
2009 - மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! விழாக்கோலம் பூண்ட மதுரை நகரம்!!
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய குடமுழுக்கு நிகழ்வைப் பற்றி...

கும்பாபிஷேத்தையொட்டி புதுப் பொலிவுடன் ஜொலிக்கும் அருள்மிகு மீனாட்சி தங்ககோபுர விமானம் - பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம் - தினமணி கருவூலத்திலிருந்து...
மதுரை, ஏப். 8- 2009 ஆம் ஆண்டில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு எவ்வாறு நடந்தது? தினமணியின் பக்கங்களிலிருந்து:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 12 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டு, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட நீரைக் கலசங்களில் வைத்து அதில் பூஜை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 6 ஆம் தேதி காலையில் கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பத்ரகாளியம்மன் உள்ளிட்ட 16 சன்னதிகளுக்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 12 கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நிறைவுற்றன. இதையடுத்து யாகசாலையில் இருந்து அம்மன், சுவாமி கோபுர விமானங்கள், வெளிக் கோபுரங்களுக்கான யாகசாலை கும்ப கலசங்களின் புறப்பாடு நிகழ்ச்சி காலை 6 மணிக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்கு கோபுரங்களை கலசங்கள் அடைந்தன.
அதன்பின் கும்பங்களிலிருந்து சக்தியைக் கலசங்களுக்கு சம்யோஷனம் செய்யும் வகையிலான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. புனித நீர் கும்பங்களிலிருந்து மாலை, வஸ்திரங்கள் கோபுர கும்பங்களுக்கு சாற்றப்பட்ட நிலையில் காலை 9.15 மணிக்கு அம்மன், சுவாமி, தங்கக்கோபுர விமானக் கலசங்கள் மற்றும் கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு நன்னீராட்டு நடைபெற்றது.
புனிதநீர் ஊற்றப்பட்டபோது கோயில் மேல்தளத்திலும், சித்திரை வீதிகளிலும் கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' என்று எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. சுழல் குழாய்கள் மூலமும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அருள்மிகு மீனாட்சியம்மன் மூலவருக்கும், காலை 9.45 மணிக்கு சுந்தரேசுவரர் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்மன், சுவாமி நான்கு மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வியாழக்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது.
திரண்ட பக்தர்கள்: கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு பாஸ் பெற்றவர்கள் ஆவணி மூல வீதியிலிருந்து சித்திரை வீதிகளுக்கு 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனையிடப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். இதனால் நீண்ட வரிசையில் நின்றுதான் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று பின் மேல்தளத்துக்கு செல்ல முடிந்தது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த பக்தர்களிடம் போலீஸார் மென்மையாகவும், கெடுபிடி இல்லாமலும் நடந்துகொண்டதை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

கும்பாபிஷேகத்தைக் காண மீனாட்சி தங்கக் கோபுர விமானம் முன் திரண்டிருந்த பக்தர்கள் - தினமணி கருவூலத்திலிருந்து...
விழாக்கோலம் பூண்ட மதுரை நகரம்
கோயில் மேல்தளத்திலிருந்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்தவர்களுக்கு, 9 வண்ணங்களில் சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. பாஸ் பெறாதவர்கள் 3 சித்திரை வீதிகளில் நிற்கவும், காலை 10 மணிக்கு மேல் கோயிலுக்குள் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.
புதன்கிழமை காலை முதல் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து மீனாட்சியம்மன் கோயிலை நோக்கி மக்கள் வந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டமாக காணப்பட்டது. வாகனங்களை ஆவணி மூல வீதியில் நிறுத்த பாஸ் வழங்கப்பட்டிருந்தது. மேலும், மாசி வீதிகளில் போலீஸார் தடுப்பை ஏற்படுத்தி, பாஸ் ஒட்டிய வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். ஆவணி மூல வீதிகளில் 9 இடங்களில் மெட்டல் டிடெக்டர்களை அமைத்து, பாஸ் உள்ளோரை சோதித்து சித்திரை வீதிகளுக்கு அனுமதித்தனர்.

தினமணி கருவூலத்திலிருந்து...
பக்தர்கள் கொண்டு வந்த பைகள், தண்ணீர் பாட்டிலை போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் கொண்டுவந்த கைப்பை, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருள், தண்ணீர் பாட்டில்களை போலீஸார் அனுமதித்தனர். சித்திரை வீதிகளில் கோயில் வளாகத்தைச் சுற்றி தடுப்பு கம்புகள் அமைத்து, வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. அதன் வழியே பக்தர்களை வரிசையாகச் செல்ல வைத்தனர்.
கோயில் மேல்தளத்தில் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புகள் மூலம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுப் பக்தர்கள் அமர வைக்கப்பட்டனர். கோபுர வாசல்களில் கேரள செண்டை மேளம், கொம்பூதி சாதனம் உள்ளிட்ட பழமையான இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. தேவாரம் உள்ளிட்ட வேத பாராயண பாடல்களும் ஒலித்தன. கும்பாபிஷேகத்துக்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னதாக, கோயில் கோபுரங்களின் மீது கருடன் சுற்றிவந்தது. இதைக் கண்ட தும் பக்தர்கள் பரவசத்துடன் அரோகரா கோஷத்தை எழுப்பினர்.
காலையில் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெப்பம் இன்றி காற்று வீசியது. இது பக்தர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அம்மன் சன்னதி கோபுர விமான பகுதியில் இருந்த கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து தி. கண்ணன் பச்சைக் கொடி காட்ட காலை 9.15 மணி முதல் 9.17 மணிக்குள் அனைத்து கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை பொதிகை, தனியார் தொலைக்காட்சியினர் நேரடி ஒளிபரப்புச் செய்தனர். மதுரை வானொலியில் நேர்முக வர்ணனை செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடம் சுவாமிகள், மதுரை ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் அம்மன் சன்னதி கோபுர விமானப் பகுதியில் அமர்ந்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் நிகழ்ச்சிகளை படம்பிடித்து அங்கிருந்தோரிடம் விளக்கம் கேட்டனர்.
அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ஆ. தமிழரசி, மதுரை மேயர் கோ. தேன்மொழி, கோயில் நிர்வாக அலுவலர் க. ராஜநாயகம், போலீஸ் ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மாநகர் போலீஸ் கமிஷனர் கே. நந்தபாலன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். கற்பக குமாரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகம் நிறைவுற்ற நிலையில் புனிதநீர் தலையில் படவும், சிவாச்சாரியார்கள் வீசிய பூக்களைப் பெறவும் பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
கோயிலுக்குள்ளிருந்து பக்தர்கள் ஒரேநேரத்தில் வெளியேற முயன்றதால், வடக்கு கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து வெளியேறிய பக்தர்களுக்கு நீர்மோர், பொங்கல், விசிறி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற கடைகள், மார்க்கெட் உள்ளிட்டவை மதியம் வரை மூடப்பட்டிருந்தன. மாசி வீதிகள், வெளி வீதிகளிலும் பகல் 10 மணிக்கு மேலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
[2009 - ஏப். 9 தேதியிட்ட தினமணி நாளிதழிலிருந்து]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








