
17 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவு: குடமுழுக்கு காணும் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!
17 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவு காணும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் பற்றி...

மதுரை மீனாட்சியம்மன் கோயில்.
வரலாற்றுத் தொன்மை கொண்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் 1481-ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு மட்டும் குடமுழுக்கு நடைபெற்றதாகவும், 1708- ஆம் ஆண்டு சித்திரை 31-ஆம் தேதி சொக்கநாதப் பெருமான் சந்நிதிக்கு மட்டும் குடமுழுக்கு நடைபெற்றதாகவும் குறிப்புகள் உள்ளன.
1877-இல் தை மாதம் 27-ஆம் தேதியன்றும், 1923-இல் ஆனி மாதம் 17-ஆம் தேதியன்றும், 1963-இல் ஜூன் 28-ஆம் தேதியன்றும் இந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன.
1974-இல் ஜூன் 26-ஆம் தேதியன்றும், 1995-இல் ஜூலை
7-ஆம் தேதியன்றும், 2009-இல் ஏப். 8-ஆம் தேதியன்றும் இந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும். இருப்பினும், கோயிலின் உள்ளே உள்ள வீரவசுந்தராயர் மண்டபத்தில், 2018-ஆம் ஆண்டு பிப். 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த மண்டபத்தை பழைமை மாறாமல் மீட்டெடுத்த பிறகு கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டு, வீரவசுந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களைக் கொண்டு 79 தூண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக்கற்கள் வடிக்கும் பணிகள் நடைபெற்றன.
ரூ. 38.3 கோடி செலவில் மதுரை கூடல்செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சிற்பக் கூடத்தில் நடைபெற்ற இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, கடந்த ஆக. 30-ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் வீரவசந்தராயர் மண்டபம் திறக்கப்பட்டது.
கோயில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. கோயில் நிதி, உபயதாரர் பங்களிப்பு என
ரூ. 32.38 கோடியில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா செப். 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறுகிறது.
தல வரலாறு
உமையம்மை தடாதகைப் பிராட்டியாகவும், சிவபெருமான் சுந்தரபாண்டியராகவும், முத்தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் உக்கிரப்பாண்டியராகவும் அருளாட்சியும், அரசாட்சியும் செய்த ஒரே திருத்தலம் மதுரை.
முன்னொரு காலத்தில் மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியன் குழந்தை வேண்டி புத்திரகாமேட்டி யாகம் நடத்தினார். உமாதேவி குழந்தையாக யாகத்தில் இருந்து தோன்றினார். 'மிகை தனத்துடன் பிறந்த குழந்தை, திருமண வயதை அடைந்து தனக்கான கணவனைக் காணும்போது மிகை தனம் மறையும். குழந்தைக்கு தடாதகை எனப் பெயரிடுக' என இறை கட்டளையிட்டது.
தடாதகை போர்க்கலைகளிலும், கல்வி, கேள்விகளிலும் தன்னிகரற்று விளங்கினாள். பருவ வயதை அடைந்த நிலையில், மன்னன் மலையத்துவஜ பாண்டியன் இயற்கை எய்தினார்.
தடாதகைப் பிராட்டியார் பாண்டிய நாட்டின் அரசியாகப் பொறுப்பேற்றார். அவரின் செங்கோல் வழுவா ஆட்சியில் நாடு செழிப்படைந்தது. எண் திசைகள் நோக்கி படையெடுத்துச் சென்றபோது அவரை எதிர்த்தோர் அனைவரும் தோல்வி கண்டனர்.
ஒருநாள் பெரும்படையுடன் தடாதகைப் பிராட்டியார் கயிலையம்பதியை அடைந்தார். அங்கு, பூதப்படைகளையும், நந்திதேவரின் படைகளையும் அன்னை தோல்வியுறச் செய்தார். இதையறிந்த இறைவன் சிவபெருமான் போர்க் கோலம் பூண்டு, அன்னை தடாதகையின் முன் எழுந்தருளினார். சிவபெருமானைக் கண்ட தடாதகைப் பிராட்டியார் பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறியையும் உணர்ந்து, நாணித் தலை குனிந்தாள். அப்போது, தடாதகைப் பிராட்டியின் மிகை தனம் மறைந்தது. இதனால், எதிரே இருக்கும் சிவபெருமானே தனது கணவன் என்பதை அன்னை உணர்ந்தார்.
எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான், 'நீ மதுரைக்குச் செல், இன்றிலிருந்து எட்டாம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம்புரிவோம்' என்று அன்னைக்கு அருளினார். இதன்படியே, இறைவன் சிவபெருமான் தேவர்களும், முனிவர்களும் புடைசூழ சோமசுந்தரராக மணக்கோலம் கொண்டு மதுரைக்கு எழுந்தருளி, அன்னை தடாதகைப் பிராட்டியை மணம் முடித்தார்.
பின்னர், சுந்தரபாண்டியன் என்ற திருநாமத்துடன் இறைவன் சிவபெருமானும், மீனாட்சி என்ற திருநாமத்துடன் அன்னை தடாதகைப் பிராட்டியும் ஆட்சி செய்தனர் என தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் கருவறையில் சுந்தரேசுவரர் சமட்டி லிங்கமாகக் காட்சி தருகிறார். அன்னை மீனாட்சி மரகதத் திருமேனியாக வீற்றுள்ளார். மீனாட்சி அம்மன் தனது வலது கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தியும், இடக்கரத்தைத் தொங்கிவிட்ட நிலையிலும் காட்சியளிக்கிறார். அம்மனின் வலது தோளில் பச்சைக் கிளி அமர்ந்துள்ளது. இடப்பக்கம் சரிந்த கொண்டையுடன், அருள்பொழியும் கண்களுடன் அன்னை காட்சியளிக்கிறார்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண வந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் சிவபெருமான் மதுரையில் திருநடனம் புரிந்து வெள்ளியம்பலத்தை அமைத்தார் என தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் திரு நடனம் புரிந்த ஐந்து தலங்களில் இது ரஜத சபை எனப்படுகிறது.
நடனக்கலைப் பயின்று வெள்ளியம்பல நடராஜப் பெருமானை தரிசிக்க வந்த ராஜசேகர பாண்டியனின் வேண்டுதலை ஏற்று, நடராஜப் பெருமான் இடதுகாலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் புரிந்தத் தலம் என்பது சிறப்புக்குரியது.
பொதுவாக சிவாலயங்கள், பக்தர்கள் முதலில் சிவபெருமானை தரிசித்த பின்னரே இறைவியின் சந்நிதிக்குச் செல்லும் வகையில் இருக்கும். ஆனால், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பக்தர்கள் அன்னை மீனாட்சியை தரிசித்த பின்னரே இறைவனை தரிசிக்கும் வகையிலேயே உள்ளது. இங்கு, அருள்மிகு சுந்தரேசுவரர், அருள்மிகு மீனாட்சி அம்மனின் இடப்புறம் எழுந்தருளி காட்சியளிக்கிறார். தினமும் மீனாட்சி அம்மனுக்கு முதலில் பூஜை நடத்தப்பட்ட பின்னரே சுந்தரேசுவரருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
இறைவன் சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இந்தத் தலம், சமயக் குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய மூவராலும், சேக்கிழார், பரஞ்சோதி முனிவர், குமரகுருபரர், அருணகிரிநாதர் உள்ளிட்ட ஆன்றோர் பெருமக்களாலும் போற்றிப் பாடப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் பலரும் மீனாட்சி சுந்தரேசுவரரர் கோயிலுக்குத் திருப்பணி செய்தனர். பின்னர், நாயக்கவம்சத்து மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். விசுவநாத நாயக்க மன்னனின் தளகர்த்தரான அரியநாதமுதலி, மதுரையிலிருந்த பழைய கோட்டைகள், மதில்களைத் திருத்தி, புதிய கட்டடங்களை எழுப்பித்தார் எனவும், அப்போது கட்டப்பட்டதே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
மன்னர் திருமலைநாயக்கர் இந்தக் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்து, பல கிராமங்களையும், நகைகளையும் கோயிலுக்கு வழங்கினார். புதுமண்டபம், ராயர்கோபுரம், தெப்பக்குளம் முதலியன இவரது ஆட்சிக்காலத்தில் எழுப்பிக்கப்பட்டவையாகும்.
