FOLLOW US

ON GOOGLE DISCOVER

கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? நவாம்சம் சொல்லும் ரகசியம்!

ஜாதகத்தின் ஆழத்தை அறிய வேண்டும் என்றால் முதலில் நவாம்சத்தைப் தெரிந்துகொள்ள வேண்டும்...

Marriage

திருமணம் - கோப்புப்படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:36 pm IST

ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தைப் புரிந்துகொள்ள முதன்மையாகப் பார்க்கப்படும் சக்கரம் D1 எனப்படும் ராசி சக்கரம் ஆகும். இது ஒரு ஜாதகரின் பிறப்பு, உடல் அமைப்பு, குணாதிசயங்கள், வாழ்க்கையின் பொதுவான செயல்பாடுகள் மற்றும் பல்வேறு அடிப்படைப் பலன்களை அறிய உதவுகிறது.

பகுதி 1

ஒரு குழந்தை பூமியில் ஜனனமாகும் குறிப்பிட்ட நேரத்தில், கிழக்கு அடிவானத்தில் எந்த ராசி உதயமாகிறதோ, அதுவே அந்த ஜாதகரின் லக்னம். லக்னம் என்பது ஜாதகரின் உயிர், உடல் சார்ந்த பிரச்னை, எதிர்ப்புச் சக்தி, அறிவுசார்ந்த செயல்பாடுகள், பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கையை அணுகும் முறையைப் பிரதிபலிக்கிறது. D1 எனப்படும் ராசி சக்கரமே ஜாதகத்தின் முதன்மைச் சக்கரம். ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த ராசியில் உள்ளது, அந்தக் கிரகத்தின் அதிபதி நிலை என்ன, அது எந்த பாவங்களுடன் சுபத் தொடர்பு பெற்றுள்ளது, அதன் ஸ்தான பலம் எவ்வாறு உள்ளது போன்றவற்றை முழுமையாக ஆராய வேண்டும்.

ஒருவரின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் நுணுக்கங்களையும் ஆராய D1 முதல் D60 வரை உள்ள வர்க்கச் சக்கரங்கள் உதவுகின்றன. இதில் முக்கியமானதாகக் கருதப்படுவது 16 வர்க்கச் சக்கரங்கள் ஆகும். அவற்றில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது D9 எனப்படும் நவாம்சம். ஒரு ராசியை ஒன்பது சம பாகங்களாகப் பிரிப்பதே நவாம்சம் ஆகும். ராசி சக்கரத்திற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, நவாம்ச சக்கரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து ஆராய வேண்டும். ராசி சக்கரத்தில் ஒரு கிரகத்தின் வெளிப்புற நிலையைப் புரிந்துகொள்ள முடியும் என்றால், நவாம்சம் அந்தக் கிரகத்தின் ஆழமான பலம், உள்ளார்ந்த செயல்திறன் மற்றும் அதன் உண்மையான பலத்தை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஒரு கிரகம் D1-ல் உச்சம் அல்லது ஆட்சி அல்லது மூலத்திரிகோணம் பெற்றிருக்கலாம் அல்லது அதனுடன் சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையும் பெற்று இருக்கலாம். இதைப் பார்த்தவுடன் அந்த கிரகம் முழுமையாக வலிமையானது என்று முடிவு செய்துவிடக்கூடாது. அந்த கிரகம் D9-ல் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். உதாரணமாக, D1-ல் பலமாக இருக்கும் ஒரு கிரகம் D9-ல் பலவீனமாக இருந்தால், அந்த கிரகம் வெளிப்புற வாழ்க்கையில் பலமாகத் தோன்றினாலும், அந்த கிரகத்திற்குரிய விஷயங்களில் உள்ளார்ந்த தடைகள் அல்லது செயல்திறன் குறைபாடுகள் இருக்கலாம். மாறாக, D1-ல் பலம் குறைந்த ஒரு கிரகம் D9-ல் உச்சம் அல்லது ஆட்சி பெற்றிருந்தால், அந்த கிரகத்தின் பலன் காலப்போக்கில் வெளிப்பட்டு, எதிர்பார்த்ததைவிட நல்ல பலனை அளிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால், ஒரு கிரகத்தின் பலத்தை மதிப்பிடும்போது, “D1 என்ன சொல்கிறது?” என்பதோடு “D9 அதை உறுதிப்படுத்துகிறதா?” என்பதையும் பார்க்க வேண்டும். நவாம்சத்தின் முக்கியமான பயன்பாடுகளின் விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

