சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர்

கி.பி. 1405 - இல் வடநாட்டு துக்கோஜி ராஜா வேலூரைக் கைப்பற்ற முடிவு செய்து இரவில் சாரட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார்.
சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர்
சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர்

கி.பி. 1405 - இல் வடநாட்டு துக்கோஜி ராஜா வேலூரைக் கைப்பற்ற முடிவு செய்து இரவில் சாரட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூமி மட்டத்தோடு மட்டமாக 11 மூர்த்திகளும் மண்மூடியிருந்தனர். அந்த இடத்தினைக் கடக்கும்போது "டக்' கென்று அவரது சாரட்டின் அச்சு முறிந்து வண்டி நின்று விட்டது. அருகில் ஆள் யாரும் இல்லையாயினும் பூமியில் ரத்தம் ஊறியிருந்தது. விவரம் புரியாமல் இரவு முழுவதும் விநாயகரை வேண்டியபடி பிரயாணத்தில் விக்னம் வந்து விட்டதே என்று வருத்தப்பட்டு தூங்கிப் போய்விட்டார்.

விநாயகர் கனவில் வந்தார். "அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் அருவுருவம் புதைந்து போயிருக்கின்றன. அதன்மேல் உன் வண்டிச் சக்கரம் இடித்ததில் தான் ரத்தம் வந்துவிட்டது. இங்கு கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்!' என்றார். அதன்படி கி.பி.1407 இல் இக்கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. துக்கோஜியின் சாரட் வண்டியின் சக்கரம் ஏறிய வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகரின் முதுகில் வலது பக்கத்தில் உள்ளதை இன்றும் தரிசனம் செய்யலாம்.

செல்வவிநாயகர் கோயில் என்றுஅழைக்கப்படும் இத்தலம், வேலூர் நகருக்கு வடமேற்கில் வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில் 1 கி.மீ தொலைவில் பாலாற்றின் தென்கரையில் சேண்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த இடம் முழுக்க செண்பகவனமாக இருந்ததால் செண்பக வனப்பாக்கம் எனப்பட்டு அது மருவி "சேண்பாக்கம்' என அழைக்கப்படுகிறது.

மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வணங்கி ஆதிசங்கரரால் சக்கர ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்ததால் நெடுநாள்களாகத் தடைப்பட்டு வரும் திருமணம் கை கூடும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பசு நெய்யில் தாமரைத் தண்டுத் திரியிட்டு 33 தீபம் ஏற்றுகிறார்கள். மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்கிறார்கள். பிறகு மட்டைத் தேங்காயுடன் கோயிலை 4 முறைவலம்வந்து தலவிருட்சமான வன்னி மரத்தைத் தரிசித்து விநாயகருக்கு அத்தேங்காயை சமர்ப்பிக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவானால் இக்கோயிலில் உள்ள பால விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டி, நோய்கள் குணமடைந்து பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். இதுபோல் சேண்பாக்கம் திருத்தலம் பலவகை பிரார்த்தனை நடக்கும் திருத்தலமாக விளங்குகிறது.

பிரம்மன், தான் செய்த தவறுக்கு கழுவாயாக விரிஞ்சிபுரத்து ஈசனுக்கு பூஜை செய்து வந்தார். பூஜை மலர்களுக்காக நந்தவனம் அமைக்க நினைத்தார். ஆனால் அவர் மலர்ச் செடிகள் வைக்க தோண்டிய ஒவ்வொரு இடத்திலும் ஏகதச (11) விநாயகர்கள் சுயம்புவாய் காட்சி தந்தனர். விக்னம் களையும் விநாயகரை வணங்கி நந்தவனம் அமைத்தார். தினமும் முதலில் பறிக்கும் மலர்களால் விநாயகரை அங்கேயே பூஜை செய்து பின்னர், திருவிரிஞ்சிபுரம் சென்று பூஜையைத் தொடர்ந்தார்.பிரம்மனால் இக்கோயிலில் அன்று துவங்கிய இப்பூஜை வழிபாடு இன்றுவரை தொடர்கிறது.

சுயம்புமூர்த்திகள் அருளும் தலங்களுக்குச் சென்ற ஸ்ரீ ஆதிசங்கரர் ஒரு முறை சேண்பாக்கத்திற்கு மேற்கேயுள்ள விரிஞ்சிபுரம் சென்றார். தனது ஞான திருஷ்டியினால் கிழக்குப்புறமாக இருக்கும் பதினோரு சுயம்பு விநாயகர் சொரூபங்களை வழிபட வந்தார். இத்திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் நவக்கிரக சந்நிதிக்கு அருகில் "சக்கர ஸ்தாபனம்' செய்தார்.

ஜெயேந்திரர் யானைமேல் வர அதற்கு முன்பாக காஞ்சி மஹாபெரியவர் பட்டினப்பிரவேசமாக நடந்து போய்க்கொண்டிருந்தார். செல்வ விநாயகர் திருக்கோயில் இருக்கிற பக்கமாக ஊர்வலம் போகும்போது, ஓர் இடத்திற்கும் மேல் யானை நகராமல் முரண்டு செய்தது.

