மாங்கல்ய தோஷம் நீக்கும் இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் திருக்கோயில்

அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீசுவரர் சுவாமி திருக்கோயில்,  மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாக திகழ்கிறது.
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீசுவரர் சுவாமி
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீசுவரர் சுவாமி
Published on
Updated on
5 min read

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், இடையாற்றுமங்கலத்திலுள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீசுவரர் சுவாமி திருக்கோயில், மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாகத்   திகழ்கிறது.

திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் லால்குடி சாலையில் வாளாடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், லால்குடி ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இடையாற்றுமங்கலம்.
 

இடையாற்றுமங்கலம் அருள்மிகு மாங்கலீசுவரர் உடனுறை
                       மங்காளாம்பிகை அம்மன் திருக்கோயில் நுழைவுவாயில்.


தலச் சிறப்பு

மாங்கல்ய மகரிஷி என்பவர் இக்கோயிலில் சிவபெருமானை நோக்கிக்  கடுந்தவம் புரிந்து காலையிலும், மாலையிலும் சிவபூஜைகள் செய்து வழிபட்டார். அவருக்காக சிவபெருமான் திருக்காட்சி தந்தருளியுள்ளார். மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க, திருமணப் பாக்கியம் வேண்டி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த வரத்தை இங்குள்ள ஈசுவரன்  தந்தருளுவதாக நம்பிக்கை.

இக்கோயிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி  காட்சியளிக்கிறார். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின்  திருமணத்தில் மாங்கல்யதாரண பூஜையை நிகழ்த்தியவர் மாங்கல்ய மகரிஷி. இவரது தவவலிமை அனைத்தும் அவரது உள்ளங்கையில் அடங்கியிருந்ததாம். மாலைகளில் தங்கி வானில் பறக்கும்  அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவர் குரு.
 

தனி சன்னதி கொண்டுள்ள மாங்கல்ய மகரிஷி.
தனி சன்னதி கொண்டுள்ள மாங்கல்ய மகரிஷி.

பொதுவாக  சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில் மாங்கல்யத்துடன்  மாலைகளில் பறப்பது போன்ற தேவதைகளை பார்த்திருப்போம். அந்த தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை மாங்கல்ய மகரிஷி அருளுகிறார் என்பதும் ஐதீகம். 

திருமணத்துக்கான சுபமுகூர்த்த நேரம் அமிர்தநேரம் என்பார்கள். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல், சூட்சும வடிவில் இடையாற்றுமங்கலத்திலுள்ள மாங்கலீசுவரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வாராம்.

கோயில் வரலாற்றை விளக்கும் பாடல்.
கோயில் வரலாற்றை விளக்கும் பாடல்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்

இந்தக் கோயிலில் தனி சன்னதி கொண்டுள்ளவர் மாங்கல்ய மகரிஷி. அவரது நட்சத்திரம் உத்திரமாகும்.  பொதுவாகவே உத்திர நட்சத்திரம் என்பது  மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனாலேயேதான் பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திரத்தன்று தெய்வங்களுக்குத் திருமண  வைபவங்கள் நடந்திருக்கின்றன  என்கிறது புராணம்.

அருள்மிகு மாங்கலீசுவரர் சன்னதி கோபுரம்.
அருள்மிகு மாங்கலீசுவரர் சன்னதி கோபுரம்.

உத்திர நட்சத்திரத்தன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ உத்திர நட்சத்திரக்காரர்கள் இடையாற்றுமங்கலம் கோயிலுக்கு வந்து, மாங்கல்ய  மகரிஷி, மாங்கலீசுவரர் - மங்களாம்பிகையை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில்  நடந்தேறும்.

மேலும்  உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், இன்னல்கள் அகலவும்,  தங்கள்  நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு  வந்து  சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை மனமுருகப்  பிரார்த்தனை செய்து சென்றால், தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

இறைவன்  மாங்கலீசுவரர்

கருவறையில் காட்சியளிக்கும் அருள்மிகு மாங்கலீசுவரர்
கருவறையில் காட்சியளிக்கும் அருள்மிகு மாங்கலீசுவரர்


இக்கோயிலில் காட்சியருளும் இறைவன் மாங்கலீசுவரர்  சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி  எழுந்தருளியுள்ளார். இங்கு இறைவனை வணங்கியவாறு மிகப் பெரிய நந்தி அமைந்துள்ளது. மாங்கல்ய தோஷத்தைப் போக்கி, திருமணப் பாக்கியத்தை தந்தருளும் இறைவனாக மாங்கலீசுவரர் எழுந்தருளியுள்ளார்.

