Enable Javscript for better performance
ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

  By எம்.ஆா்.சுரேஷ்குமாா்  |   Published On : 15th January 2021 04:00 AM  |   Last Updated : 28th June 2021 01:04 PM  |  அ+அ அ-  |  

  WhatsApp_Image_2021-01-09_at_11

  திருக்காளத்தீசுவரர்

   

  ஆந்திரத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்து சைவ சமய நெறிகளைப் பின்பற்றும் மிகப் பழமையான கோயில் இது. பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.

  வேடனான கண்ணப்பர் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலம். மேலும் சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) என மூன்றும் இத்தலத்து இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றதால் அவற்றின் பெயரால் ஸ்ரீகாளஹஸ்தி என்று வழங்கப்படுகிறது. 

  கண்ணப்ப நாயனார் கதை

  காளஹஸ்தியை அடுத்த உட்டுகுரு கிராமத்தில் வேடர் (முத்தரையர், தற்போது வழக்கத்தில் உள்ளது) குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். (ஒருகாலத்தில் தமிழகத்துடன் இணைந்திருந்த பகுதி) அவர்களின் வழிபாட்டுத் தெய்வம் ஆறுமுகக் கடவுள். கண்ணப்பன் மிகவும் பலசாலியாக இருந்ததால் திண்ணப்பன், தீரன் என்றும் அழைக்கப்பட்டார். பாசுபதாஸ்திரத்தைப் பெற அர்ஜுனன் தவமிருந்தபோது, அதைச் சோதித்த சிவபெருமான் அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை வழங்கியதோடு, அவர் மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அருளினார். 

   திருக்காளத்தீசுவரர் கோயில் கோபுரம்

  அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் திண்ணனாக அவதரித்தார். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற திண்ணன் அங்கிருந்த சிவபெருமான் மீது பக்தி கொண்டார். வழிபாட்டு முறையை அறியாத திண்ணன் தன் பக்தியை அவர் அறிந்த முறையில் தூய்மையாக வெளிப்படுத்தினார். சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் உள்ள மலர்கள், இலைகளால் மாலை கட்டி, அதை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தார்.

  அவரின் பக்தியை உலகிற்குப் பறைசாற்ற நினைத்த சிவபெருமான்,  ஒருநாள் திண்ணன் வழிபட வரும்போது கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார். சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து அர்ப்பணித்த அவரின் பக்தியைப் போற்றி, நேரில் காட்சி அளித்து ஆட்கொண்டார். சிவனுக்குக் கண் கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். நாயன்மார்களில் ஒருவராகவும்  கண்ணப்பன் கருதப்படுகிறார்.

  லிங்க வழிபாடு

  உலக தோற்றத்தின் ஆரம்ப காலத்தில் வாயு பகவான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கற்பூர லிங்கத்தை ஏற்படுத்தி அதன் முன்பு தவம் இயற்றி வந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், வாயு பகவான் முன்பு காட்சியளித்து, வாயு பகவானே, ஓரிடத்தில் இருக்கும் தன்மையில்லாத நீ, ஆயிரம் ஆண்டுகள் சிறு நகர்வில்லாமல் ஓரிடத்திலிருந்து தவம் புரிந்ததன் பயனாக, 3 வரங்களை அளிப்பதாகக் கூறினார். அதன்படி வாயு பகவான், 'தான் உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்’, 'ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்க வேண்டும்’, 'நான் வழிபட்ட கற்பூர லிங்கம் என்னுடைய பெயராலே வழங்கப்பட வேண்டும்’, என்று 3 வரங்களைக் கேட்டார்.

  அதன்படி 3 வரங்களை அளித்தார் சிவபெருமான். மேலும் இந்தக் கற்பூர லிங்கத்தைத் தேவர்கள், முனிவர்கள், சூரர்கள், அசுரர்கள், கன்னரர்கள், கந்தர்வர்கள், கருடன், கிம்புருவர்கள், சித்தர்கள், ரிஷிகள், முனிபுங்கவர்கள், மனிதர்கள் என அனைவரும் வணங்குவர் என்றும் கூறி மறைந்தார். அதனால் வாயு பகவான் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஈரேழு பதினான்கு லோகங்களிலும் லிங்க வழிபாடு தொடங்கியது. 

