மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பங்குனி உத்திர சிறப்புகள் ஒன்றா இரண்டா..!

பங்குனி உத்திர திருநாளின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்...

News image

பங்குனி உத்திரம்

file photo

Updated On :31 மார்ச் 2026, 7:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். திருமணமாகாத இரு பாலரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால் திருமணப்பேறு அருளக் கிடைக்கும்.

எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது.

அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு?

புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். இதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்களில் இருக்கின்றன.

தமிழ் மாத கடைசி மாதமான பங்குனியில், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தைக் கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.

சந்திரன் பௌர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பௌர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

உத்திர நட்சத்திர நாயகன்

அதிபதி சூரியன் அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இந்நாளில்தான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டுதோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இந்தநாளில்தான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில்தான் மணம் புரிந்துகொண்டார்.

மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பார்வதி-பரமேஸ்வரர், சீதாதேவி-ஸ்ரீராமர், இந்திராணி-தேவேந்திரன், இருபத்தேழு நட்சத்திரங்களில் சந்திரன் ஆகியோரின் திருமணங்கள் நடந்தேறியது இந்தப் பங்கு உத்திரத்தன்றே.

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது, மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது, சரஸ்வதி பிரம்மதேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதெல்லாம் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்யத் தேர்ந்தெடுத்தது, காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது, ராமர் சீதையை மணந்தது, லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது, திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது, ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது, அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.

துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளான இந்திரன்

கோபத்திற்குப் பெயர் போனவர் துர்வாச முனிவர். இவர் வந்து கொண்டிருந்தபோது, அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருந்தது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வந்தார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வந்தான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்கக் கேட்க, இதனால் ஏற்பட்ட பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது. துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா!' உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்தப் பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத்தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர் மாலையைப் பிரசாதம் என்று வணங்கி வாங்கிக் கொள்வதா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனாலும், கொடுப்பவர் துர்வாசர் என்பதால் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு அலட்சியமாக தன் கையால் தொடாமல் அங்குசத்தால் ஏந்தி யானையின் தலைமீது போட்டான். யானையோ இந்திரனுக்கும் மேலான அலட்சியத்துடன் இருந்தது.

ஆம், தன் தலையில் வைக்கப்பட்ட மலர் மாலையை உடனே தும்பிக்கையால் இழுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்துத் துவைத்து விட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது. தேவேந்திரா, தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உனக்கு ஆணவம் கொண்டாயே!. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவரின் சாபத்தின்படி இந்திர லோகத்திலிருந்த எல்லாச் செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் பதறிப் போனார்கள். உடனே எல்லோரும் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள்.

இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டனர். நாள்கள் பல சென்றன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால், திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது.

எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கியது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாளே பங்குனி உத்திரத் திருநாளானது. அன்னை பாற்கடலிலிருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் அணிவித்தாள். இதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்க நாயகித் தாயாருடன் சேர்ந்த திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடையாது.

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றும். எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவே நமக்கு வருகிறது.

இந்த நன்னாளில் பக்தர்கள் விதவிதமாக கவடி எடுத்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். முருகர் கோயிலில் மட்டுமன்று அனைத்து கோயில்களிலும் இந்த நாள் திருவிழாக் கோலமாகவே காணப்படுகிறது.

குறிப்பு: 2026 பங்குனி உத்திரம் - மார்ச் 31 மாலை 3.57 முதல் ஏப்ரல் 1 மாலை 4.37 வரை.

Summary

Panguni Uthiram is a highly auspicious day for divine worship. If unmarried individuals—both men and women—observe a fast and offer prayers on this day, they will be blessed with the boon of marriage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.