பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு!மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! - ஐஐடி தில்லி மண்டலம் முதலிடம்!!பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்புதிருச்சியில் முதல்வா் விஜய்யின் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
/

மகா பெரியவாவின் ஜாதகம் வீட்டில் வைத்து வழிபடலாமா?

மகா பெரியவாவின் ஜாதகம் பற்றி..

News image

மகா பெரியவா - file photo

Updated On :1 ஜூன் 2026, 1:36 pm IST

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜாதகத்தை நாம் வீட்டில் வைத்து பூஜை செய்வது, நம் குடும்பத்திற்கு ஒரு ஆன்மிக பரிபூரண வழிகாட்டியாக அமையும். ஒருசிலர் வீட்டில் ஒருவர் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலே, அந்தக் குடும்பம் மிகுந்த பாக்கியம் பெற்றதாகக் கருதுவார்கள். இந்த பரமாச்சாரியாரின் ஜாதகம் உயர்ந்த ஆன்மிக சக்தி, துறவறம், ஞானம் மற்றும் உலக மறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் மகானின் ஜாதகமாகும்.

மகா பெரியவா 20 மே 1894 வைகாசி தமிழ் மாதம், விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர். பெரியவாவின் ஜாதகத்தில் கிரகங்கள் பலமுடன் அமைந்துள்ளதுடன், அஷ்டவர்க்கத்தில் சுபர் அதிக பரல்களைப் பெற்று வலுவாக இருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இதற்கு மேலாக, இவருக்கு கஜகேசரி யோகம், சுப பரிவர்த்தனை, புத ஆதித்த யோகம், துறவற யோகம், ஆதியோகம், ஞான யோகம், மற்றும் பல்வேறு ராஜ யோகங்களும் அமைந்துள்ளன. பல அரிய யோகங்களைத் தாங்கிய இந்த ஸ்ரீ சுவாமிநாதனின் ஜாதகக் கட்டத்தை இங்குப் பார்ப்போம்.

மகா பெரியவாவின் ஜாதகம்

மகா பெரியவாவின் ஜாதகம்

பெரியவா பிறந்தது சிம்ம லக்கினம். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மக்களின் மரியாதை, தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் தன்மை இவர்களிடம் இயல்பாகவே காணப்படும். ஆன்மிக குருவாக உயர்வதற்கான பல அம்சங்களும் உள்ளடங்கியுள்ளது. சூரியன் பலமுடன் இருந்து, சுப கிரகங்களின் ஆதரவும் சேர்ந்தால் உயர்ந்த நிலை, காந்த ஈர்ப்பு, தைரியம், தன்னம்பிக்கை, அன்பான பேச்சு, செயல்களில் திடநிலை போன்ற பல சிறப்புகள் உருவாகும். இவை அனைத்தும் சிம்ம லக்கினத்தின் முக்கிய காரகங்கள். லக்கினாதிபதியான சூரியன் பலமுடன் இருப்பதும், லக்கின சாரதிபதி சுக்கிரன் மறைந்து உச்ச பலம் பெற்றிருப்பதும் இவருக்கு உலகளாவிய புகழையும் தனித்துவமான பெருமையையும் அளித்துள்ளது.

பெரும் கூட்டத்தில் இருந்தாலும் தனித்து வெளிப்படும் ஆளுமை இவருடைய முக்கிய சிறப்பாகும். பெரியவா தமது பார்வையாலும் அமைதியான ஆன்மிக ஆற்றலாலும் அனைவரையும் வசப்படுத்தக்கூடியவர். அஷ்டவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் தங்களுடைய சுயவர்க்கங்களில் அதிக பரல்களைப் பெற்று வலுவாக அமைந்துள்ளன.