இறைவி  மங்களாம்பிகை

அருள்மிகு மங்காளம்பிகை அம்மன்.
அருள்மிகு மங்காளம்பிகை அம்மன்.

பெரும்பாலும் கோயில்களில் இறைவி (அம்மன்) கிழக்கு நோக்கியவாறு   எழுந்தருளியிருப்பார்.  ஆனால்,  இடையாற்றுமங்கலம் கோயில் இதிலிருந்து  சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இக்கோயிலில் இறைவி மங்களாம்பிகை  தெற்கு நோக்கியவாறு காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது, அதிக  அதிகாரமுடையது என்பதாகும். இதனாலேயே இக்கோயிலில் நுழைந்தவுடன் நாம் தரிசனம் செய்வது அருள்மிகு மங்களாம்பிகை அம்மனைத்தான்.

பிரதட்சிணம் செய்ய இயலாத நவக்கிரகங்கள்

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் பிரதட்சிணமாக வந்து வழிபடும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் இதிலிருந்து மாறுபட்டிருக்கும்.

உதாரணமாக திருப்பைஞ்ஞீலி  ஞீலிவனேசுவரர் உடனுறை விசாலாட்சி அம்மன் திருக்கோயில் எமதர்மராஜனுக்கு அதிகாரம் வழங்கிய கோயில் என்பதால், அங்கு நவக்கிரகங்கள் விக்கிரகங்களாக இருப்பதில்லை. மாறாக 9 குழிகளும் 9 நவக்கிரகங்களாக  கருதப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறது.

மாங்கலீசுவரர் திருக்கோயிலில் உள்ள நவக்கிரகம்
மாங்கலீசுவரர் திருக்கோயிலில் உள்ள நவக்கிரகம்

அதுபோல,  இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் திருக்கோயிலில்  நவக்கிரகத்தை நாம் பிரதட்சிணம் செய்ய முடியாது. வணங்கி வழிபடத்தான் முடியும். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

பொதுவாக கோயில்களில்  உள்ள நவக்கிரகங்களில் சூரியபகவான் கிழக்கு நோக்கிதான் எழுந்தருளியிருப்பார். ஆனால், இக்கோயிலில் அவர் இறைவனை வணங்கியவாறு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இதற்கு சூரிய பிரதிஷ்டை என்று பெயர். இவ்வாறு நவக்கிரகம் அமைந்திருப்பதும், அதை வணங்குவதும் சிறப்புக்குரியதாகும்.

அருள்மிகு மங்களாம்பிகை அம்மன் உடனுறை மாங்கலீசுவரர்,
                   மாங்கல்ய மகரிஷி

ஒரே சன்னதியில் மூவர்

பொதுவாக சிவாலயங்களில்  விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, பிச்சாடனார், அர்த்தநாரீசுவரர், துர்க்கை, சண்டிகேசுவரர், சண்டிகேசுவரி போன்ற தெய்வங்கள் கோயில் பிரகாரங்களில்  எழுந்தருளியிருப்பர்.

ஒரே சன்னதியிலுள்ள அருள்மிகு பிச்சாடனார், அர்த்தநாரீசுவரர், தெட்சிணாமூர்த்தி.
ஒரே சன்னதியிலுள்ள அருள்மிகு பிச்சாடனார், அர்த்தநாரீசுவரர், தெட்சிணாமூர்த்தி.

ஆனால் இத்திருக்கோயிலில் ஒரே சன்னதிக்குள் 3 தெய்வங்கள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.  அருள்மிகு  பிச்சாடனார், அர்த்தநாரீசுவரர், தட்சிணாமூர்த்தி  என மூன்று தெய்வங்கள் எழுந்தருளி, காட்சியளிப்பது சிறப்புக்குரியது.  

அருள்மிகு வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணியர்.
அருள்மிகு வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணியர்.

இதைத் தவிர கோயில் வளாகத்தில் அருள்மிகு விநாயகர், வள்ளி -  தெய்வசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதிகளும்,  துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர் போன்ற தெய்வங்களும் இங்கு காட்சியளிக்கின்றனர்.

