எல்லாம் அருள்வார் யந்திர சனீஸ்வரர்

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பது கிராமங்களில் வழங்கப்படும் வழக்கு.
யந்திர சனீஸ்வரர்
யந்திர சனீஸ்வரர்

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பது கிராமங்களில் வழங்கப்படும் வழக்கு. நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு 'நீதிமான்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 'ஆயுள்காரகன்' என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு உண்டு. 

காரி என்ற பெயர் சனீஸ்வரனுக்கு உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் சனீஸ்வரன் குடி கொண்டிருந்ததால் "காரி" குப்பமென இறைவன் பெயரால்  அழைக்கப்பட்டது. அவ்வூரில்  நெடுநாள்களாக மக்கள் வழிபட்ட  சனிபகவான் மக்களின் தவறால், வழிபாடற்று தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மட்டும் அருளுபவராக இருந்து வந்தார்.

பொ.ஆ 1236 முதல் 1375ம் ஆண்டு வரை  அம்மன் கோவில் படைவீடை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் ராஜவீர கம்பீரன் என்பவர் சனீஸ்வர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து, போருக்குச் செல்லும்போதெலாம் வழிபட்டு வெற்றி பெற்று வந்தனர் என்பது அறியப்படும் வரலாறாகும். 1535ம் ஆண்டு  இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரி இவ்வழியாக குதிரையில் செல்லும்போது, திடீரென  கீழே விழுந்து  இடது காலில் முறிவு ஏற்பட்டது. குதிரையும் நிலைதடுமாறியதால்  பலத்த அடிபட்டது.

சிகிச்சையின்போது ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, யந்திர வடிவில் சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்பி, சிறப்பு வழிபாடுகள் செய்தால் அனைத்தும் நலமாகுமென, அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி புதரும் புல்லும் நீக்கி யந்திர வடிவிலான சனீஸ்வரன் யந்திரத்தை  எடுத்து வைத்து நிறுத்தி 4 கால பூஜைகளை செய்து நற்பலன்கள் பெற்றார். கால வெள்ளத்தில் கோயில் மறைந்து புதர் மண்டிப்போக யந்திர சிலை மீண்டும் முட்புதர்களால் மூடப்பட்டது. ஊரார் ஆண்டுக்கு சிலநாட்கள் புதர்விலக்கி வழிபாடு செய்யும் பழக்கம் மட்டும் இருந்தது.

யந்திர சனீஸ்வரரும் அடுத்துக் குளமும் குளத்தை ஒட்டி பெரிய ஏரியும் அமைந்திருந்ததால் காரியூர் என்னும் பெயர் ஏரியூர் என மருவிற்று. ஏரிக்கருகில் குடி கொண்டிருந்த சனீஸ்வரர் இருக்கும் தகவல் ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்கள் மூலம் அறியப்பட்டு தொல்பொருள் துறையினரால் தகவல்கள் வெளித்தெரிந்து மீண்டும் பூஜைகள் நிறுவி வழிபாடு  நடைபெற்று வருகிறது. 

சனிபகவானை, விக்கிரக வடிவத்தில் மட்டும் காகம், கழுகு வாகனத்துடன் நவக்கிரகங்களுடனோ பிரகாரத்திலோ தரிசிக்கலாம். தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரனாகவும் வட நாட்டில் சனிசிக்னாபூர் என்னும் தலத்தில் பாறை வடிவத்திலும் தரிசிக்க முடியும். ஆனால், மேற்கூரையின்றி கருவறை கொண்ட யந்திர சனீஸ்வர பகவான் அருள்புரியும் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலிருக்கும் ஏரிக்குப்பதில் மட்டுமே உள்ளது, திறந்த வெளிக்கருவறையில் ஐந்தரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட  உயரமான பலகைக்  கல்லில், யந்திர சனீஸ்வரர், காக்கைச்சித்தரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  

கிழக்கு நோக்கிக் காட்சிதரும் யந்திர சனீஸ்வரர் சனிபகவானின் பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்ட யந்திரத்தின் மேல் இடப்புறம் சூரியனும், வலப்புறம் சந்திரனும் இரண்டுக்கும் நடுவில் சனீஸ்வரனின் வாகனமான காகமும் எழுதப்பட்டுள்ளது. கீழே அறுகோண வடிவத்தில் மந்திர எழுத்துகள் கொண்ட யந்திரம் வரையப்பட்டிருக்கிறது. யந்திரத்திலுள்ள மந்திர அட்சரங்கள் இடவலமாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 

அருகிலேயே  சனிபகவான் தனது சக்தியான "ஸ்ரீ சாயா தேவியுடன்" எழுந்தருளியுள்ளார், சாயாதேவி திரிகோணத்தில் உடனிருப்பது அவருக்கு மகிழ்வும்  அமைதியும் கூடுதலாக அருளும் உத்வேகத்தையும்  தருவதால் சனீஸ்வரன்  மீது முழு நம்பிக்கை கொண்டு வேண்டும் பக்தர்களின் வரங்களை குறையாமல்  அளித்து அருளுகிறார். முன்புறம்  பக்தர்களுக்கு நலம் தரும் வகையில் அர்த்தமண்டபம் மகாமண்டபம் 2005ம் ஆண்டு குடமுழுக்கின்போது அமைக்கப்பட்டது. பொதுவாக, மற்ற இடங்களில் சனீஸ்வரரின்  நேர்ப்பார்வையைத் தவிர்த்து பக்கத்தில்  நின்று வழிபாடும் செய்வது பழக்கம். ஆனால் இக்கோயிலில் நேராக தரிசனம் செய்வது குறைகள் நீங்கி  வாழ்வில்  அதிர்ஷ்டத்தையும் வசந்தத்தையும்  தரும்.

பாஸ்கர தீர்த்தம் என்றழைக்கப்படும் கோவில் தீர்த்தக்குளம், கோவிலுக்கும் ஏரிக்கும் இடையில் அமைந்துள்ளதிலிருந்து பூஜைக்கான நீர் கொண்டு வரப்படுகிறது. சனீஸ்வர பகவானுக்கு துளசி, வில்வத்தால்  அர்ச்சனை செய்தால் சிறப்பானது என்பதோடு அவருக்குகந்த 8 எள் தீபம் ஏற்றி  விளக்கிடுவதும் 8 சுற்று சுற்றி வழிபடுவதும்  நடைமுறையில் உள்ளன. வார நாள்கள் மற்றும் ஞாயிறு காலை 9:00 மணி முதல்  1:00 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும். 

ஒவ்வொரு சனிக்கிழமையும் கோயிலில் ஏழரைச் சனி, மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரணச் சனி, லக்ன சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற எவ்வகை சனி பாதிப்பு இருந்தாலும் பாதிப்பைக் குறைக்கவும் லக்னத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்து உருவாக்கும் முடக்கு தோஷம் குறையவும்  காலை 9 முதல் 12 மணி வரை ஹோமமும், தொடர்ந்து சனி ஹோரையில் 1 மணி முதல் 2 மணி வரை அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது சனி ஞாயிற்றுக்கிழமைகளில்  பிரார்த்தனை நிறைவேற்றம் தோஷ நிவர்த்திக்காக வழிபட்டுச் செல்வது வழக்கத்தில் உள்ளது.

சனிப்பெயர்ச்சி  இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சனீஸ்வர பகவானின் அருள் பெறவும், ஜாதகத்தில் சனி தோஷம் குறையவும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் தரிசித்துச்  செல்கின்றனர். பக்தர்கள் குழந்தை வரம், திருமணம், வாழ்வு முன்னேற்றம், வழக்கு பிரச்னைகள், பிற பிரார்த்தனைகளுடன்  இங்கு வருகிறார்கள் பலன் பெற்று செல்கிறார்கள். எதிர்வரும் டிசம்பர் 20ம் தேதி சனிபகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு 18ம் தேதி விநாயகர் ஹோமம் பூஜையும் 19ம் தேதி நவக்கிரக ஹோமம்  பூஜையும் 20ம் தேதி காலை 7.00 மணியிலிருந்து சிறப்புப் பூஜைகள் ஹோமம் அபிஷேகம் அலங்காரம் ஆகியவை நடந்து மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சி நேரத்தில்  மகாதீபாராதனையும் செய்து பிரசாதம் வழங்கப்பட இருக்கிறது.

வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சந்தவாசல் ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. ஷேர் ஆட்டோக்கள்  மற்றும் ஆரணி, போளூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. 

மேலும் தகவல்களுக்கு  -  04181 299424 ; 9943120120; 9488648346   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com