தற்போது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இருப்பினும், தற்போதுள்ள கோயிலின் பெரும்பாலான கட்டடங்கள் கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டுகள் காலத்தவையே ஆகும். மீனாட்சி சுந்தரேசுவரரின் கருவறை மட்டும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
கோயிலின் நூறுகால், ஆயிரங்கால் மண்டபங்களுடன், சிவாகமங்களில் குறிப்பிடப்படும் 25 மூர்த்திகளும், தியான அமைப்புளும், 5 விதமான நிருத்த மூர்த்திகளின் ஸ்தானங்களும், தங்கம், வெள்ளி, செம்பு, சிலை, சுதை என 5 நிலைகளில் அமைக்கப் பெற்ற திருவுருவப் படிவங்களும் இங்கு இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத சிறப்பு.

கோபுரங்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. வெளி மதிலில் திசைக்கு ஒன்றாக உள்ள 4 கோபுரங்கள் முதன்மையானவையாக விளங்குகின்றன. இந்தக் கோபுரங்களின் அடித்தளம் கருங்கல் கட்டுமானத்தைக் கொண்டது.
கிழக்குக் கோபுரம் 153 அடி உயரமும், 65 அடி அகலமும் கொண்டது. 9 நிலைகளைக் கொண்ட இந்தக் கோபுரத்தில் 1011 சுதைகள் உள்ளன. தெற்குக் கோபுரம் 160 அடி உயரமும், 67 அடி அகலமும், 1,151 சுதைச் சிற்பங்களையும் கொண்டுள்ளது. மேற்குக் கோபுரம் 154.6 அடி உயரமும், 63.6 அடி அகலமும், 1,124 சுதைச் சிற்பங்களையும் கொண்டுள்ளது. வடக்குக் கோபுரம் 152 அடி உயரமும், 66.6 அடி அகலமும், 404 சுதைச் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
இவை தவிர, ராயகோபுரம், நாயக்க கோபுரம், நடுக்கட்டு கோபுரம், பலகைக் கோபுரம், இடபக்குறி கோபுரம், கருவறை விமானம், அம்மன்கோயில் சித்திரக் கோபுரம், கடக கோபுரம் உள்ளிட்டவையும் இந்தக் கோயிலுக்கு அழகு சேர்க்கின்றன.
விழாமலிந்த நகரம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டின் 365 நாள்களில் 294 நாள்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாகவே, மதுரையை 'விழவுமலிமூதூர்' எனப் பழமைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா, தெப்பத் திருவிழா ஆகிய மூன்று விழாக்கள் முதன்மையானவை.
இதில், 12 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது. சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளில் நடைபெறும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 10-ஆவது நாள் நடைபெறும் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஆகியவற்றில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
ஆவணி மூலத் திருவிழா 18 நாள்கள் நடைபெறுகிறது. முதல் 7 நாள்கள் சந்திரசேகரர் உத்ஸவம். பின்னர், நாள்தோறும் ஒரு திருவிளையாடலை விளக்கும் ஐதீக விழா நடைபெறும். சிவபெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, தருமிக்குப் பொற்கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்காக அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, மாணிக்கவாசகப் பெருமானுக்காக நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, பாணபத்திரருக்காக விறகு விற்றது ஆகிய திருவிளையாடல்கள் இந்த விழாவில் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும், மீனாட்சி சுந்தரேசுவரரின் பட்டாபிஷேகமும் இந்தத் திருவிழாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகம் மூலம் மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அன்னை மீனாட்சி, அடுத்த 4 மாதங்களுக்கு மதுரையை ஆட்சி செய்கிறார் எனவும், ஆவணி மூலத் திரு
விழாவில் நடைபெறும் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகத்துக்குப் பிறகு அடுத்த 8 மாதங்களுக்கு சுந்தரேசப்பெருமான் மதுரையை ஆட்சி செய்கிறார் எனவும் கோயில் தலவரலாறு குறிப்பிடுகிறது.