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

  வாயு பகவானுக்கு என ஏற்படுத்தப்பட்ட முதல் கோயில் இது என்ற தனித்தன்மையை இந்தக் கோயில் பெற்றுள்ளது. மேலும், ஈசன் சாபம் பெறப்பட்ட உமையவளும் இந்த க்ஷேத்திரத்தில் வந்து லிங்கத்தைப் பூஜை செய்து ஞானம் பெற்றதால், இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி ஞானபிரசுனாம்பா என்று அழைக்கப்படுகிறார். சிவனின் தலையில் இருக்கும் கங்கை இத்தலத்தில் சொர்ணமுகி என்ற பெயரில் கோயிலைச் சுற்றிப் பிரவகிக்கிறாள். மேலும் சாபம் பெற்ற இந்திரன், சந்திரன், மயூரன் உள்ளிட்ட பலரும் காளஹஸ்தியில் உள்ள சொர்ணமுகி நதியில் மூழ்கி சாப விமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. 

  எட்டு பாகங்கள்

  வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவன் என்று ஏற்பட்ட போரில் கயிலாய மலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்தான். மலையை அவனிடமிருந்த விடுவிக்க வாயு நடத்திய போராட்டத்தில் கயிலாய மலை 8 பாகங்களாக உடைந்து உலகின் 8 இடங்களில் விழுந்தது. அவை, திரிகோணமலை, ஸ்ரீகாளஹஸ்தி, திருசீரமலை, திருவெண்கோய்மலை, ராஜதகிரி, நீர்த்தகிரி, ரத்னகிரி மற்றும் ஸ்வேதகிரி. அதில் இரண்டாம் பாகம் விழுந்த இடம் ஸ்ரீகாளஹஸ்தி. அதனால் காளஹஸ்தியும் கயிலாய மலையின் ஒரு பகுதி ஆகும். காளஹஸ்தி கோயில், துர்கம்மா மலை மற்றும் கண்ணப்பர் மலை என்ற இரு வேறு மலைகளின் நடுவில் அழகுற அமைந்துள்ளது. 

  தென் கயிலாயம்

  சிவன், பிரம்மாவிடம் அழகான ரம்யமாகக் கைலாய மலையை உருவாக்கக் கூறியதாகவும், அவ்வாறு பிரம்மா உருவாக்கிக் கொண்டிருந்தபோது அதிலிருந்து உடைந்து விழுந்த சிறு துண்டு இந்தியாவின் தெற்குப் பகுதியில் விழுந்ததால், காளஹஸ்தியை தென் கயிலாயம் என்றும் அழைக்கின்றனர். சதுர் யுகங்களிலும் பிரம்ம தேவர் இங்கு வந்து சிவனை வழிபட்டுச் சென்றிருக்கிறார். மகாபாரதத்திலும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் இங்கு வந்து சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. சங்கத் தமிழ்ப் புலவர் நக்கீரரும் தன் படைப்புகளில் இக்கோயில் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். 

  கைபடாத லிங்கம்

  காளஹஸ்தி கோயிலில் எழுந்தருளியுள்ள மூர்த்தியின் மீது இதுவரை யார் கைகளும் பட்டதில்லை. வாயுபகவான் கற்பூரத்தால் செய்த சிலை என்பதால், இந்த லிங்கத் திருமேனியைக் கோயிலில் பணிபுரியும் குருக்கள் உள்பட தீண்டியவர் யாரும் இல்லை. அதனால் கைபடாத லிங்கம் என்ற பெருமை பெற்றவர் காளத்தீசுவரர். உற்சவ மூர்த்திக்கு மட்டுமே இங்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. 

  கட்டட பாணி

  இக்கோயில் திராவிட கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் உட்பிரகாரம் 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் பிறகு, 6 நூற்றாண்டுகள் கடந்து இக்கோயிலின் வெளிப்பிரகாரம், 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனாலும், நூற்றுக்கால் மண்டபம் விஜயநகர அரசர்களாலும் கட்டப்பட்டன. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் காளத்தீசுவரன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். யானையின் தந்தம் போன்ற வடிவமைப்பு கொண்ட இவரின் லிங்கத் திருமேனி வெள்ளைக் கல்லால் ஆனது. இக்கோயிலில் 1516-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜகோபுரத்தை ஏற்படுத்தினார்.

  புதிய கோபுரம்

  ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ஏற்படுத்திய ராஜகோபுரம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இடிந்து விழுந்தது. அதை ஆந்திர அறநிலையத் துறை சீர்படுத்தி, மீண்டும் இப்பகுதியில் நன்கொடைகள் வசூல் செய்து ரூ. 45 கோடி பொருள் செலவில் புதிய பிரம்மாண்ட ராஜகோபுரத்தை 2017ம் ஆண்டு எழுப்பி ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தியது. 144 அடி உயரமும் 22 அடுக்குகளும் கொண்ட இந்த ராஜகோபுரத்தின் மீது கிரேன் மூலம் தலைமை குருக்கள் மட்டும் சென்று பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியது குறிப்பிட வேண்டிய பதிவு. 