சுவாமிகள் சட்டென்று நினைவு வந்தவராக, "பக்கத்திலே சேண்பாக்கம் பிள்ளையாருக்கு 108 சிதறுகாய் போடுவதாக வேண்டிக் கொண்டிருந்தோம். அது மறந்து போயிடுத்து'' என்றார். உடனே பிள்ளையாருக்குச் சிதறுகாய் போடப்பட்டது. யானையும் சட்டென்று இரண்டு முறை தலையை சிலுப்பி விட்டுக் கொண்டு ஒரு பிளிறல் சத்தம் போட்டு தன் பாட்டுக்கு மேலே போக ஆரம்பித்தது என்று தெய்வத்தின் குரலில் சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரி நிறுவனர் ஒருவர் நன்றிக் காணிக்கையாக ஸ்ரீ செல்வ விநாயகருக்கு வெள்ளிக் கவசம் செய்து சார்த்தினார். அப்போது ஸ்ரீ செல்வ விநாயகரை முழுமையாக மூடியபடி வெள்ளிக் கவசம் தரை மீது படிந்தபடி இருந்தது. தற்போது அந்த வெள்ளிக் கவசம் ஸ்ரீ செல்வ விநாயகரின் திருவுருவத்தில் மூன்றில் இரண்டு பகுதி மட்டுமே பொருந்துகிறது. இதிலிருந்து ஸ்ரீ செல்வ விநாயகர் வளர்ந்து கொண்டே வருகிறார் என்பது ஆச்சரியப்பட வைக்கும் உண்மையாகும்.

திறந்த முற்றத்தில், சுயம்புவாய் பதினோறு விநாயகர்கள். நாம் வணங்கும் விநாயகர்களில் இருந்து மாறுபட்ட அரு உருவங்களில். வெவ்வேறு வடிவ உருவங்களில் ஒரேயிடத்தில் பலவகைகளில் சுயம்புவாய் உருவாகி அமைந்துள்ளார். 1. ஸ்ரீ பால விநாயகர்.2. ஸ்ரீ நடன விநாயகர்.3. ஸ்ரீ ஓம்கார விநாயகர்.4. ஸ்ரீ கற்பக விநாயகர்.5. ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்.6. ஸ்ரீ செல்வ விநாயகர்.7. ஸ்ரீ மயூர விநாயகர்.8 ஸ்ரீ மூஷிக விநயாகர். 9. ஸ்ரீ வல்லப விநாயகர் 10. ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் 11. ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் என இருந்து அருளுகின்றனர். ஆறாவதாக மையத்தில் வீற்றிருப்பவரே பிரதானமான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயர் ஆவார். அபிஷேக ஆராதனைக்குரியவரும் இவரே! சுற்றிலும் விநாயகர்கள் சுயம்புவாக "ஓம்' எனும் ப்ரணவாகார அமைப்பில் அருஉருவில் எழுந்தருளியுள்ளனர்.

சேண்பாக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயிலில் மூலவராக பதினோறு விநாயகர்களும் (ஏகாதச விநாயகர்கள்) இருக்கிறார்கள்.

முதலாவதாக வீற்றிருக்கும் ஸ்ரீ பால விநாயகர் நீரில் மூழ்கியபடியே காட்சி தருகிறார். பதினோரு விநாயர்களின் இரு பக்கங்களிலும் இரண்டு யாளிகள் அமைந்துள்ளன. ஸ்ரீ செல்வ விநாயகரின் எதிரில் யானை வாகனம் ஒன்று உள்ளது. இரு பக்கங்களிலும் நான்கு மூஞ்சூறுகள் உள்ளன. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக கோயில் உள்ளேயே மூலவரின் எதிரிலேயே கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. நவக்கிரகங்களில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான் மூலவரை பார்த்தபடி இருப்பது சிறப்பு வாய்ந்த ஓன்றாகும். இந்த விநாயகர்களை வாழ்வில் ஒரு முறையேனும் வழிபடுவோருக்கு சனி உபாதை இருக்காது எனவும் சனிதோஷம் இருந்தாலும் பாதிக்காது என்பதும் வழக்கத்தில் உள்ளது.

திருக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சனிக்குப் ப்ரீத்தியான தல விருட்சமான வன்னிமரமும் வெளிப்புறத்தில் தெப்பத்திருக்குளமும் அமைந்துள்ளன.

ஒவ்வொரு புதன், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் தோஷ நிவர்த்திக்காக இக்கோயிலில் ஏகதச விநாயகர்களை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

சதுர்த்தி நாள்களில் இங்குவந்து வணங்குவது சகல தோஷங்களையும் நீக்கி பூரண நலன் கிடைக்க வழி செய்யும்.

- ஸ்ரீபிரியா ஸ்ரீதர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com