1995 - ஸ்ரீ மீனாட்சி கோவில் மகா கும்பாபிஷேகம்: வெள்ளம் போல் பக்தர் கூட்டம்!

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய குடமுழுக்கு நிகழ்வைப் பற்றி...

1995 - ஸ்ரீ மீனாட்சி கோவில் மகா கும்பாபிஷகம் - தினமணி கருவூலத்திலிருந்து...

Published On :

1974- ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கிற்குப் பிறகு 21 ஆண்டுகள் கழித்து, நீண்ட இடைவேளைக்குப் பிறகுதான், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் குடமுழுக்கு 1995-ல் நடைபெற்றது.

குடமுழுக்கு கோலாகலமாக எவ்வாறு நடந்தது? தினமணியின் பக்கங்களிலிருந்து:

மதுரை, ஜூலை 7 - மூர்த்தி, தலம், தீர்த்தம் -இந்த மூன்றிலும் ஒப்புயர்வில்லாத மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் அஷ்டபந்தன, சுவர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9.02 மணிக்கு வேதகோஷங்கள், மங்கள இசை முழங்க, லட்சோப லட்சம் பக்தர்களின் பக்திப் பெருக்குடன் சிறப்பாக நடந்தேறியது.

கோவில் மாநகரான நான்மாடக் கூடலின் எழில்கூட்டும் வானளாவிய 12 கோபுரங்களிலும் ஸ்ரீ மீனாட்சி அம்மன், ஸ்ரீ சுந்தரேசுவரர் குடிகொண்டுள்ள கருவறைகள் மீதுள்ள தங்க விமானங்களிலும் ஆகம முறைப்படி இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த வைபவத்தை, தேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வெள்ளம் போல் திரண்டு வந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர். காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தின்போது, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று நாடி வந்த லட்சக்கணக்கான பக்தர்களை வருத்தக் கூடாது என்று கருதிய காலைக் கதிரவன் இளங் கருமுகில்களிடையே தஞ்சம் புகுந்துகொண்டான். இந்தப் பெருந்தன்மைக்கு ஏற்ப, வருண பகவானும் கருணைகொண்டு தன் பங்குக்குச் சாரல் போன்ற தூறல் மூலம் அபிஷேகம் செய்தான்.

கோவிலின் மேல்தளம், உள்புறம் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் அனைத்திலும் வியாழன் நள்ளிரவு முதலே மக்கள் குழுமியிருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை நடந்தது. இதில் சுமார் 200 சிவாச்சாரியர்கள், ஏராளமான வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டனர். சி.எம்.எஸ். சண்முகசுந்தரப் பட்டர், தெய்வசிகாமணிப் பட்டர், தங்கம் பட்டர், முத்துப் பட்டர், சுவாமிநாதப் பட்டர். மாணிக்கசுந்தரப் பட்டர், சின்னச்சாமி பட்டர், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் மேற்பார்வையில் இந்த கும்பாபிஷேகப் பணிகள் நடந்தேறின.

எட்டாம்கால யாக பூஜைக்குப் பின் ஸ்பரிச ஆஹுதி வைபவம் நடைபெற்றது. இது சுவாமிக்கும், மூர்த்திக்கும், கும்பத்துக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வைபவம் ஆகும். இது 3 தத்துவங்களையொட்டி, மும்முறை நடந்தது.

அதன்பின், மகாபூர்ணாஹுதி வைபவம் நடைபெற்றது. காசி, ராமேஸ்வரம், ஹரித்வார், அலகாபாத், குற்றாலம், அழகர் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்தும்; வைகை, காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்தும் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் - 12 கோபுரங்களின் மீதும், இரண்டு விமானங்கள் மீதும் அபிஷேகம் செய்யப்பட்டது.

காலை 9.02 மணிக்கு தங்க விமானத்திலிருந்து பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் கனகய்யா பச்சைக்கொடி காட்டியவுடன், அனைத்துக் கோபுரத்திலும் விமானங்களிலும் ஒரேநேரத் தில் கும்பாபிஷேக வைபவம் தொடங்கியது.

மதுரை ஆதினகர்த்தர், மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா, அமைச்சர்கள் எஸ்.டி. சோமசுந்தரம், பரமசிவம், சத்தியமூர்த்தி, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் நடேசன் பால்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, ராஜன் செல்லப்பா, துளசி அய்யா வாண்டையார், முத்துமணி, தமிழக காவல்துறை இயக்குநர் வைகுந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் இரா. சம்பத், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான நன்கொடையாளர்கள் அம்மன் சன்னதியின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பகுதியில் அமர்ந்து கும்பாபிஷேகத்தைத் தரிசித்தனர்.

கும்பாபிஷேகத்துக்குப் பின், சுவாமிக்கும் அம்மனுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில டி.ஜி.பி. வைகுந்த், மாவட்ட ஆட்சியர் சம்பத் மற்றும் கோவில் அறங்காவல் குழுவினர், நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்ததால் பக்தர்கள் எந்த இடையூறுமின்றி தரிசனம் செய்ய முடிந்தது.

பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகராட்சி சில இடங்களில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்திருந்தது. ஏராளமான தன்னார்வ அமைப்புகள் பக்தர்களுக்கு பிரசாத பொட்டலங்களையும், குடிநீர், மோர் பாக்கெட்டுகளையும் விநியோகித்தன. வெள்ளியன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

கட் அவுட்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வருகை கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. என்றாலும் அ.தி.மு.க.வினர் நகரின் சில பகுதிகளில் முதல்வரின் கட்-அவுட்டுகளை வைத்திருந்தனர். பக்தர்களை வரவேற்று பல இடங்களில் முதல்வர் படம் வரையப்பட்ட போர்டுகளும் வைத்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தைக் காண தென்னாப்பிரிக்காவிலுள்ள மீனாட்சியம்மன் கோயில் தலைவர், கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பக்தர்கள் சிலரும் அங்குள்ள ஹிந்து கோயில் நிர்வாகிகளும் வந்திருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலுக்கு முன்னதாக வந்த ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் சாவர்க்கர், காவல் துறை இயக்குநர் வைகுந்த் மற்றும் அதிகாரிகள் கும்பாபிஷேக ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை அளிக்கப்பட்டிராத அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை கோவிலில் ஒவ்வொரு பகுதியிலும் கணிசமான அளவு போலீசார் பணியமர்த்தப்பட்டு வரும் பக்தர்கள் சென்று வர வசதி செய்தளித்தனர்.

முக்கிய பிரமுகர்கள்கூட மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்ட வாசலைக் கடந்தே சென்றனர். புனித நீர் கொண்டு வந்த சிவாச்சாரியார்கள் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் கலசங்களுக்குத் தீபாரதனை செய்யப்பட்டது.

[1995 - ஜூலை 8 தேதியிட்ட தினமணி நாளிதழிலிருந்து]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.