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: திருமணத் தடை நீக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் திருக்கோயில்

  இந்த கோபுரத்தைச் சுற்றிக் கோயில் நிர்வாகம் பூங்காக்கள், மலர்வனங்கள், நடைபாதைகள் என ஏற்படுத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கோயிலை மேலும் விரிவுபடுத்தத் திட்டம் மேற்கொண்டு அதற்கான நிலங்களை அரசு கையகப்படுத்தி விரிவாக்க பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. 

  சீர்வரிசை

  இக்கோயிலின் இறைவி ஞானபிரசுனாம்பிகை அம்மன் செங்குந்தர் கைக்கோளர் குலத்தில் வெள்ளத்தூரர் கோத்திரத்தில் பிறந்து, தவம் புரிந்து இறைவனை அடைந்தார். அதனால் ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின் போது வெள்ளத்தூரர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அம்மனுக்குச் சீர்வரிசை அனுப்பும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

  பரிவார தேவதைகள்

  மேலும், இக்கோயிலில் பூமிக்கு 9 அடிக்கு கீழ் வல்லப கணபதி அமைந்துள்ளார். காசி விஸ்வநாதர், அன்னபூரணி, சூரியநாராயணர், சந்த்யோகணபதி மற்றும் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்டோருடன் கோயிலின் முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி என்று இரு வேறு புஷ்கரணிகள் உள்ளன. 

  பூஜைகளின் விவரம்

  சேவையின் பெயர்       கட்டணம்
  சுப்ரபாத சேவை ரூ. 50
  கோமாதா பூஜை     ரூ. 50
  அர்ச்சனை         ரூ. 25
  சகஸ்ரநாமார்ச்சனை   ரூ. 200
  திரிசதி அர்ச்சனை ரூ. 125

  இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப்பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

  உற்சவங்கள்

  கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, ஆருத்ரா, நவராத்திரி, குங்குமார்ச்சனை, தெப்போற்சவம், கிரிவலம், மாத சிவராத்திரி, பௌர்ணமி புறப்பாடு, பிரதோஷ கால பூஜைகள் உள்ளிட்டவை விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. 

  ராகு-கேது பரிகார பூஜை

  சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் இந்த கோயிலில் இந்த சிவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றுள்ளனர். அதனால் கருவறையில் உள்ள லிங்கத் திருமேனியில் நாகப்பாம்புகள் பின்னலிடப்பட்டதைப் போன்ற தோற்றம் வெளிப்படும். எனவே, இக்கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். ராகு - கேது சர்ப்ப தோஷம், திருமண தோஷம், புத்திர பாக்கியம், தொழில் மேன்மை, கல்வி வளர்ச்சி, தங்களின் வளமான நல்வாழ்விற்காக என அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இங்கே செய்யப்படும் பரிகார பூஜைகள் அமைந்துள்ளன. 

  மேலும் தங்களின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் அதற்கு நிரந்தர தீர்வாக இந்த பரிகார பூஜை அமைந்துள்ளது. பரிகார பூஜை இங்கு செய்தால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இதற்காகக் கோயிலில் நிர்வாகம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் முன்பு, பூஜை செய்யும் பக்தர்கள் இங்கு வந்து இரவு கோயில் மண்டபத்தில் தங்கி அங்கேயே குளித்து இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்.

  இதில் தனியாகவும், தம்பதியராகவும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளிலும் வரும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்வதைப் பலர் விசேஷமாக கருதுகின்றனர். இதற்கான டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இதற்கான பொருள்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூஜைகள் நடைபெறுகின்றன. 

  பூஜையின் பெயர்கள் அவற்றின் கட்டணங்கள்

  பூஜை பெயர்   கட்டணம்
  ராகு-கேது பரிகார பூஜை     ரூ. 500
  சிறப்பு கால சர்ப்ப நிவாரண பூஜை           ரூ. 750
  ராகு-கேது காலசர்ப நிவாரண பூஜை     ரூ. 1500
  சிறப்பு ராகு-கேது காலசர்ப நிவாரண பூஜை   ரூ. 2500

  பக்தர்கள் பூஜையைத் தேர்ந்தெடுத்துக் கோயில் வளாகத்தில் அளிக்கும் கவுண்டரில் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொண்டு மேற்படி பூஜையில் கலந்துகொள்ளலாம். பூஜைக்குத் தேவையான அனைத்தையும் கோயில் நிர்வாகம் வழங்கும். பூஜை முடித்த பின்னர் பக்தர்கள் தாங்கள் பூஜை செய்த நாக படங்களைக் கோயில் உண்டியலில் செலுத்தித் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்து தங்கள் ஊருக்கு புறப்படலாம்.