நவாம்ச லக்கினமும் பொருளாதார மேம்பாடும்

ஒரு ஜாதகரின் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களின் பொருளாதாரம் மேன்மைபடுமா என்பதை நவாம்சம் சொல்லிவிடும். எடுத்துக்காட்டாக முதல் ஒரு பகுதி கஷ்டத்தை மட்டுமே ஜாதகர் பார்த்திருப்பார். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பொருளாதார ஏற்றத்தை படிப்படியாகப் பார்த்து விடுவார். இவற்றை D9 என்கிற நவாம்சம் சொல்லும். ஜாதகக் கட்டத்தில் உள்ள லக்கினம், அவரின் நவாம்ச லக்கினம் எந்த பாவத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதைக் கொண்டுதான் ஜாதகரின் சிந்தனை, அவ்வப்போது மாறும் பொருளாதார நிலை, பக்குவமான மதிநுட்பம், தொழிலின் ஓட்டங்கள், மற்றும் பல்வேறு வளர்ச்சி கோணங்களை வெளிக்கொண்டுவரும். இதுதவிர ஒருவரின் மத கடமைகள், ஆன்மிக கட்டுப்பாடு போன்ற பலவற்றை அம்சத்தில் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக ஒருவரின் ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நெருப்பு ராசியிலிருந்து அதே கிரகம் நவாம்சத்தில் நீர் தத்துவத்தில் இருந்தால் - அவர் பார்க்கப் பயங்கரமாக இருந்தாலும் மனதார நல்ல நிலையில் இருப்பார் என்பது நீர் தத்துவ நிலையில் செயல்படுவார் என்கிறது ஜோதிட சூட்சமம்.

ஏழாம் பாவச் செயல்

நவாம்சத்தின் மூலம் ஒருவரின் கூட்டாளியை மற்றும் நம்முடைய சேர்ந்தே இருப்பவர்களைப் பற்றிக் கூறலாம். நவாம்சத்தில் காணப்படும் சில அமைப்புகள் ஒருவரின் வெளிப்படையாகத் தெரியாத ரகசிய குணங்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை வழங்கக்கூடும். எடுத்துக்காட்டாக ராசியில் ஏழாம் பாவத்தில் உள்ள கிரகம் அல்லது பாவத்தின் அதிபதி சாதாரண நிலையிலிருந்து நவாம்சத்தில் ஆட்சி அல்லது உச்ச நிலையில் இருந்தால், அந்த கிரகத்தின் உள்ளார்ந்த பலம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகக் கூட்டாளி உடன் சிறப்போடு செயல்படலாம். காலப்போக்கில் அந்த கிரகத்தின் நல்ல பலன்கள் வெளிப்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். ஏழாம் பாவம் திருமண பாவத்தோடும் தொடர்பு பெற்றது.

கிரங்களின் பலம் மற்றும் பலவீனம்

உதாரணமாக D1-ல் புதன் உச்சம்; D9-ல் புதன் நீச்சம் என்று வைத்துக்கொள்வோம். D1-ல் புதன் வலிமையாக இருப்பதால், அந்த நபர் வெளிப்பார்வைக்குப் படிப்பாளியாகவும், பேச்சில் வல்லவராகவும், அறிவுத் திறன் கொண்டவராகவும் தோன்றலாம். ஆனால் D9-ல் புதன் பலவீனமாக இருந்தால், அந்த அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதில் உள்ளார்ந்த தடைகள், தெரிந்த தொழிலைச் செயல்படுத்த முடியாத நிலை, சிந்தனையில் குழப்பம் அல்லது அறிவு இருந்தும் அதை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தும். இவர்கள் "புத்தகங்கள் நிறைய வைத்திருப்பார்கள்; ஆனால் படிக்க மாட்டார்கள்" என்று சொல்லலாம். ஒரு ராசி கட்டத்தில் வெளிப்புறமாக அறிவுக்கான அடையாளங்கள் இருந்தாலும், அந்த அறிவை உள்ளார்ந்த முறையில் பயன்படுத்தும் திறன் குறைவாக இருக்கலாம் என்பதை நவாம்சம் சொல்லிவிடும்.