- எம். சங்கர்
அந்த 48 ஆண்டுகள்
கி.பி. 1310-இல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, மதுரையை பராக்கிரம பாண்டியன் ஆண்டு வந்தார். முகமதியர் படை புகுந்ததும், இம்மன்னர் மதுரையை விட்டு காளையார்
கோயிலுக்குச் சென்று விட்டார். அப்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஸ்தானிகர்கள் முகமதியர் படையெடுப்பிலிருந்து சிவலிங்கத்தையும், மீனாட்சியம்மன் திருவுருவத்தையும் காப்பாற்றுவதற்காக, சுவாமி கோயில் கருவறையில் சிவலிங்கத் திருமேனியை மூடி, அதன்மேல் மணலைப் பரப்பி, கருவறை வாயிலையும் கல்லினால் சுவராக அமைத்து விட்டனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு...
கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், வேறொரு சிவலிங்கத்தை ஸ்தானிகர்கள் வைத்து விட்டனர். படை வீரர்கள் அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்த சிவலிங்கத்தை சோமசுந்தரர் திருவுருவச் சிலை என்று எண்ணி, அதை கடப்பாரையால் தாக்கி சிதைக்க முற்பட்டனர். அந்த சிவலிங்கம் இப்போது இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
48 ஆண்டுகள் கருவறை அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. பின்னர் குமார கம்பணர் படையெடுத்து, முகமதியர்களை வென்று, கோயில் ஸ்தானிகர்களுடன் வந்து இந்த சிவலிங்கத்தை அகற்றி வைத்து விட்டு, கருவறையின் மேலிருந்த மணல் குன்றை எடுத்துவிட்டு கருவறையை திறந்து பார்த்த போது சொக்கலிங்கப் பெருமானின் திருமேனியில் 48 ஆண்டுகளுக்கு முன்னால் பூசிய சந்தனம் மணம் மாறாமல் இருந்ததைக் கண்டனர். அன்றிலிருந்து நித்திய பூஜைகள் சரியாகத் தொடங்கி நடந்து வருகிறது. திருக்கோயில் தல புராணத்தில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ARUNSS
'MADURAI' என மாறியது
மதுரை என்பது ஆங்கிலத்தில் MADURA என எழுதப்பட்டு ஆங்கிலேயரால் மெஜுரா என்றே நீண்ட காலமாக உச்சரிக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு சிக்கல் உருவானது. மதுரைக்கு வரும் தபால்கள் வடஇந்திய புனித நகரான மதுரா (MATHURA) நகருக்கு தவறுதலாக அனுப்பப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு தினமும் மன உளைச்சல் ஏற்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்பிரச்னை அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் சென்றது. இது குறித்து அப்போதைய நகர்மன்றத் தலைவர் டி.கே. ரமாவுக்கு நேரு ஒரு கடிதம் எழுதினார்.
MATHURAI என்னும் பெயரை சிறிது மாற்றும்படி கோரியிருந்தார். உடனடியாக, கல்லூரி முதல்வர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முக்கியப்புரவலர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை நகர்மன்றத் தலைவர் கூட்டினார். அக்கூட்டத்தில் பண்டித நேருவின் கோரிக்கை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. MATHURAI மற்றும் MADURAI என இரு பெயர்கள் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. மத்திய அரசு இறுதியாக, MADURAI என்பதை தேர்வு செய்தது.
படங்கள்: எஸ். அருண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






