

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை பிற்பகல் 2 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த டிச.19 தேதி கொடியேற்றத்துடன் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான இன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர்கள் புறப்பட்டது.
விழுப்புரம் இந்து அறநிலையத்துறை இணைஆணையர் ரா.செந்தில்வேலவன், உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மாலை 5 மணிக்கு கீழவீதி தேர்நிலையை அடைகின்றன. தேர்களுக்கு முன்பு வீதிகளில் தில்லைதிருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தில்லைத்திருமுறைக்கழகத் தலைவர் புலவர் ச.சுந்தரேசம்பிள்ளை செய்திருந்தார். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.
முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் அறங்காவலர்குழுத் தலைவர் என்.ராமலிங்கம் தலைமையில் தொன்று தொட்டும் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்று, அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
நாளை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி மார்கழி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஆச்சாரியார் எஸ்.வி.தில்லைநாகபூஷண தீட்சிதர், பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர், துணைச் செயலாளர் ரா.வெ.கிருஷ்ணசாமி தீட்சிதர் மற்றும் அறநிலையத்துறை செயல்அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் செய்துள்ளனர். சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் செய்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.