பகுதி 2

திருமண வாழ்க்கை

ஒருவரின் திருமணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையை எளிதாக பிரதிபலிக்கும் கண்ணாடி இந்த நவாம்ச கட்டம். ஒருவரின் வாழ்க்கை முறையில் முக்கியமான கட்டத்தைத் தாண்டிய பிறகு, நவாம்ச லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு பலன்களை ஆராய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, ஒருவரின் திருமண வாழ்க்கை, திருமணத்திற்குப் பிந்தைய பொறுப்புகள், திருமணத்திற்குப் பிந்தைய குணமும் மனநிலையும் வாழ்க்கையை அணுகும் விதம் மற்றும் துணைவரின் பங்கு ஆகியவற்றை நவாம்சம் மூலம் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும், வாழ்க்கைத் துணை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், தம்பதியரின் சந்தோஷம், பரஸ்பர புரிதல், பொறுப்புகள், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றையும் நவாம்சம் மூலம் ஆராயலாம். எடுத்துக்காட்டாக ஒருவரின் ஏழாம் பாவத்தைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன், அது நீச்சம் என்று வைத்துக்கொள்வோம் அவர் நவாம்சத்தில் ஆட்சி பெற்று பலம் பெற்றால் அவரின் வாழ்க்கை நிலை உயரும். சுக்கிரன் நீச்சம் என்பது சொத்து சுகம் இல்லாத நிலை அல்லது குறைவான நிலையைக் குறிக்கும். அவர் திருமணத்திற்குப் பிறகு கணவனோடு குடும்பத்தோடு சேரும் நிலையில் பொருளாதார உயர்வுடன் நிலைத்து வாழ்வார். முக்கியமாக ராசிக்கட்டம் வைத்து எதனையும் தீர்மானிக்க முடியாது.

நவாம்ச சக்கரத்தின் நிலையே உண்மையான எதிர்கால நிலை என்று சொல்லலாம். எனவே, ராசி ஜாதகம் ஒருவரின் வெளிப்புற அடிப்படை நிலையை எடுத்துக்காட்டினால், நவாம்சம் குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையின் ஒரு பகுதியின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான அம்சமாகும். இது தவிரத் திருமண பொருத்தம் பார்க்கும்போது ராசி மற்றும் நவாம்சத்தில் - குரு ஆணிற்கு பலமில்லாமல் இருந்தால், பெண்ணிற்கு குரு ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் நல்லது. இந்த மணமகன் அவரின் தாம்பத்திய வாழ்க்கை பிறகு உச்ச நிலைக்கு அடைவார் என்பது விதி. நவாம்ச லக்கினம் ஆண் பெண் ஜாதகத்தில் - திருமண பொருத்தத்தில் சஷ்டாங்கமாக வரக்கூடாது.

வர்கோத்தமம் : ராசி கட்டத்தில் உள்ள கிரகம் D9-ல் அதே ராசி பாவத்தில் நின்று இருந்தால், அதனை வர்கோத்தமம் என்று கூறுவர். ஒருவரின் குறிக்கோளின் அடைய முடியுமா என்பதை வர்கோத்தம கிரகம் சொல்லிவிடும். எடுத்துக்காட்டாக செவ்வாய் புனர்பூசம் 4 நட்சத்திர காலில் கடகத்தில் நிற்கிறார் என்றால், அவர் நவாம்சத்தில் அதே கடகத்தில் வர்கோத்தமம் பெறுவார். இவருக்குச் செவ்வாய் நீச்சம் என்பதால் வேலையில் தைரிய குறைவு , நிலம்/ வீடு வாங்க விற்க பிரச்னை ஏற்படும் மற்றும் சகோதரி இணக்கம் குறைவு என்பது ராசி கட்டம் சொல்லிவிடும். ஆனால் நவாம்சம் உண்மை நிலை என்ன சொல்லுகிறது என்றால் இவரின் முயற்சிக்கு இந்த பிரபஞ்சம் தன் கதவுகளைத் திறந்து இருக்கும். இவரின் தைரியம் எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது மட்டுமே வெளிப்படும். முக்கியமாக இவர் தன் திறமையால் வீடு மனை வாங்கும் நிலை இருந்துகொண்டே இருக்கும். அதுதவிர தன் சகோதர சகோதரிகள் பார்க்க அன்பில்லாதது போல் இருந்தாலும், அவர் தன் உடன்பிறந்தவரோடு மனதார இணக்கமாக இருப்பார் என்பதை நவாம்சம் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடும். D1-ல் சராசரி நிலையில் இருக்கும் ஒரு கிரகம், இது அந்த கிரகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தும் அதோடு ஒரு வயதிற்கு மேல் தன் லட்சியத்தையும் அடைவார்கள்.

