நட்சத்திர, கிரக தோஷங்கள் நீக்கும் நகர் அப்ரதீசுவரர் திருக்கோயில்

கோள்கள் வந்து வழிபட்டுச் சென்றதால் நட்சத்திர, கிரக தோஷம்  போக்கும் பரிகாரத் தலம், குழந்தைப்பேறு அருளும் தலம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலம்...
அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர்.
அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர்.


குழந்தைப்பேறு அருளும் நகர் அப்ரதீசுவரர் திருக்கோயில், கோள்கள் வந்து வழிபட்டுச் சென்றதால் நட்சத்திர, கிரக தோஷம்  போக்கும் பரிகாரத் தலம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது, திருச்சி மாவட்டத்தில் நகர் கிராமத்திலுள்ள அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர் திருக்கோயில்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மாந்துறை அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலில், காலசந்தி பூஜையின்போது சூரியனுக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின்னரே  இங்குள்ள இறைவன், இறைவிக்கு தீபாராதனை காட்டப்படும் முறை இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

நகர் அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர் திருக்கோயில்
நகர் அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர் திருக்கோயில்

இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் காணப்படுகின்றன.  கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பதும்  தனிச்சிறப்பு.

தல புராணம்

வானில் புவி ஈர்ப்புக்கு அப்பாற்றப்பட்ட இடத்தில் பீதாம்பர யோக நிலையில் தேவி (அம்பிகை)  தவமிருந்தாள் என்பதை அறிந்து பிரபஞ்சத்தின் அனைத்துக்  கோள்களும் நட்சத்திரங்களும் திருக்கோயிலை வலமாகவும் இடமாகவும் வலம் வரலாயின.  அவ்வாறு தேவி தவமிருந்த திருக்கோயில்தான் லால்குடி வட்டம், நகர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த அப்ரதீசுவரர் திருக்கோயில்.

கோயிலின் உள் திருச்சுற்று
கோயிலின் உள் திருச்சுற்று

மலை, காடு, நதியோரம், குடில், மரநிழல் போன்ற இடங்களில்தான்  தேவர்களும் முனிவர்களும் தேவியர்களும் தவமிருந்ததாகப் புராணங்களிலும் தல வரலாறுகளிலும் கூறப்பட்டிருக்கின்றன.  ஆனால் வானில் புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட இடத்தில் தேவி தவமிருந்தாள் என்ற அபூர்வமான தகவலைக் கொண்டது அருள்மிகு அப்ரதீசுவரர் திருக்கோயில் தல புராணம்.

ஒரு நேரத்தில் அம்பிகை ஏகாந்தமாகத் தவமிருக்க விரும்பினாள். அதற்கான இடத்தைத் தேடியவள், அதுவரை யாரும் தவமிருந்திராத ஓர் இடத்தைத் தேர்வு செய்தாள். புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட  பீதாம்பர யோகம் என்ற நிலையில், பூமிக்கு மேல் குறிப்பிட்ட உயரத்தில் மிதந்தவாறு அசலன யோகம் என்ற அசைவற்ற யோக நிலையில் சர்வேசுவரனை நோக்கித் தவமிருக்கத் தொடங்கினாள் அம்பிகை. அவ்வாறு தவமிருக்கத் தொடங்கிய இடம்தான் நகர்.

அதை அறிந்ததும் யோக மாயையான அன்னையின் சக்தியால் இயங்கும் பிரபஞ்சத்தின் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும்  நகர் கிராமத்திலுள்ள திருக்கோயிலை வலமாகவும் இடமாகவும் வலம் வரலாயின.

கோயில் தெப்பக்குளம்
கோயில் தெப்பக்குளம்

அசலனத் தவத்திலிருந்து நவமி திதி நாளில் அம்பிகை மீண்டாள். அப்போது அத்திருக்கோயிலில் சூரிய, சந்திரக் கிரகங்களும் கோடானுகோடி நட்சத்திரங்களும் அப்பிரதட்சிணமாக (வல, இடமாக) வலம் வந்து இறைவனை வணங்குவதைக் கண்டு அதிசயித்தாள் அம்பிகை.