பரிகாரம்

தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய் விளக்கேற்றி, மாலை சாத்துபடி செய்து அவரின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட வேண்டும்.

அதேபோல  அருள்மிகு மங்களாம்பிகை அம்மனுக்கும், மாங்கலீசுவரருக்கும் விளக்கேற்றி, மாலை சாத்துபடி செய்து வழிபட விரைவில் திருமண வரன் தேடி வரும்.  திருமணம் உறுதியான பின்னர் கோயிலுக்குத் திருமண  அழைப்பிதழுடன் வந்து சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்கு அழைப்பிதழை வைத்து  பிரார்த்திக்க வேண்டும்.

அருள்மிகு மாங்லீசுவரர் சன்னதி முன்பு பெரிய நந்தி.
அருள்மிகு மாங்லீசுவரர் சன்னதி முன்பு பெரிய நந்தி.

திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, அவர்களைத் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதும்  இத்திருக்கோயிலுக்குரிய தனிச்சிறப்பாகும்.

திருமணம் முடிந்த பின்னர் தம்பதி சகிதமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டும். மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் மணமக்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவது தொடர்ந்து வருகிறது.

உத்திர நட்சத்திரத்தன்று கன்னிப்பெண்கள் இக்கோயிலிலுள்ள  சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கலப் பொருள்களை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி, வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விலகி, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது பெரும் நம்பிக்கை. இதனை உத்திர நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே வெளிப்படுத்துகிறது.

கோயிலுக்கு வெளியிலுள்ள அரசமரம்.
கோயிலுக்கு வெளியிலுள்ள அரசமரம்.

திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் கோயிலாக மட்டுமல்லாது,  குடும்ப ஒற்றுமை, உடலில் கால்வலி குணமடைய வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை திருக்கோயிலாகவும் திகழ்கிறது. மேலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இங்கு பிரார்த்தனை மேற்கொள்ளலாம்.

திருவிழாக்கள்

விநாயகர்
விநாயகர்

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி,  புரட்டாசியில் நவராத்திரிப் பெருவிழா, கார்த்திகையில் திருக்கார்த்திகை  தீபம், மார்கழியில் திருவாதிரைப் பெருவிழா, தை மாதத்தில் சங்கராந்தி,  பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு  சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  பங்குனி உத்திரத்தன்று உத்திர நட்சத்திரக்காரர்கள் ஏராளமானோர் கோயிலில் குவிந்து வழிபாடு நடத்துவர். இவை தவிர ஆடி, தை வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

விரைவில் குடமுழுக்கு

கடந்த 08-03-1990 மற்றும் 01.06.2006 ஆகிய தேதிகளில் இக்கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா நடத்தப்பட்டுள்ளது. குடமுழுக்கு நிகழ்ந்து 15 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நந்தி பகவான்
நந்தி பகவான்

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

நாள்தோறும் காலை 9  மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படி செல்வது?

பேருந்துகளில் வருவோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் இடையாற்றுமங்கலத்துக்கு வரலாம்.

சென்னை போன்ற வடக்கு  மாவட்டங்களிலிருந்தும், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்தும், மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள், கார், வேன்களில் வருவோர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட் வந்து லால்குடி சாலையில் வாளாடி வந்து, பச்சாம்பேட்டை வளைவு வழியாக திருமணமேடு, பெரியவர்சீலி, மயிலரங்கம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

ரயில் மூலம் வருவோர்கள் பயணிகள் ரயிலில் வந்தால் லால்குடி ரயில்  நிலையம் வந்து, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கோயிலுக்கு ஆட்டோக்கள் மூலம் வரலாம்.  

ரயிலில் வருவோர்கள்  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்தும், விமானம் மூலம் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்தும் கோயிலுக்கு கார் மூலம் வரலாம்.

அருள்மிகு துர்க்கை அம்மன்
அருள்மிகு துர்க்கை அம்மன்

தொடர்புக்கு
இக்கோயிலுக்கு வருபவர்கள்  எச். சீனிவாச குருக்களை 98439 - 51363 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோயில் முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீசுவரர் திருக்கோயில்,
இடையாற்றுமங்கலம்,
லால்குடி வட்டம்,  திருச்சி மாவட்டம்

படங்கள் : எஸ். அருண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com