அயோத்தியை நோக்கி...
ஸ்ரீராம பக்தர்களிலேயே மிக முக்கியமான இடம் அனுமனுக்குத்தான்! எப்போதும் ராம நாமத்தையே ஜபிக்கும் இந்த வாயு குமாரர், நம் பாரத தேசத்தில் ஆங்காங்கே கோயில் கொண்டெழுந்தருள்கிறார்;, ராம பக்தர்களின் துயர் தீர்


ஸ்ரீராம பக்தர்களிலேயே மிக முக்கியமான இடம் அனுமனுக்குத்தான்! எப்போதும் ராம நாமத்தையே ஜபிக்கும் இந்த வாயு குமாரர், நம் பாரத தேசத்தில் ஆங்காங்கே கோயில் கொண்டெழுந்தருள்கிறார்;, ராம பக்தர்களின் துயர் தீர்த்து வருகின்றார். அத்தகைய ஒரு தலம்தான் பெரணமல்லூர் ஆகும். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள ஓர் பேரூர் பெரணமல்லூர்.
இங்கு பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட சிவாலயமும், விஷ்ணு கோயிலும் உள்ளன. தவிர, 200 வருட காலப் பழமைவாய்ந்த ஸ்ரீஆஞ்சநேயர், இவ்வூரில் சிறு குன்றின் மீது குடி கொண்டுள்ளார்.
இந்த அஞ்சனை மைந்தன் இங்கு குடி கொள்வதற்கு முன்பு பூமிக்குள் புதைந்திருந்தார். நன்செய் நிலங்கள் நிறைந்த இவ்வூரில் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுநாட்களாக மழலைச் செல்வம் கிடையாது. அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு தினம் ஏர் உழும்போது, பலமான கல் ஒன்று கலப்பையில் இடிபட்டது.
அதை எடுத்துப் போடுவதற்காக உடன் அவ்விடத்தைத் தோண்டினர். அங்கே அற்புதமான அனுமன் சிலை கிடைத்தது! அதை அருகே இருந்த சிறு குன்றின் மீது ஸ்தாபித்து, சிறிதாய் ஆலயமொன்று எழுப்பி, வழிபட்டனர். பின்னர் அவர்களது குறை நீங்கி, பிள்ளைப்பேறு கிட்டியது. அது முதல் இவ்வூர் மக்களும் அனுமனை வழிபட்டு, தங்களது இடர்கள் நீங்கப் பெற்று, இன்புற்று வருகின்றனர். இந்த அனுமன் அன்பர் உள்ளக் கிடக்கையை அறிந்து நல்வரங்கள் அருளுவதில் வல்லவர் ஆவார்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள புகழ் பெற்ற ஆஞ்சநேயரது சிலை செய்ய ஒரு பெரும் பாறை தேவைப்பட்டது. அதைப் பல இடங்களில் தேடினர். இறுதியில் இந்தப் பெரணமல்லூரை சேர்ந்த இஞ்சிமேடு பகுதியில்தான் அந்தக் கருங்கல் தேர்வு செய்யப்பட்டது. அதை எடுத்து வரும் வழியில் இடையூறுகள் பல வந்தன. அப்போது வழியில் இருந்த இந்த வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதன் பின்னர் தடைகள் ஏதுமின்றி அந்தக் கருங்கல்லினை சிலை செய்ய சென்னைக்கு எடுத்துச் சென்றனர்.
மகிமை மிக்க இந்த அனுமன்கோயில் கிழக்கு முகமாய் இருப்பினும், அனுமான் வடக்கே முகம் திருப்பியவாறு தரிசனம் தருகின்றார். ஒரு வேளை அயோத்தியை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ....? அபயமளிக்கும் வலக்கரம், கதையேந்திய இடக்கரம், நீண்டு தலைக்குமேல் சுருண்டு நிற்கும் வால் என அற்புதக் கோலத்தில் அருட்காட்சி நல்கும் இவர் "வீர ஆஞ்சநேயர்' என்றும், "வரத ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.
அமாவாசைதோறும் இவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று ராம கோஷத்துடன் கிரிவலமும் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து அனுமனை வழிபட்டு, அருள் பெற்றுச் செல்கின்றனர்.
மார்கழி அமாவாசை அனுமன் ஜெயந்தியின்போது சிறப்பு அபிஷேகத்துடன், 1008 உளுந்துவடை மாலை, வெற்றிலை மாலை ஆகியன சாற்றப்பட்டு, அனுமன் கோலாகலக் காட்சி தருவார்! அப்போது இங்கு வழிபடும் பக்தர்கள் திருமணப் பிராப்தி, தம்பதியர் ஒற்றுமை, குழந்தைப் பேறு, பிணியகலுதல், சனிதோஷ நிவர்த்தி போன்ற வரங்களைப் பெற்றுப் பலனடைகின்றனர். பொதுவாக மாருதி வழிபாடு புத்தி, பலம், புகழ், தைரியம், பேச்சு வன்மை, நோயற்ற வாழ்வு, வெற்றி, தீயவர்களையும் நல்லவர்களாக மாற்றும் தன்மை போன்றவற்றைப் பெற்றுத் தரும் வல்லமை மிக்கதாகும்.
அத்தனையும் அளிக்கும் இந்த அற்புத வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் பழுதடைந்து உள்ளதால், புதிதாக ஆலயம் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர் ஊர் மக்கள். அதற்காக அறக்கட்டளை ஒன்றும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த உன்னத அனுமனுக்கு புதிய ஆலயம் எழுப்பிட பக்தர்கள் பெருநிதி அளித்து, அநேக வரங்களைப் பெற்று வாழ்ந்திட வேண்டுகின்றோம்.
ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பெரணமல்லூர்.
திருப்பணிக்குழு முகவரி :-
ஸ்ரீவரத ஆஞ்சநேயர் ஆலய அறக்கட்டளை,
18, ஆஞ்சநேயர் கோயில் தெரு, பெரணமல்லூர்-604503,
வந்தவாசி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்.
செல் பேசி எண் : 9790387313.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...