ரகசியங்களை வெளிப்படுத்தும் நவாம்சம்

D1 ஒருவர் உலகிற்கு காட்டும் வெளிப்புற முகத்தைக் காட்டினால், D9 அந்த முகத்திற்குப் பின்னால் இருக்கும் ஆழமான உண்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கண்ணால் பார்ப்பதற்கு வெளியில் நல்ல நிலையில் இருக்கும் தேங்காயின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை உடைக்காமல் அறிய முடியாததுபோல், ராசியில் வெளிப்படையாகத் தெரியாத பல நுணுக்கமான உண்மைகளை D9வெளிப்படுத்துகிறது. ஒருவர் வெளியில் மிகவும் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் தோன்றலாம். ஆனால், அவருடைய உள்ளார்ந்த நிலையில் பயம், குழப்பம் அல்லது தயக்கம் இருக்கலாம். அதேபோல், வெளியில் அமைதியாகத் தோன்றும் ஒருவர், உள்ளுக்குள் மிகுந்த மனவலிமையுடனும் உறுதியுடனும் இருக்கலாம்.

ஒருவரின் உடலுக்குள் இருக்கும் பிரச்னைகளை X-Ray ஸ்கேன் மூலம் அறிய முடியும். அதுபோல, ஜாதகரின் வெளிப்புறத் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உள்ளார்ந்த உண்மையான நிலையை அறிய உதவும் X-Ray போன்றது நவாம்சம். ராசி மற்றும் நவாம்சத்தை இணைத்துப் பார்க்கும்போது, ஒருவரின் வெளிப்புற வாழ்க்கைக்கும் உள்ளார்ந்த வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடுகள், மறைந்திருக்கும் குணங்கள், மனவலிமை மற்றும் வெளிப்படாமல் இருக்கும் திறன்கள் ஆகியவற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதனால், “நவாம்சம் என்பது ஜாதகரின் வெளிப்புற தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உள்ளார்ந்த உண்மைகளை வெளிப்படுத்தும் ஜாதகத்தின் X-Ray” என்று கூறலாம்.

"ராசி இருக்கு, தாசில் பண்ண அம்சம் இருக்கு, கழுதை மேய்க்க” என்பது ஜோதிடத்தில் ஒரு வகையான நகைச்சுவையான பழமொழி. இதற்கு ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டம், தாசில்தார் போன்ற அதிகாரமிக்க பதவி மற்றும் அரசாங்க உயர் பதவி என்பது ராசியில் காட்டும். ஆனால் அது அம்சத்தில் அந்த ஜாதகருக்கு எந்த உயர் பதவிக்கும் அந்த யோகம் கிட்டாது. அதுதவிர ஒரு சிலர் அந்த நல்ல யோகத்தைப் பயன்படுத்தாமல், தகுதிக்குக் குறைவான அல்லது சாதாரணமான வேலையில் இருப்பதை நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறது. இந்த பழ மொழியில் தாசில்தார் என்ற பல்வேறு அதிகாரமிக்க பதவி என்ற நிலை அம்சத்தில் இருக்க வேண்டும். அம்சத்தில் அந்த கிரகம் பலம் இல்லை என்றால் இறுதியில் கழுதை மேய்க்கும் நிலைக்குச் சொற்ப வருமானம் ஏற்படும் என்று மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.

D1 → அடிப்படை நிலை | D9 → உள்ளார்ந்த பலம்:

D1 (ராசி) ஒரு கிரகத்தின் வெளிப்புற நிலை, அடிப்படை பலம் மற்றும் வாழ்க்கையின் பொதுவான போக்கைக் காட்டுகிறது. D9 (நவாம்சம்) அந்தக் கிரகத்தின் உள்ளார்ந்த பலம், நுணுக்கமான செயல்திறன் மற்றும் அதன் பலன்களின் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. D1-ல் கிரகம் வலிமையாக இருந்தாலும், D9-ல் அதன் நிலையும் வலிமையாக இருப்பது முக்கியம்.

ஏனெனில் D1-ல் தெரியும் பலன் மட்டுமே வாழ்நாள் முழுவதும் ஒரே அளவில் செயல்படும் என்று கூற முடியாது. D9-ல் கிரகம் நல்ல நிலையில் இருந்தால், அது குறிக்கும் அறிவு, திறமை, குணம் மற்றும் செயல்திறன் நிலைத்தன்மையுடன் வெளிப்பட உதவும்.

எனவே, D1 இல்லாமல் D9-ஐ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; D9 இல்லாமல் D1-ல் காணப்படும் கிரக பலத்தின் ஆழத்தையும் முழுமையாக மதிப்பிட முடியாது. குறிப்பாகப் பரிவர்த்தனை, வக்ரம் போன்ற சிறப்பு நிலைகள் இருந்தால், அவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்தே ஜாதகப் பலனைத் தீர்மானிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.