Enable Javscript for better performance
வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) – திருச்செந்தூர்- Dinamani

சுடச்சுட

  

  வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 2. திருச்செந்தூர்

  Published on : 23rd October 2017 03:09 PM  |   அ+அ அ-   |    |  

  thiruchendur6


  முருகனின் அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.

  மிக அரிதாக, முருகப் பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். இது, திருச்சீரலைவாய் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது.

  திருநெல்வேலியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோயில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் அறுநூறு கி.மீ. தொலைவில் உள்ளது.

  130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. 

  சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், இரண்டாயிரம் ஆண்டுகள்வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது.

  இந்த சிவலிங்கம், கோவிலின் மூலஸ்தானத்துக்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது.

  இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. 
  பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.

  தல அருமை

  தங்களைத் தொந்தரவு செய்த சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப் பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.

  இவ்வேளையில், முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப் பெருமான், இவ்விடத்தில் தங்கினார். இவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்துகொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை.

  பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.

  முருகன், சூரனை வெற்றிபெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’* (ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’என மருவியது.

  தலச்சிறப்பு
  முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது. பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளன.

  இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்புச் சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும்.

  கடலில் குளித்துவிட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.

  சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படை வீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை ”ஸ்கந்த புஷ்கரணி” என்று அழைக்கிறார்கள்.

  திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து, அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் நூற்று இருபது அடி நீளத்தையும் என்பத்து ஆறு அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், நூற்று இருபத்து நான்கு தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கிவிட்டுச் செல்கிறார்கள்.

  தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள்.

  இந்த மண்டபத்துக்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன், சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன்பிறகு, அவருடைய அபார சக்தியை அறிந்துகொண்ட இடும்பன், சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான்.

  இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர், ஆறு படை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.

  கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒரு கையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார்.

  இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்டு துவாரபாலகர் வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் (பஞ்ச லிங்கங்கள்) காணலாம். இங்கு வரும் பக்தர்கள், தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. 

  ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதரின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.

  சிறப்புப் பூசைகள்

  முருகன் கோவிலில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் இங்கும் கொண்டாடப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

  இங்குதான், சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்ததாகச் சொல்லப்படுவதால் இங்கு கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

  ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. இந்த நாளில்தான் விழா நடத்தப்பட வேண்டும் என்று கந்தோத்ஸ்தவ விதிப்படலம், கவுசிகப் பிரச்ன குமார தந்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  முருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று வகையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

  ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபடுவது வார விரதம்.

  ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும் மாத விரதம் அல்லது நட்சத்திர விரதம்.

  ஐப்பசி மாதம் சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம் ஆண்டு விரதமாகும்.

  இந்த சஷ்டி விரதமிருப்பது மிகச்சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.

  திருவிழா

  பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி ஆகிய விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில், சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

  ஆனால், திருச்செந்தூரில் கந்த சஷ்டி முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

  சஷ்டி யாகம்

  திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்துக்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

  குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.

  ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

  கண்ணாடிக்கு அபிஷேகம்

  ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிராகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள்.

  போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும்விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப் பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். வேல் குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.


  தெய்வானை திருக்கல்யாணம்

  சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

  அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

  சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்துகொள்ளவேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்துகொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

  முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

  கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்துகொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

  மும்மூர்த்தி முருகன்

  முருகப் பெருமான், சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்துகொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்.

  இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

  விழாவின் ஏழாம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாளான எட்டாம் நாளன்று அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

  பக்தர்கள் செல்லமுடியாத கோபுர வாசல்

  திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

  முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

  நான்கு உற்சவர்கள்

  பொதுவாக, கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், “மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார்.

  சந்தனமலை

  முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்ததுபோலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில், கடற்கரையில் இருக்கும் “சந்தனமலை’யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “கந்தமாதன பர்வதம்’ என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்துவிட்டது.

  தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்றுபோல புடைப்பாக இருப்பதை இப்போதும் காண முடியும்.

  குரு பெயர்ச்சியா இங்கே வாங்க..

  திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார். அசுரர்களை முருகன் அழிக்கும் முன்பு, அசுரர்களை பற்றிய வரலாறை குருபகவான் இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், “குரு தலமாக’ கருதப்படுகிறது.

  பிராகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, “ஞானஸ்கந்த மூர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார்.

  குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

  இரண்டு முருகன்

  சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

  இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

  பஞ்சலிங்க தரிசனம்

  முருகப்பெருமான், சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

  சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.

  சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

  கங்கை பூஜை
  தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, “கங்கை பூஜை’ என்கின்றனர்.

  இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப் பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

  தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

  நரகாசுரனை மகாவிஷ்ணு அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம்.

  திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. தீபாவளியன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டுசென்று அணிவிக்கின்றனர்.

  இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள்.

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் – பாடியவர் பாலசந்திரன்

  - கோவை கு. கருப்பசாமி

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp