
நேமிக்கம் (சிறுகதைகள்)
ஒவ்வொரு சிறுகதையும் வட்டார மொழியில் அமைந்து, அங்கு வாழும் மக்களையும் பண்பாட்டையும் நம் கண் முன் நிறுத்துகிறது.

நேமிக்கம் (சிறுகதைகள்)- மு. மகேந்திரபாபு; பக். 152; ரூ. 150; யாப்பு வெளியீடு, சென்னை- 600 076. ✆ 90805 14506.
குறைவான மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் நிறைவான வாழ்க்கையை கிராமங்கள் தருகின்றன. உயர் கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் நகரத்துக்குச் சென்றாலும், அவர்கள் கிராம வாழ்க்கையை மறப்பதில்லை.
இந்தத் தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் கரிசல் பிரதேச மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. பெரும்பாலான கதைகளுக்கான களம் எட்டயபுரம் வட்டாரத்தில் உள்ள ஆசிரியரின் கிராமமான பொன்னையாபுரம்தான்.
பள்ளிப் பருவத்தில் துணைப்பாடப் பகுதியில் படித்த, கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏரான கி.ரா. எழுதிய 'கதவு' என்ற கதையும், எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய 'மாயிருளு' என்ற கதையும் தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லும் நூலாசிரியர், அதே பாணியில் தமது கதைகளில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் இயல்புகளையும், சொல்லாடல்களையும் கையாண்டுள்ளார்.
தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கதையான நேமிக்கம் என்ற சிறுகதையே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. கிராமத்தில் கையாளப்படும் நேமிக்கம் என்ற வார்த்தைக்கு நேர்த்திக்கடன், நேர்ச்சை, வாக்குச் செலுத்துதல், கடன் தீர்த்தல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தயாராகும் மாடசாமி, தன் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து, அங்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அங்கு நடைபெற்ற சம்பவங்கள் நேமிக்கம் சிறுகதையில் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சிறுகதையும் வட்டார மொழியில் அமைந்து, அங்கு வாழும் மக்களையும் பண்பாட்டையும் நம் கண் முன் நிறுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