இத்தலத்துக்கும் சென்றுவரலாம்.. திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேசுவரர் கோயில்

சகலமும் ஒன்றாக வலம் வர அந்த இடத்தில் இருக்கும் இறைவனின் விசேஷமான சுயம்பு வடிவே காரணம் என்பதை ஞானப்பூர்வமாக உணர்ந்தாள்.  இதைத் தொடர்ந்து, இறைவனைக் கோடானுகோடி சொர்ண வில்வத்தால்  பூஜிக்கத் தொடங்கினாள் அன்னை.  இதனால் மகிழ்ந்த சர்வேசுவரன் சுயம்பு லிங்க மூர்த்தியாகத் தோன்றி, அம்பிகையின் சலனமற்ற யோக நிலையை வாழ்த்தி அருளினார்.

உள்பிரகாரம்
உள்பிரகாரம்

மானுட வடிவில் சலனம் ஏதுமில்லா நிலையில் அம்பிகை தியானம் இருந்ததால், அம்பிகைக்கு அதுலசுந்தரி என்கிற மரகதவல்லி அம்மன் என்ற பெயர் வந்தது. அதுல்ய சுந்தரி அம்மன் என்றும் இத்திருக்கோயில் இறைவி  அழைக்கப்படுகிறார். அதுல்ய என்றால் அழகானவள் என்ற அர்த்தமாகும்.

அம்பிகை யோக நிலையில் தவமிருந்து, இறைவன்  வாழ்த்தி அருளிய திருக்கோயில்தான்  நகரிலுள்ள அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர் திருக்கோயில்.

கிரகங்கள் இங்கு ஒன்றாக நகர்ந்ததால் நகர் என்று பெயர் பெற்றது  திருக்கோயில். இங்குள்ள கல்வெட்டுகளிலும் நகர் என்ற பெயரே காணப்படுகின்றது.

இறைவன் அப்ரதீசுவரர்

நகர் அருள்மிகு அபரதீசுவரருக்கு தீபாராதனை
நகர் அருள்மிகு அபரதீசுவரருக்கு தீபாராதனை

கருவறையில் இறைவன் அப்ரதீசுவரர் அழகிய மரகத லிங்கத் திருமேனியாகக் கிழக்கு திசை நோக்கிக் காட்சியளிக்கிறார். சுயம்பு  மூர்த்தமாகும். பெரிய திரிதள விமானத்துடன் கூடிய கருவறையைக் கொண்டுள்ளது.  மூலவரின்  விமானம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது போன்று உயரமாக உள்ளது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களின்  நட்சத்திர, கிரக தோஷங்களைப்  போக்கும் ஈசுவரனாக அப்ரதீசுவரர் காட்சியளிக்கிறார்.

இறைவி  அதுலசுந்தரி

அருள்மிகு  அதுல சுந்தரி அம்மன்
அருள்மிகு  அதுல சுந்தரி அம்மன்

கோயில் உள்மண்டபத்தின் வலதுபுறத்தில் தென்திசை நோக்கி இறைவி அதுலசுந்தரி எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இந்த அம்மனுக்கு நான்கு கரங்கள். தனது மேல்கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், கீழ்க் கரங்களில் அபயவரத முத்திரை தாங்கியும், ஜடாமகுடம் அணிந்தும் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிக்கிறார்.  மானுட வடிவில் சலனம்  ஏதுமில்லா நிலையில் தியானம் இருந்ததால்,  இக்கோயில் அம்மனுக்கு அதுலசுந்தரி என்ற பெயர் வந்தது.

இரு நந்திகள் கொண்ட கோயில்

பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் முக்கிய இடத்தைப்  பெற்றிருப்பார். கருவறை சன்னதியில் அத்தலத்து இறைவனுக்கு எதிரில் நந்தியெம்பெருமான் இருப்பார். அதுபோல இந்த திருக்கோயிலிலும் நந்தி இருந்தாலும், கோயிலின் உள்மண்டபப் பகுதியில் அடுத்தடுத்து இரு நந்திகள் எழுந்தருளியிருக்கின்றனர்.

இரு நந்திகள் கொண்ட உள்பிரகாரம்
இரு நந்திகள் கொண்ட உள்பிரகாரம்

இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி காலத்தையொட்டி வரும் பிரதோஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நந்தியெம்பெருமானுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இரு நந்திகள் இருந்தாலும்,  முதல் நந்திக்கு அபிஷேகம் மட்டும்தான். இரண்டாவது நந்திக்குத்தான் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரதோஷ காலத்தில் இரு நந்திகளையும் வழிபடுவதால் இரட்டிப்புப் பலன் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். நந்தி சன்னதிக்கு  அருகிலேயே கோயில் குளமும் அமைந்துள்ளது.

