பெருகலாம் தவம் பேதமை தீரலாம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
என அப்பர் பெருமானாலும், இரு பதிகங்களால் திருஞானசம்பந்தப் பெருமானாலும் பாடல் பெற்றது நாகை மாவட்டம், திருமருகல் அருள்மிகு ரத்தினகிரீசுவர சுவாமி திருக்கோயில்.
அரவம் தீண்டி இறந்தவரை ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்து, இறைவனின் திருமுன்னிலையில் திருமணம் செய்து வைத்த தலம், வறுமைப் போக்கும் தலம், மகாலட்சுமி தாயார் தவமியற்றி மகாவிஷ்ணுவை அடைந்த தலம், சனி கிரகத்தின் உக்கிரம் போக்கும் தலம், பிரம்மதேவர் தவமியற்றிய தலம் என எண்ணிலடங்கா ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டது இத்திருத்தலம்.
திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாக விளங்கும் இறை பரம்பொருள் இத்தலத்தில் அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற திருப்பெயருடன், சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். வடமொழி பெயராக இறைவனுக்கு ஶ்ரீ ரத்தினகீரிசுவரர் என்ற பெயர் விளங்குகிறது. அன்னை ஆதிசக்தி அருள்சொறியும் திருவுருவில் அருள்மிகு வண்டுவார்குழலி என்ற திருப்பெயருடன், தனி சன்னதிக் கொண்டு தென்முகம் நோக்கிக் காட்சியளிக்கிறார். அன்னைக்கு, வடமொழி பெயராக ஆமோதள நாயகி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்
கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோயிலாக அமைந்துள்ளது இக்கோயில். இரு பிராகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ் திருத்தலமாக உள்ளது இத்தலம். மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் எனப் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளான். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடைபெற்றபோது, சுயம்புவாக தோன்றியிருந்த சிவலிங்கத் திருமேனியின், பாணத்தில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதையறிந்த மன்னன் ஓடோடி வந்து, மனம் மொழி மெய்களால் இறைவனைத் துதித்து, இறைத் திருவருளால் எழுப்பித்த ஆலயமே, இக்கோயில் எனப்படுகிறது.
நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுக் காலம் மழையில்லாததால் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு உள்ளாகினர். பசிப் பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளைப் புறந்தள்ளினர். இதனால், மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியைப் போக்க முடியாமல், மக்களை நீதி நெறி நடத்த முடியாமல் வாழ்வதை விட, இறப்பதே மேல் எனக் கருதி, தன் துயரை எல்லாம் இறை திருமுன் நின்று கதறிய அவன், இறுதியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றான்.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம் நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்
தன்னலம் கருதாமல், தன் குடிகளின் நலனுக்காக தன்னுயிரையும் துறக்கத் துணிந்த மன்னனைத் தடுத்தாட்கொண்டு, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மாணிக்கம், நெல், முத்து, நீர் ஆகிய மழைகளைப் பொழியச் செய்து அருளியுள்ளார். மாணிக்க மழை பெய்யச் செய்து மக்களின் வறுமையைப் போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமணம்
வைப்பூரைச் சேர்ந்த வணிகன் ஒருவனுக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகவு இல்லாத அவன், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளான். மேலும், தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவன் வாக்களித்திருந்தான். ஆனால், காலப்போக்கில் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியவனாக அந்த வணிகன், தன்னுடைய 7 பெண்களில் 6 பெண்களை செல்வந்தர்களாகத் தேடிப்பிடித்து மணம் முடித்தான்.
தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-ஆவது பெண், தன் தந்தை தன்னையும் தன் மாமனுக்கு மணம் முடிக்கமாட்டார் என்பதையறிந்து, தன் மாமனை மதுரைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது எனத் திட்டமிட்டு, அவனுடன் உடன்போக்குப் புறப்பட்டாள். ஒரு நாள் இரவு, இத்திருத்தலத்தின் தெற்குவீதியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது, விதி வசத்தால் அந்தச் செட்டிப்பிள்ளை அரவம் தீண்டி இறந்தான்.
இதனால், பெரும் துயருற்ற அந்தச் செட்டிப்பெண், கண்ணீர் விட்டுக் கதறி புலம்பினாள். மணமாகா கன்னிப் பெண் என்ற எல்லையை மீறாமல், இறந்து கிடந்த மாமனின் உடலைத் தீண்டாமல் அருகிலிருந்தே அழுது புலம்பினாள். அரவம் அணிந்த நிமலா, அடியவர் தம்கூட்டம் உய்ய நஞ்சுண்ட அமுதே காத்தருள வருவாய்! என இறைவனை பலவாறு அழைத்தாள், அரற்றினாள்.
தன் அவல நிலையிலும் ஆண்டவனின் மீது நம்பிக்கைக் கொண்டு துதித்த அந்தப் பெண்ணின் அழுகுரல், அங்குத் தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது அவலங்களைக் கேட்டறிந்த சம்பந்தப் பெருமான் மனம் கனிந்தார். மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடத் தொடங்கினார்.
"சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே"
என்ற பாடலுடன் தொடங்கி 11 பாடல்களைப் பாடி பதிகத்தை நிறைவு செய்தார் சம்பந்தர் பெருமான்.
இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
ஞானக் குழந்தையின் பாடல்களால் மகிழ்ந்த மாணிக்கவண்ணரின் திருவருளால், இறந்து கிடந்த செட்டிப்பிள்ளை உயிர்பெற்று, துயில் எழுந்தவன் போல எழுந்தான். பரம்பொருளின் பெரும் கருணையால் புணர்வாழ்வு பெற்ற செட்டிப்பெண்ணும், செட்டிப்பிள்ளையும் இறைவனை பலவாறு வேண்டித் துதித்தனர்.
அப்போது, இறைவன் திருவுளப்படி வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர் திரு முன்னிலையில், வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு செட்டிப்பெண் - செட்டிப்பிள்ளை இருவருக்கும் மணமுடித்து வைத்தார் சம்பந்தர் பெருமான் என்பது இத்தல புராணம் உணர்த்தும் ஆன்மிக அற்புதம்.
இதன் காரணமாக, இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இங்கு, ஞானசம்பந்தப் பெருமான் விஷம் நீங்கப் பாடிய பதிகம், திருமணத் தடை நீக்கும் பதிகமாகவும் விளங்குகிறது. இதன்படி, விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி, சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் என்ற பதிகத்தைப் பாராயணம் செய்வோருக்கு, தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் கைகூடும் என்பது இத்தலத்தின் சிறப்பு
மகாலட்சுமி தவம்
புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கைக் கரையில் வேள்வி மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர், பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூலோகத்துக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, பிருகு முனிவர் வைகுந்தம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால், பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார்.
உடனடியாக, பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியைப் போக்கக் கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்துவிட்டார்.
தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுந்தத்தை விட்டு விலகியிருந்து கடுந்தவம் இயற்றப் போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார்.
இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்
பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோயிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்றத் தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோயிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி, வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார்.
ஆவணி மாதம் பௌர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை அடைய திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகலையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம். இதன்படி, இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.
மேலும், மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபாடாற்றினால், மீண்டும் கூடி வாழ்வர் எனப்படுகிறது.
சனிதோஷ நிவர்த்தி
இக்கோயிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் ஶ்ரீ சனீஸ்வர பகவானுக்குத் தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். "மந்தனார் கொட்ட மடங்குங்கு கோயிலிது" என்று காக புஜண்டர் குறிப்பிட்டுள்ளார்.
"மந்தனுக்குற்ற பெரும் பேறுங்
கீர்த்தியும் மருகலானுக் கல்லால்
வேறில்லை நல்லன வேல்லாந்
தந்தே வேதனை யறுப்பான்
கொடுமையை யெடுத்துண்பனே"
என கோரக்கச் சித்தர் அருளியுள்ளார் என்பதால், இத்தலம் சனிதோஷத்தின் உக்கிரம் போக்கும் தலமாகக் குறிப்பிடப்படுகிறது.
பராசரர் வழிபாடு
புலன்களை வென்ற புண்ணியராக இருந்தவர் பராசரர் முனிவர். கங்கையில் தீர்த்தமாடச் சென்ற அவர், அங்கு தோணி ஓட்டும் பெண் ஒருவளின் அழகில் மயங்கினார். தன்னை மணந்துகொள்ள வேண்டி, அவளின் இசைவைப் பெற்றார். அவர்களுக்கு வியாசர் குழந்தையாக அவதரித்தார். பின்னர், அப்பெண்ணிடம் விடைபெற்ற பராசரர் மீண்டும் தவமியற்ற பதகாச்சிரமம் சென்றார். ஆனால், அவர் மனதை கவலை சூழ்ந்திருந்ததால், அவரால் நிலைகொள்ள இயலவில்லை.
அப்போது, ஓர் அசிரீரி தோன்றி, கதலி வனத்தை சுற்றி மாணிக்கவண்ணரை வழிபட மனத்தூய்மை கிட்டும் என அருளியது. அதன்படி, பராசர முனிவர் இத்தலத்தில் வன்னி இலையைக் கொண்டு சிவலிங்க வழிபாடு மேற்கொண்டார். சித்திரை மாத பௌர்ணமி நாள் நண்பகலில் மாணிக்கவண்ணர் தோன்றி பராசர முனிவருக்குக் காட்சியளித்தார் என்பது இத்தல ஐதீகம். இதன்படி, இத்தலம் மனக்குழப்பங்கள் போக்கும் தலமாகக் குறிப்பிடப்படுகிறது.
இக்கோயிலின் முக்கியப் பெருவிழா, சித்திரைத் திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ஆம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் உத்ஸவமும் நடைபெறும். அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இத்திருக்கோயிலில் தற்போது மகா குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.
எப்படிச் செல்வது?
அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிலிருந்து இக்கோயிலுக்கு ஆகாய மார்க்கமாக வர விழைவோர், திருச்சி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தஞ்சை, நன்னிலம் மார்க்கத்தில் இக்கோயிலை அடையலாம். ரயிலில் வருவோர் நாகை அல்லது சன்னாநல்லூரில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மார்க்கமாக திருமருகலை அடையலாம்.
கோயில் முகவரி
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில்,
திருமருகல், திருமருகல் அஞ்சல்,
நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
படங்கள்: எச்.ஜஸ்வந்த்குமார்