ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஏழுமலையானுக்கு ஓராண்டில் 430 உற்சவங்கள்

திருமலை ஏழுமலையானுக்கு ஒரு வருடத்தில் சுமார் 430 உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:07 am

எம். ஆர். சுரேஷ்குமார்

திருமலை ஏழுமலையானுக்கு ஒரு வருடத்தில் சுமார் 430 உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

திருமலை கோயில், பக்தர்களிடையே பிரபலமடைவதற்கு முன் ஏழுமலையானுக்கு தினமும் பகலில் விளக்கேற்றுவது மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. பின், ராமானுஜர் தனது பொறுப்பில் கோயிலை எடுத்துக் கொண்டு, கோயிலை விரிவுபடுத்தி பாதுகாக்கவும், தினசரி பூஜைகள் நடத்தவும் ஆழ்வார்களை நியமித்தார்.

அதன் பிறகு, ஏழுமலையானின் புகழ் பக்தர்களிடையே பரவத் தொடங்கியது. உண்டியல் காணிக்கைகள் பெறப்பட்ட பின், வைகானச ஆகம விதிப்படி திருமலையில் தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் தொடங்கப்பட்டன.

உண்டியல் காணிக்கைகள், நன்கொடைகள் பெருகப்பெருக ஏழுமலையான் கோயில் அனைத்து விதங்களிலும் முழுமையடைந்தது.

திருமலையில் தற்போது நடைபெற்று வரும் உற்சவங்களில் சிலவற்றை மட்டும், அதாவது கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், வசந்தோற்சவம், ஊஞ்சல் சேவை, ஸஹஸ்ர தீப அலங்கார சேவை மட்டுமே சாதாரண பக்தர்களும் காண முடிகிறது.

ஒரு சில வாராந்திர சேவைகளான பூராபிஷேகம், திருப்பாவாடை, அஷ்டதள பாத பத்மாராதனை, மேல் சாட் வஸ்திரம் போன்றவையும் தினசரி சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, ஸஹஸ்ர நாமார்ச்சனை போன்ற சேவைகள் வி.ஐ.பி.-க்களுக்கும், புரொட்டக்கால் பக்தர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இதுவரை ஏகாந்த சேவையில் பக்தர்களை அனுமதித்து சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஏழுமலையானுக்கு ஓய்வு அளித்து வந்த தேவஸ்தானம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏகாந்த சேவையை தனிமையில் நடத்தி வருகிறது.

இதன் மூலம் ஏழுமலையானுக்கு தற்போது ஒரு நாளில் ஒன்றரை மணிநேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில சேவைகளில், ஆனிவார ஆஸ்தானம், உகாதி ஆஸ்தானம், குபேரனிடம் வட்டி செலுத்தும் உற்சவம், வருடக் கணக்கு சமர்ப்பித்தல் போன்றவற்றில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்வர். அடுத்து திருமலையில் மிகப்பெரிய உற்சவமான வருடாந்திர பிரம்மோத்ஸவம்.

திருமலையில் பிரம்மோத்ஸவம் என்றால், திருமலையில் கால் பதிக்க இடம் இல்லாத அளவில் பக்தர்கள் நிரம்பி வழிவர்.

பின், ஏழுமலையானுக்கு தங்கள் பாசுரங்களால் சேவை சாதிக்கும் ஆழ்வார்களின் உற்சவங்கள், ஏழுமலையானுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்களின் உற்சவங்கள், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க நீராடல் உற்சவங்கள், வேட்டையாட பார்வேட்டை உற்சவம், வனபோஜனம், தெப்போற்சவம் என பல உற்சவங்கள் திருமலையில் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இது மட்டுமல்லாமல், தாயாருக்கும், பெருமாளுக்கும் இடையே நடைபெறும் ஊடலைக்கூட உற்சவமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

பின், ஏழுமலையான் திருமலையில் தடம் பதித்த தினம், நித்திய பூஜைகளில் நடைபெறும் தோஷங்களை போக்கும் பவித்ரோத்ஸவம் என தினம் தினம் விழாக்கோலம் பூணும் திருமலையில் உற்சவங்களுக்கு அளவில்லை.

திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைத்து நாட்களிலும் ஏதாவதொரு உற்சவத்தை தரிசிக்கும் வகையில் பல்வேறு உற்சவங்களை திருமலையில் தேவஸ்தானம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.