மகா விஷ்ணுவுக்கு உகந்த பவளமல்லி

மகாவிஷ்ணுக்கு உகந்த பவளமல்லி
மகாவிஷ்ணுக்கு உகந்த பவளமல்லி

இத்திருக்கோயிலில்  கருவறை சன்னதியின் பின்பகுதியில் மகா விஷ்ணு எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு உகந்த பவளமல்லி, கோயில் வளாகத்திலேயே அமைந்திருப்பதும்  இத்திருக்கோயிலின் சிறப்புக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது.  

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி.
தட்சிணாமூர்த்தி.

இக்கோயிலின் தேவகோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி,   துர்க்கை ஆகியோர் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர். தட்சிணாமூர்த்திக்கு அருகிலேயே ஜடாயு முனிவரும் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி அபயஹஸ்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

சப்தகன்னிகள்

பிராம்மி,  மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி என  சப்த கன்னிகள் கோயிலின் திருச்சுற்றுப் பகுதியில் எழுந்தருளி, தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
 

திருக்கோயிலில் எழுந்தருளிய சப்தகன்னிகள்
திருக்கோயிலில் எழுந்தருளிய சப்தகன்னிகள்

இதே பிரகாரத்தில்  சித்தி விநாயகர் சன்னதி  அமைந்துள்ளது. இந்த சன்னதியில் நாக தோஷங்களைப் போக்கும் நாக கன்னியும் எழுந்தருளியுள்ளார்.  இவை தவிர கோயில் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் தென் கயிலாசநாதர்,  ஆறுமுகங்களைக் கொண்ட சண்முகநாதர் வள்ளி, தெய்வசேனா சமேதர் சன்னதி,  வட கயிலாசநாதர்,  கஜலட்சுமி சன்னதிகளும் அமைந்துள்ளன.

தோஷங்களை நீக்கும் சகஸ்ரலிங்கம்

இக்கோயிலின் தல விருட்சமாக அமைந்துள்ள மகா வில்வமரத்தின் அடியில்  பெரிய சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது. 108 லிங்கங்கள் கொண்ட லிங்கம் ஒரே சகஸ்ரலிங்கமாக இத்திருக்கோயிலில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்த சன்னதியில் அமைந்துள்ள  ஈசுவரர் ஆதி மூலவரான நகரீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
 

நகரீசுவரர் - ஸ்ரீ சகஸ்ரலிங்கம்
நகரீசுவரர் - ஸ்ரீ சகஸ்ரலிங்கம்

இந்த வில்வமரத்துக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் பூசி, புத்தாடை அணிவித்து மரத்தையும், சகஸ்ரலிங்கத்தையும்  9 முறை சுற்றி வந்து வழிபட்டால் பித்ரு தோஷமும்,  இன்னபிற தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பூஜை செய்ய வருபவர்களில் பெண்களாக இருந்தால் புடவையும், ஆண்களாக இருந்தால் வேட்டியும் வைத்து வழிபட வேண்டும்.

முள்கள் காணப்படாத வில்வமரம் 

அப்ரதீசுவரர் திருக்கோயிலின் தலவிருட்சமாக உள்ளது மகா வில்வமரம். மற்ற வில்வமரங்களில் காணப்படுவது போன்று இக்கோயிலில் அமைந்துள்ள மகா வில்வமரத்தில் முள்கள் காணப்படுவதில்லை. இதுபோன்ற மரங்கள் காசியில் மட்டுமே காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

 

கோயிலின் தலவிருட்சமான மகா வில்வம்
கோயிலின் தலவிருட்சமான மகா வில்வம்

மேலும் குழந்தைப் பேற்றுக்காக வேண்டிக் கொள்பவர்கள், திருமணத் தடை நீங்க வேண்டுபவர்கள், கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிணக்குகள் நீங்க வேண்டும் என வேண்டுபவர்கள் இத்திருக்கோயிலின் தல விருட்சமான மகா வில்வமரத்தை வலம் வந்து, பூஜை செய்து வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கி, அவர்களின் பிரார்த்தனைகள்  நிறைவேறும் என்பது ஐதீகம்.