ஜாதகத்தில் ஒன்று மற்றும் 12ம் பாவங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டாலோ அல்லது பரஸ்பர பார்வையில் இருந்தாலோ, அந்த ஜாதகரின் வாழ்க்கை தனக்காக அல்லாமல் பிறருக்காக வாழ்வார்கள் என்பது ஜோதிடக் கருத்தாகும். அதன்படி, சூரியன் (1 பாவம்) மீது சந்திரனின் (12 பாவம்) பார்வை அமைந்திருப்பது, சுவாமிகளை லௌதிக வாழ்க்கையைத் துறந்து மக்களுக்காக வாழ்ந்த பரம்பொருள். லக்கினாதிபதியும் ராஜகிரகமான சூரியனின் பார்வையில் சந்திரன் ஒளிர்வது மிகச் சிறப்பான அம்சமாகும். ஜோதிடத்தில் சூரியன் - சந்திரன் இணைப்பு சிவசக்தி ஒளியாகக் கருதப்படுகிறது. இது ஆன்மிக ஒளி, மனத் தூய்மை மற்றும் தெய்வீக காந்த ஈர்ப்பை வெளிப்படுத்தும் அமைப்பாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், வேதம், உபதேசம் மற்றும் பூர்வபுண்ணியத்தைக் குறிக்கும் குரு புதனுடன் சுபபலத்துடன் அமைந்ததால், இவர் ஞான பிரகாசமாக விளங்கினார். அதோடு, சுபக் கிரகமான குருவின் பூர்வபுண்ணிய பார்வையில் சனி–கேது தொடர்பு ஏற்பட்டதால், பிறரின் கர்ம வினைகளைத் தணிக்கும் அருமருந்தாக அவர் திகழ்ந்தார். இந்த அமைப்பு அபூர்வமான ராஜயோகம் பெற்ற மகானின் ஜாதக அமைப்பாக வெளிப்படுகிறது. குறிப்பாக இந்த திரிகோண சேர்க்கை, சாஸ்திரங்களில் அபார வேத அறிவுடன் கூடிய ஆன்மிக ஆற்றல். குருவின் தனித்துவம் மற்றும் உயர்ந்த தர்ம நெறி ஆகியவற்றை அளிக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படுகிறது. அதனால் தான், இன்றளவும் அவரின் புகழும், ஆன்மிக ஒளியும் உலகம் முழுவதும் பரவி மக்களின் மனங்களில் நிலைத்திருக்கிறது.

ஜாதகத்தில் லக்கினத்தில் குறைவான பரல்கள் அமைந்திருப்பதுடன், 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சனி - கேது போன்ற துறவற கிரகங்களின் தொடர்பும் காணப்படுகிறது. இது குடும்ப வாழ்க்கையில் பற்றின்மை மற்றும் உலக இன்பங்களில் விருப்பக் குறைவை வெளிப்படுத்தும் அமைப்பாகும். மேலும், லக்கினத்திற்கு 7-ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பதும், அதன் அதிபதியான சனி 8-ம் வீட்டுத் தொடர்பைப் பெறுவதும் இல்லற வாழ்க்கையில் சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், குருவின் வலிமையும் உயர்ந்த ஆன்மிக யோகங்களும் காரணமாக, மகா பெரியவாவிற்கு இல்லற அனுபவங்கள் அமையாமல், சிறுவயதிலேயே துறவற பாதை அமைந்தது. வக்ர சனி-கேது சேர்க்கை குடும்பப் பற்று மற்றும் உலக ஆசைகளை முற்றிலும் துறந்த நிலையையும் காட்டுகிறது. அதனால் மகா பெரியவா எளிமை, தவம், கட்டுப்பாடு மற்றும் ஆன்மிக ஒழுக்கத்தின் உச்சமாக வாழ்ந்தார் என்று கூறலாம்.

விருச்சிக ராசியில் பிறந்த இவர் பொதுவாக தன்னம்பிக்கை, துணிவு, மனவலிமை கொண்டவர்களாக, உண்மையைப் பேசும் தன்மை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, விசுவாசம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை இவர்களின் முக்கிய சிறப்புகள். நல்லவர்களுடன் மட்டுமே நட்பு கொள்ளும் இயல்பும், ஆன்மிக ஈர்ப்பும், பிரபஞ்ச ரகசியங்களை உணரும் ஆற்றலும் இவர்களிடம் காணப்படும். நான்காம் வீட்டில் சந்திரன் திக்பலம் பெற்று, பூர்வபுண்ணிய பாவத்தை நோக்கி அமைந்திருப்பது மிக உயர்ந்த ஆன்மிக அருளை வெளிப்படுத்துகிறது. அன்னையின் அருளைப் பெற்ற சிறந்த சீடராக அவர் விளங்கினார்.

உலகத்தை ஆளும் தாய் காமாட்சியின் கரம் பிடித்து நடந்தவர். மேலும், மக்களிடம் காஞ்சி காமாட்சியின் கருணை ரூபமாகவே காட்சியளித்தார். சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த இவர் சனியின் கோட்பாடுகளான உழைப்பு, ஒழுக்கம், தவநெறி, சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பின்பற்றினார்.

இரண்டாம் பாவம் வாக்கு, குடும்ப உறவு மற்றும் வாழ்வியல் மதிப்புகளைக் குறிக்கும் பாவமாகும். புதனின் வீட்டில் சனி-கேது அமைந்திருப்பது தத்துவ ஞானம் மற்றும் கர்ம வினைகளை நீக்கும் வழியைக் காட்டும் நபராக உருவாக்கும் அமைப்பாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டின் அதிபதியான சனி, கேதுவுடன் இணைந்திருப்பது இல்லற பந்தத்தில் பற்றின்மை மற்றும் துறவற யோகத்தை ஏற்படுத்தும் முக்கிய அமைப்பாகும்.

கேது, தனது செயல்களில் ஆன்மிக ஞானத்தை வெளிப்படுத்துவார். அது பெரியவாவின் வாழ்க்கையில் சனியின் கர்ம வழியாக வெளிப்பட்டது. மேலும், கேது கன்னியில் இருப்பது ஒரு வித சுபபலத்தையும் அளிக்கிறது. குரு, வக்கிர சனி, கேது ஆகியவை 1, 5, 9 திரிகோண பாவங்களோடு தொடர்புகொள்ளும்போது சன்னியாச யோகம் வலுப்பெறும் என்பது ஜோதிட கூற்று. அதனால், அவர் தாமே குருவாக இருந்து மக்களுக்கு வேண்டிய அருளையும் ஞானத்தையும் வழங்கினார்.

சுக்கிரன்-குரு பரிவர்த்தனை, தெய்வீக ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்தும் அமைப்பாகும். எட்டாம் வீட்டில் சுக்கிரன்-ராகு சேர்க்கை சாதாரண மனிதர்களுக்குச் சிக்கல்களைத் தரக்கூடியதாக இருந்தாலும், உயர்ந்த ஆன்மிக ஜாதகங்களில் அது உலகப் பற்றின்மையை அளிக்கக்கூடும். மூன்றாம் மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றதால், அவர் ஏற்ற பொறுப்பில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, காஞ்சி காமகோடி பீட அமைப்பின் 68-வது பீடாதிபதியாக நிலைத்து வெற்றி பெற்ற மாபெரும் குருவாக நீண்ட நாள் வாழ்ந்தார். உச்ச பலம் பெற்ற சுக்கிரனுடன் ராகு சேரும்போது பொதுவாக உலக ஆசைகள் அதிகரிக்கலாம். ஆனால் இங்கு அவை 8ம் வீட்டில் மறைந்து இருப்பதால், பொன், பொருள் மற்றும் சுவை உணவு ஆகியவற்றில் எந்த ஈர்ப்பும் இல்லாத மாபெரும் துறவியாக அவர் விளங்கினார். உணவில் கூட உப்பும் சுவையும் இன்றி எளிமையாக உண்டு வாழ்ந்தார்.

ஆறாம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பது கடுமையான ஒழுக்கம் கலந்த பொதுச் சேவையையும், எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் அளிக்கிறது. லக்கினாதிபதியான சூரியன், சந்திரனின் பார்வையில் இருப்பதால், பௌர்ணமி நிலவைப் போன்ற ஒளிமிக்க ஆன்மிக பிரகாசம் அவரிடம் வெளிப்பட்டது. பத்து என்பது தொழில் பாவம். இங்கு தர்மப்பணியையும் குறிக்கும் கிரகங்களான சூரியன், புதன் மற்றும் குரு நல்ல நிலையில் அமைந்திருப்பது, சாதாரண வாழ்க்கைக்காக அல்லாமல் உலகிற்கு ஆன்மிக ஒளி வழங்கவும், தர்மத்தைக் காக்கவும், மக்களின் கர்ம துயரைக் குறைக்கவும் பிறந்த தெய்வீக ஜாதக அமைப்பாகக் கருதப்படுகிறது.

பெரியவா ஜாதகத்தில் ஆயுள் காரகனான சனியின் நேரடிப் பார்வை அஷ்டமாதிபதி குருவுடன் தொடர்பு கொண்டதுடன், 8ம் வீட்டிற்கு அஷ்டவர்க்கத்தில் 35 பரல்கள் அமைந்திருப்பது நீண்ட ஆயுளை வழங்கும் சிறப்பான அமைப்பாகும். அதனால் அவர் சுமார் நூறு ஆண்டுகள் பரிபூரண ஆயுளுடன் வாழ்ந்தார். சூரியன்-குரு 1 மற்றும் 8ம் பாவங்களின் சேர்க்கையாக அமைந்ததால், மகா சுவாமிகள் குரு மகாதிசை, சூரிய புத்தி எனும் மாரக காலத்தில் இறைவனடி சேர்ந்தார் என்று ஜோதிடக் கருத்து.

இந்தப் பிரபஞ்சத்தில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரின் குறைகளையும் தீர்த்து வைத்து, சநாதன தர்மத்தை நிலைநிறுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டும் அறிவுரைகளை வழங்கியவர் மகா பெரியவா. அவருடைய அருள்வாக்குகள் இன்றும் பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன. அதனால் தான் பக்தர்கள் அவரை "நடமாடும் தெய்வம்" என்றும், அன்னை காமாட்சியின் நேரடி அருளுருவம் என்றும் கருதி வணங்குகின்றனர். மகா பெரியவாவின் ஜாதக பலன்களை விட, அவருடைய தபஸ் சக்தியே மேலோங்கியதாக இருந்தது என்பதே உண்மை.

மகா பெரியவாவின் ஜாதகத்தில் பல்வேறு யோகங்களும் சிறப்பு அம்சங்களும் பொருந்தியிருப்பதால், இவருடைய ஜாதகத்தை நிச்சயம் வீட்டில் வைத்து வழிபடலாம்.

மின்னஞ்சல் - vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.