மகேசனை மனதார பூஜிக்க வேண்டிய நாள்: இன்று பிரதோஷம்
சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.


சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்களைப் பிரதோஷ தினங்களாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.
பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பர். அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசும் நெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, அறுகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ கால அபிஷேக முறையில் பால் அபிஷேகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும். அத்துடன் தாய்மார்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு முறையாகக் கோயிலை ஒருமுறை வலம் வந்து, பிறகு அக்குடங்களில் உள்ள
பாலைக் கொண்டே அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். மேலும், ஈசனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், தேவியுடன் கூடிய சந்திரசேகர சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து, கோயிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றில் திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும். சிவபுராணம் சொல்லி வலம் வருவதும் சிறப்பு.
சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் மூன்றாவது சுற்று வரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டைப் பூத நிருத்த வழிபாடு என்று கூறுவர். அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகைத் தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...