 இந்த மகாவில்வ மரம் 1200 ஆண்டுகள் பழைமையானது என்கின்றனர் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

நவக்கிரக சிறப்பு
 

சூரியனைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ள நவக்கிரகங்கள்
சூரியனைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ள நவக்கிரகங்கள்

இக்கோயிலில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் தனிச்சிறப்புடையன. நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மத்தியில் இருக்க,  சூரியனைப் பார்த்து மற்ற கிரகங்கள் எழுந்தருளியிருப்பது சிறப்புக்குரியது. இந்த நவக்கிரக சன்னதியில் வழிபாடு செய்தால்  நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

முதல் தீபாராதனை சூரியனுக்கு
 

சிறப்புவாய்ந்த  சூரியபகவான்
சிறப்புவாய்ந்த  சூரியபகவான்

பிரகாரத்தின் கீழ்ப் பகுதியில் பைரவர், சூரியன் திருமேனிகள் அமைந்துள்ளன. இக்கோயிலின் காலசந்தி பூஜையின்போது முதலில் சூரியனுக்குத்தான் தீபாராதனை காட்டப்படும். அதன் பின்னர்தான் விநாயகர், இறைவன், இறைவிக்கு தீபாராதனைகள் காட்டப்படுகின்றன. இந்த அரிய  வழக்கம் இக்கோயிலில் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தோஷங்கள் நீக்கும் கோயில்

வடகயிலாசநாதர்
வடகயிலாசநாதர்


இத்திருக்கோயில் இறைவன் அப்ரதீசுவரர், இறைவி அதுலசுந்தரி அம்மனை கோள்களே வழிபட்டதால்,  நட்சத்திர, கிரக தோஷங்கள் நீங்கவும், குழந்தைப் பேறு உண்டாகவும் நவமி திதியில் இக்கோயிலுக்கு வந்து பிரகாரத்தை இடம் வலமாக சுற்றி வந்து தரிசித்தால் உரிய பலன்கள் கிடைக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது  ஐதீகம்.

பூரட்டாதி நட்சத்திரக் கோயில்

தென் கயிலாசநாதர்
தென் கயிலாசநாதர்

ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான கோயிலாக அமைந்துள்ளது. அதன்படி பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் இது.  தங்களின் நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு வந்து இறைவன், இறைவியை வழிபட்டால், அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறும். பரிகாரங்களைச் செய்யலாம் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து பலன் பெற்ற பக்தர்கள்.

திருவிழாக்கள்

சகஸ்ரலிங்கம்
சகஸ்ரலிங்கம்


திருவாதிரைப் பெருவிழாவின்போது சுவாமிக்கு அபிஷேகம், புறப்பாடு நடைபெறும். மேலும் தை மாதத்தில் மாட்டுப் பொங்கலன்று குதிரை வாகனத்தில் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களும், மாதந்தோறும் இரு முறை பிரதோஷ வழிபாடும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

பூஜை காலங்கள்

பக்தருக்கு பிரசாதம் வழங்கும் கோயிலின் குருக்கள் மோகன்
பக்தருக்கு பிரசாதம் வழங்கும் கோயிலின் குருக்கள் மோகன்

இக்கோயிலில் நடை காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  காலசந்தி காலை 8.30 மணிக்கும், உச்சிகாலப் பூஜை காலை 10.30 மணிக்கும், சாயரட்சை மாலை 5.30 மணிக்கும்,  அர்த்தசாம பூஜை இரவு 7.30 மணிக்கும் நடைபெறும்.

எவ்வாறு செல்வது?

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்கு மத்திய, தென், வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள்  நெ.1 டோல்கேட், வாளாடி, மாந்துறை வந்து வரலாம். லால்குடியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மன்

பேருந்துகளில் வருபவர்கள் திருமங்கலம் செல்லும் பேருந்தில் வந்தால் நகர் கிராமத்துக்கு வந்தடையலாம். கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தோ, மத்திய பேருந்து நிலையத்திலிருந்தோ வந்தால் நெ.1.டோல்கேட்,  வாளாடி, மாந்துறை வழியாக வரலாம்.  லால்குடியிலிருந்து ஆட்டோ வசதிகளும் உண்டு.

ரயில் அல்லது விமானம் மூலம் வருபவர்கள் திருச்சி வந்து,  இந்த வழித்தடத்திலேயே கார் போன்ற வாகனங்கள் மூலம் வரலாம்.

பைரவர்
பைரவர்

தொடர்புக்கு,

நகரிலுள்ள அப்ரதீசுவரர் திருக்கோயிலுக்கு வருவோர் தொடர்புக்கு: மோகன் குருக்கள் - 9715948913, ராம்குமார் குருக்கள் - 8825907025.

உற்சவர் திருமேனிகள்
உற்சவர் திருமேனிகள்

கோயில் முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர் திருக்கோயில்,
நகர், லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள் : எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com