காகவும் கண்ணதாசன் பாட்டெழுதினால், அந்த வரிகளின் முற்பிறவி வள்ளுவரால் அவரது திருக்குறளில் 1120-ஆவது குறளாக உலவுகின்றன.
'இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும்தொடேன்' என்கிற பாடலில் கம்பனின் வரிகள், 'உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனிநான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்' என சிவாஜிகணேசனுக்காகவும், வாணிஸ்ரீ-காகவும் கவியரசரின் பாடல்களாக மறுபிறவி கண்டிருக்கின்றன.
தமிழிலக்கியத்தில் நம் கவனத்துக்கு வராத ஏராளமான பாடல்களுடன் கவியரசரின் வரிகள் பொருந்துவதாகக் கூறும் நூலாசிரியர், கவிஞர்களின் சிந்தனை நூற்றாண்டுகள் கடந்தும் பொருந்திப் போகும் விந்தையை நமக்கு காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், ஷெல்லி என உலகப் புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதை வரிகளை நம் கவியரசர் எப்படிப் பாடல்களாக்கியுள்ளார் என்ற தகவல்கள் இன்னும் சுவாரஸ்யம். கவியரசருக்கும் உலக இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பையும் நமக்கு அழகாக எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, கம்பராமாயணம், பரிபாடல், புறநானூறு, குற்றாலக் குறவஞ்சி என சங்க இலக்கியப் பாடல்களின் ஜென்மத் தொடர்ச்சியைக் காட்டும் நூலாசிரியர், கவியரசரின் பாடல்களில் விளங்கும் அணிகளையும் யாப்பையும் பட்டியலிட்டுத் தந்துள்ளார்.
அதேவேளை, கவியரசர் மீதான காதலை உணர அவரது பாடல்களுடனும், இலக்கியத்தின் மீதான பற்றுதலைப் புரிய இலக்கியப் பாடல்களுடனும் வந்திருக்கும் இந்தப் புத்தகம், நூலாசிரியரின் உழைப்பையும், மேதைமையையும் பறைசாற்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்ஜிஆர் ஆசைப்பட்டதால் மதுரை வீரனுக்கு எழுதினேன்... கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!