  கிரகண காலத்திலும் தரிசனம்

  இக்கோயில் ராகு-கேது பரிகாரத் தலம் என்பதால், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்களின்போது மூடப்படாமல் முழு நேரமும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். கிரகண தோஷம் நீங்கப் பக்தர்கள் இங்கு வந்து பூஜைகளிலும் கலந்துகொண்டு செல்கின்றனர். 

  பிரசாதங்கள்

  கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் புளியோதரை, தயிர்சாதம், மிளகு வடை, லட்டு, சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்டவை பிரசாத விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அவற்றைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

  தங்குமிடம்

  பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோயில் சார்பில் விடுதிகள் உள்ளன. மேலும் கோயிலைச் சுற்றிப் பல தனியார் விடுதிகளும் கட்டணங்களுக்கு ஏற்ப பல தரத்தில் உள்ளன. பக்தர்கள் தங்களின் விருப்பத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். 

  இந்தக் கோயிலையும் வலம் வரலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

  உணவு

  காளஹஸ்தி கோயிலில் மதிய வேளைகளில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோயிலைச் சுற்றிப் பல உணவு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கோயிலில் செயல்பட்டு வரும் அன்னதான திட்டத்திற்குப் பக்தர்கள் தாங்கள் விரும்பும் தொகையை நன்கொடையாக வழங்கலாம்.

  போக்குவரத்து

  ஆந்திரத்திலுள்ள திருப்பதியிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் காளஹஸ்தி நகரம் அமைந்துள்ளது. அதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் காளஹஸ்தி கோயிலுக்கும் சென்று வருகின்றனர்.

  விமானம்

  விமானத்தில் வருபவர்கள் திருப்பதி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தனியார் வானகங்கள் மூலம் 25 கி.மீ. பயணம் செய்து காளஹஸ்தியை அடையலாம். ஹைதராபாத், தில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றது.

  ரயில்

  காளஹஸ்தியில் ரயில் நிலையம் உள்ளது. ஹைதராபாத், விஜயவாடா மற்றும் கொல்கத்தாவிலிருந்து வரும் ரயில்கள் இங்கு நின்று செல்லும். 

  மேலும் சென்னை - மும்பை இடையே இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் காளஹஸ்தி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் சந்திப்பு வழியாக நின்று செல்லும்.

  ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இறங்கி, சாலைவழி 25 கி.மீ. பயணம் செய்தும் காளஹஸ்தியை அடையலாம்.

  பேருந்து

  சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் பேருந்துகள் காளஹஸ்திக்கு இயக்கப்படுகின்றன.

  ஆந்திர, கர்நாடக, தமிழ்நாடு என 3 மாநில அரசு பேருந்துகளும் காளஹஸ்தி வரை பேருந்துகளை இயக்கி வருகின்றன. சென்னையிலிருந்து 3 மணி நேரமும், பெங்களூரிலிருந்து 5 மணி நேரமும் பயணம் செய்து காளஹஸ்தியை அடையலாம். 

  கார், இதர வாகனங்கள் சென்னையிலிருந்து சென்னை-தடா-காளஹஸ்தி அல்லது சென்னை-திருத்தணி, ரேணிகுண்டா-காளஹஸ்தி (110 கி.மீ.) வழியாகக் கோயிலை அடையலாம். 

  ஹைதராபாத் (545 கி.மீ) - ஹைதராபாத்- கர்னூல்- கடப்பா- ரேணிகுண்டா-காளஹஸ்தி அல்லது ஹைதராபாத்-நாகார்ஜுன சாகர் - ஓங்கோல்-நெல்லூர்-நாயுடுபேட்டை-காளஹஸ்தி வழித்தடத்தைப் பின்பற்றலாம்.

  பெங்களூர் (300 கி.மீ) - பெங்களூர்- முல்பாகல்- பலமநேர்- சித்தூர்-  திருப்பதி-காளஹஸ்தி தடத்தில் பயணம் செய்தால் கோயிலை அடையலாம்.

   முகவரி

  ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் தேவஸ்தானம்,
  ஸ்ரீகாளஹஸ்தி,
  சித்தூர் மாவட்டம், 
  ஆந்திரப் பிரதேசம்-517644.

  தொலைபேசி எண்: 08578-222240.
  மின்னஞ்சல் முகவரி:eo_srikalahasthi@yahoo.co.in.

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp