தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு - தல பெருமைகள்!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு - தல பெருமைகளைப் பற்றி...

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.

Published On :

உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு மற்றும் தல பெருமைகள் பற்றிப் பார்க்கலாம்.

மதுரை நகரின் எல்லைகளும் பெருமையும்

பழங்காலப் பாண்டிய நாடு இக்காலத்து மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களையும், புதுக்கோட்டையில் வெள்ளாற்றுக்குத் தெற்கில் உள்ள நிலப்பரப்பையும் கொண்டு விளங்கியது. பாண்டிய நாட்டின் தென் எல்லையாக குமரிமுனையும், தென்வெள்ளாறு வட எல்லையாகவும், வங்கக்கடல் கிழக்கு எல்லையாகவும், திருவிதாங்கூர் - கொச்சியாகிய கேரள மாநிலப் பகுதி மேற்கு எல்லையாகவும் அமைந்திருந்தன. மதுரை மாநகரம் சங்ககாலந்தொட்டு பாண்டியரின் தலைநகராகவும், கொற்கை துறைமுகப்பட்டினமாகவும் விளங்கின.

“வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறும் நல்லுலகம்”

எனப் போற்றப்படுகிறது. உலக வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செலுத்திய பெருமை தமிழர்களுக்கு உண்டு; குறிப்பாக பாண்டியர்களுக்கு உண்டு. சங்க காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பாண்டியர்கள் மதுரையை ஆட்சி செய்தனர்.

மதுரை என்றாலே கோயில் நகரம், அதுவும் விழா நகரம் என்ற முக்கியத்துவம் பெற்றது. வருடத்தின் 365 நாள்களும் ஒரு விழா நடைபெறும் மகத்துவம் மிக்கது மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில்.

வரலாற்றுச் சான்றுகளும் ஆட்சி முறைகளும்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் சிவாலயம் வழிபாட்டில் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற தமிழ் இலக்கியங்களில் மதுரை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சங்ககாலத் தலைநகரமாக விளங்கிய மதுரைக்கு பாண்டியர்கள், சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் எனப் பலர் ஆட்சி செய்துள்ளனர்.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் மதுரையில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி பாண்டிய ஆட்சியை நிறுவினான். கி.பி. 1220-ஆம் ஆண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் பாண்டியர்களின் புதிய சிறப்பு யுகம் தொடங்கியது. தான் வென்ற சோழ நாட்டை திரும்பவும் சோழ மன்னன் ராஜராஜ சோழனுக்கு வழங்கி அருள் புரிந்தான். தமிழ் நிலத்து அரசனான பாண்டிய அரசனே ஆதிகால கோபுரங்கள் கட்டத் தொடங்கினான்.

கல்வெட்டுகள் மூலமாக அறியப்படும் செய்தி யாதெனில், பிற்கால பாண்டியர்களான கோச்சடைப்பர்மன் குலசேகர பாண்டியன் (ஆட்சிக் காலம் கி.பி. 1190 - 1218) காலத்தில் கோபுரங்கள் அமைக்கப்பட்டதாகவும், இவன் கட்டிய கோபுரம் 'எழுநிலை கோபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்கோயில் கோபுரங்களும் கொடைகளும்

திருப்புலியான் தளி சிகரநாதர் கோயில் கல்வெட்டில், இக்கோயில் கோபுரம் 'மதுரையைக் கொண்ட கோபுரம்' என அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் கிழக்குக் கோபுரம் கி.பி. 1192-ல் முதலாம் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்ட ஆரம்பித்து முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக்காலத்திலும் பணிகள் தொடர்ந்தன. இதற்கு 'அவனிவேய்ந்த ராமன் கோபுரம்' என்றும் 'சுந்தர பாண்டியன் கோபுரம்' என்றும் இரு பெயர்கள் உண்டு.

கி.பி. 1227-ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் 24 அள கொண்ட 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற அளவுகோல் வழக்கத்தில் இருந்தது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் (கி.பி. 1259) ஹொய்சள மன்னன் வீரசோமேஸ்வரன் பெயரில் சந்திப் பூசை தொடங்கி அதற்காக பல ஊர்களிலிருந்தும் நிலதானமளிக்கப்பட்டது. கி.பி. 1255 - 1261 வரை ஆட்சி செய்த பிற்காலச் சோழர்கள் வரிசையில் வந்த விக்கிரம சோழன் பெயரில் சந்தனக் காப்புக்கும், சந்திப்பூசைக்கும் அண்டநாட்டு துறையூர் தானமளிக்கப்பட்டது.

கி.பி. 1530-ல் விஜயநகர ஆட்சியில் அச்சுதராயர் காலத்தில் சித்திரைத் திருநாள், ஆடித் திருநாள், ஆவணி மூலத் திருநாள், தை திருநாள், வைகாசி விசாகத் திருநாள் ஆகிய விழாக்களுக்கு நெய், உப்பு, நெய், நெல், விளக்கு, எண்ணெய், இளநீர், தேங்காய், பழம் ஆகியவை தானமளிக்கப்பட்டன. சுவாமி சன்னதி இரண்டாம் பிரகார கோபுரத்தை கட்டியவர் விஜயநகர அரசர் அச்சுத தேவராயர் (16-ம் நூற்றாண்டு).

திருப்பணிகளும் வரலாற்று நிகழ்வுகளும்

கி.பி. 1583-ல் வீரப்ப நாயக்கர் கம்பத்தடி மண்டபத்தைக் கட்டினார். கி.பி. 1625-ல் திருமலை நாயக்கர் நெசவுத் தொழில்கள் செய்யும் பஞ்ச கம்பளத்தார்களுக்கு மானியம் வழங்கினார்.

மீனாட்சியம்மன் சன்னதியில் குமரகுருபரர் எழுதிய 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' நூல் அரங்கேற்றத்தின்போது, அன்னை மீனாட்சி சிறுமி உருவத்தில் வந்து திருமலை நாயக்கர் மடியில் அமர்ந்து தனது முத்து மாலையை குமரகுருபரருக்குச் சூட்டிய நிகழ்வு அதிசயமாக நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தான் இறைவனைச் 'சொக்கநாதர்' என்று அழைக்கும் வழக்கம் வந்தது.

சங்கப் புலவர்கள் உக்கிரப் பெருவழுதி, கபிலர், பரணர், ஔவையார் உள்ளிட்ட 49 பேருக்கு திருமேனிகள் வைத்து 'சங்கத்தார் மண்டபம்' ஒன்று இங்கு உள்ளது. கி.பி. 1898-ல் சிவகங்கை சீமை ஜமீன்தார் ராஜா துரைசிங்கம் காலத்தில் நடைபெற்ற திருப்பணியில் முதன்முதலாக மூலவர் பெயர் 'மீனாட்சி சுந்தரேசுவரர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 1514-ல் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ஆட்சியில் அவரது பிறந்த நட்சத்திர நாளில் சிறப்பு பூசை நடத்தப்பட்டது. கோயிலில் பழமையான சித்திரங்களைச் சொல்லித் தருவதற்கும், ஆடல் கற்பித்துத் தருவதற்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான ஊதியத்திற்கு காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியாரால் ஒரு லட்சம் வராகன் தானமளிக்கப்பட்டது.

மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு அதனை சுற்றியிருந்த தெருக்களையும் புதுப்பித்து கி.பி. 1568-ல் விசுவநாத நாயக்கர் புதிய அழகிய மதுரை நகரையை உருவாக்கினார். இன்றைய மதுரை நகருக்கு அடிப்படைத் திட்டம் தீட்டியவர் விசுவநாத நாயக்கரே. ராணி மங்கம்மாளும் பல திருப்பணிகள் செய்தார்.

Story image

வரலாற்றுச் சம்பவம்: கருவறை பாதுகாப்பு (கி.பி. 1310)

கி.பி. 1310-ல் மாலிக் கபூர் படையெடுப்பின் போது, மதுரையை பராக்கிரம பாண்டியன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். படையெடுப்பின்போது கோயில் ஸ்தானிகர்கள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மூலவர் சிவலிங்கத்தையும், மீனாட்சியம்மன் திருவுருவத்தையும் காப்பாற்றுவதற்காக, சுவாமி கோயில் கருவறையில் சிவலிங்கத் திருமேனியை மூடி அதன் மேல் ஒரு இவளிக்கூடு அமைத்து, மணலைப் பரப்பி, கருவறை வாயிலையும் கல்லினால் சுவராக அடைத்து விட்டனர்.

கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை வைத்தனர். படையெடுத்து வந்த வீரர்கள் அதனைச் சிதைக்க முற்பட்டனர். அந்தச் சிதைக்கப்பட்ட சிவலிங்கம் இப்போது இரண்டாம் பிரகாரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 48 ஆண்டுகள் கருவறை அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. பின்னர் விஜயநகர இளவரசர் குமார கம்பணர் படையெடுத்து வந்து வெற்றி பெற்று, கருவறையைத் திறந்த போது, 48 ஆண்டுகளுக்கு முன்னால் பூசிய சந்தனம் மணம் மாறாமலும், பக்கத்தில் வைக்கப்பட்ட இரண்டு வெள்ளி விளக்குகள் சுடர்விட்டு எரிந்து கொண்டும் இருந்ததாகத் திருக்கோயில் தல புராணம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER