ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

மதுரை - அன்று!

மதுரை நகரையும் மக்களையும் பற்றி 2007-ல் தினமணியின் தங்கத் தமிழகம் சிறப்பிதழில் வெளியான கட்டுரை, தினமணியின் கருவூலத்திலிருந்து...

பேச்சியம்மன் படித்துறை - வடக்கு மாசி வீதி -1949 - தினமணியின் கருவூலத்திலிருந்து...

Published On :

[பழமையின் சுவடுகளும், கிராமத்தின் தடங்களும் முற்றிலும் அழியாத அற்புத நகரம் மதுரை. இன்று புதிய மதுரையைப் பார்க்கும் உங்களுக்கு 65 வருடங்களுக்கு முன்பு மதுரை எப்படி இருந்ததென்று தெரியுமா? இலக்கியங்கள் ஒரு வகையில் வரலாற்று ஆவணங்கள். அந்த நாள் மதுரையை தனது 'புயலிலே ஒரு தோணி' நாவலில் ஜீவசித்திரமாக நம் கண்முன் படைத்தார் எழுத்தாளர் ப. சிங்காரம்.

தமிழின் ஆகச்சிறந்த 10 நாவல்களைப் பொறுக்கினால் இந்த நாவலுக்கு அதில் நிச்சயம் இடம் உண்டு. சிங்காரத்தின் பார்வையில் சித்திரமான அன்றைய மதுரை இதோ - உங்கள் பார்வைக்கு... சிங்காரத்தின் எழுத்தைப்போலவே அந்தக்கால மதுரையை தன் தூரிகையில் சித்திரமாக தீட்டியவர் ஓவிய மேதை மனோகர் தேவதாஸ், அவரது புகழ்மிக்க மதுரை ஓவியங்கள் இப்பக்கத்தை அலங்கரிக்கின்றன]

மதுரை ரெயிலடியிலிருந்து கிளம்பினால் எதிரே மங்கம்மாள் சத்திரம். அங்கேயே தங்கலாம். மாலையில் ஒரு சுற்று, டவுன்ஹால் ரோடு, பீமவிலாஸ் - மதுரையில் முதன்முதலாக, மேசையில் வைத்துப் பலகாரம் தின்னும் பழக்கத்தைப் புகுத்திய கிளப்புக் கடை, மெஜுரா காலேஜ் ஹைஸ்கூல், பெருமாள் கோயில் தெப்பக்குளம் ஒரே நாற்றம்.

எச்சிலை - குப்பை கூளம் - பாசி, மாசி வீதியைக் கடந்ததும் மேலக் கோபுரத் தெரு, விக்டோரியா லாட்ஜ், மில்ட்டேரி ஹோட்டல், முன் திண்ணைச் சுவரோரம் பாய்விரித்து, வட்டக் குடுமி - சந்தனப் பொட்டு - சிவப்புக் கல் கடுக்கன் - சாய வேட்டியராய் முதலாளி சாமிநாத பிள்ளை உட்கார்ந்திருக்கிறார். சிவந்த சிறு கண்கள். ஓயாத வெறுப்புப் புன்னகை, உண்டு வெளியேறுவோர் கொடுக்கும் பணத்தை ஏதோ முனகியவாறே வலக்கையில் வாங்கி, இடக்கையால் பாயைத் தூக்கி அதன் கீழே வீசுகிறார்.

Story image

இப்பால் உடுப்பி ரெஸ்டாரன்ட், அஜீஸ் அத்தர்க் கடை, அனுமந்தராயன் கோவில் தெருக்கள் பிரிகின்றன. ஏப்பை சாப்பைகளை எதிர்பார்த்துச் சண்டியர்கள் வட்டமிடுவர். 'மூணுசீட்டு'க்காரர்கள். பித்தளைச் சங்கிலிகளைத் 'தங்க நகை'யாக்கி 'அவசரத் தேவைக்காகக் குறைந்த விலைக்கு விற்கும்' எத்தர்கள். பண்டாபீஸ். கோபுர வாசல், வியாபார முழக்கம்.

“எத்தெடுத்தாலும் ஓர்ரணா! எத்தெடுத்தாலும் ஓர்ரணா!” சித்திரை வீதிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், பெரிய பயில்வான் படத்தைச் சுவரோரம் சாத்தி வைத்துக் கொண்டு சாலாமிசிரி ஹல்வா விற்பவர்கள்; நோய்க்கும் பேய்க்கும் மந்திரித்து தாயத்து விற்பவர்கள்; தேள்கடி மருந்து விற்பவர்கள்.... கோயில் கூட்டம், பனியாவின் கூக்குரல்.

“ஏக் பனியன் தோ அணா! ஏக் பனியன் தோ அணா!” புதுமண்டபம், வாசல் அருகோ ஆத்தூர் சாயபு பல்பொடி விற்கிறார். முன்னே, நகைச்சுவைப் பரவசமாய் வாய் பிளந்து நிற்கும் கூட்டம், சாயபு பேசுகிறார்.

“என்னடா அது இதுன்னி வித்தியாசம்? பாப்பார வீட்டுச்சாமி சிவப்பாயிருக்குமா, பறைய வீட்டுச்சாமி கறுப்பாயிருக்குமா? துலுக்க வீட்டுச்சாமி தொப்பி போட்டுருக்குமா, வேதக்காரச் சாமி சிலுவை போட்டிருக்குமா? எல்லாம் சாமிதான். எல்லாரும் மனிசன்தாண்டா... ஆனாக்காப் பல்லுப் பொடி அப்படி இல்லையப்பா - பல்லுப் பொடியின்னால் பல்லை உடைச்சு நொறுக்கித் தூளாக்கின பொடியில்லை. பல்லுக்குத் தேய்க்கிற பொடி. ஹிஹ்ஹிஹ்... பல்லுப் பொடியில நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. இது சித்தர்கள் வகுத்த முறைப்படி புடம் போட்டுச் செய்தது.

மதுரை
ரயில்வே ஜங்ஷன் 1948

மதுரை ரயில்வே ஜங்ஷன் 1948

இதுல ஒரு பொட்ணம் வாங்கிக்கிட்டுப் போ, தினசரி தேயி. கடையில் விக்கிற டப்பியில் ஜிகினாக் காகிதம் சுத்தி லேடி படமெல்லாம் போட்ருப்பான். உடலைக் கண்டு மயங்காதே. ஊதுகாமாலை உடைச்சுப் பார்த்தால். 'ஒய்யாரக் கொண்டையாம் தாழ்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும் பேனும்'னி தெருப் புழுதிக்குச் சாயம் போட்டு அடைச்சிருப்பான். ஆமா. நான் சொல்றதைக் கேளு. இதுல ஒரு பொட்ணம் வாங்கிக்கிட்டுப் போ. தினசரி காலையில் காலையில தேயி, பல் அரணை, ரத்தக் கசிவு, வாய் நாத்தமெல்லாம் பஞ்சாய்ப் பறக்கும். இந்தா, ஆளுக்கு ஒரு பொட்ணம் வாங்கு. நான் சொல்றதைக் கேளு... பல்லுப் போனால் சொல்லுப் போச்சு...

நகரங்கள் எவ்வளவு விரைவாய் மாறுகின்றன! 1941-இல் திரும்பிய போது பார்த்த மதுரைக்கும், உயர்நிலைப் பள்ளியில் சேரப் போனபோது பார்த்த மதுரைக்கும் எவ்வளவு வேற்றுமை! லாஸ்ரடோ ஷெனாய், நகராட்சி கமிஷனராக வருவதற்கு முந்திய காலம் அது.

தெருவில் பாதியை, கட்டடங்களுக்கு முன்னே நீட்டிய 'கவர்னர் தட்டி' மறைத்திருக்கும். கழிகளை ஊன்றிப் பலகை அடைத்துச் சாய்ப்புத் தட்டி - கவர்னர் தட்டி- இறக்கியிருப்பார்கள். மேலே ஓட்டுக் கடைகள். பலகைக்குக் கீழே. எச்சில் தொட்டி உரிமையாளர்கள் குடும்பம் நடத்துவர். பிறப்பு - இணைப்பு - இறப்பு எல்லாம் அங்கேயே நடைபெறும்.

பஸ் நிலையம் இருக்கும் இடம் வியாழக் கிழமைச் சந்தைத் திடலாயிருந்தது. செம்மண் உருண்டையிலிருந்து மோட்டார் எந்திரங்கள் வரை, தும்பைச் செடியிலிருந்து புலிப்பல் வரை அங்கே வாங்கலாம்.

எந்த ஊருக்கும் போகும் 'கார்' எங்கிருந்து எப்போது புறப்படும் என்று யாருக்கும் தெரியாது. நகரத் தெருக்களில் எல்லாம் கார்கள் பவனி வரும். பக்கத்துக் கம்பிகளைப் பிடித்துத் தொங்கியவாறு தெருவுக்குத் தெரு வெவ்வேறு ஊர்ப் பெயரைக் கூவிப் பிரயாணிகளை ஏற்றுவர் கார் ஏசண்டுகள். - குறித்த ஊருக்குச் செல்லும் பிரயாணிகள் ஐந்தாறு பேர் ஏறியதும், மற்றவர்களை மூட்டை முடிச்சுகளுடன் எங்காவது ஓரிடத்தில் இறக்கிவிடுவார்கள். முணுமுணுத்தால் அடி விழும். அது லாஸ்ரடோ ஷெனாய், மதுரை நகராட்சி கமிஷனராக வந்து, சென்ட்ரல் பஸ் நிலையம் அமைத்து, எல்லாக் 'கார்'களும் அங்கிருந்தே -இன்னின்ன ஊர்களுக்குச் செல்லும் வண்டிகள் இன்னின்ன இடங்களிலிருந்தே இன்னின்ன நேரங்களில் புறப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்வதற்கு முந்திய காலம்.

அன்று நீர்மோர் தானம் - வக்கீல் புது தெரு

அன்று நீர்மோர் தானம் - வக்கீல் புது தெரு

ஒரே சமயத்தில் ஒரே ஊருக்கு மூன்று நான்கு கார்கள் புறப்பட்டு ஆறு, கண்மாய் வயலில் எல்லாம் இறங்கி ஏறி ஒன்றையொன்று விரட்டிப் பற்றி முந்தும். சின்ன மங்கலம் போன 'கிருஷ்ண ஜெயம்' கார் டிரைவர் 'டாலர்' ராஜமணி அய்யர், முன்ன சென்ற 'சிதம்பர விலாஸ்' டிரைவர் ராமுண்ணி மேனனைப் பீட் அடிப்பதற்காக, கண்மாய்த் தண்ணீரின் குறுக்கே காரை விட்டுக் கரையேறி முந்தியது மோட்டார் உலகத்தில் பிரபலமானதொரு நிகழ்ச்சி.

சோற்றுக் கடைத் தெருவில் சோற்றுக் கடைகள். கடைத் திண்ணைகளில் பெரும் பெரும் அண்டாக்களைத் தங்கம் போல் மினுக்கித் தண்ணீர் நிறைத்துப் பட்டை பட்டையாய் விபூதி பூசிச் சந்தன- குங்குமப் பொட்டிட்டு முக்காலிகளின் மேல் வைத்திருப்பார்கள்.

பக்கத்தில், சட்டை போட்ட ஆள் திருநீற்றுக் கோலமாய்ப் பலகை மீது சம்மணம் கூட்டி உட்கார்ந்து தெருவில் போவோரை ஓயாமல் கூவி அழைப்பார்: ''வாங்க! சுடச் சுடச் சோறு கறிக்குழம்புஞ் சோறு! வாங்க, வாங்க!"

மேற்கத்திப் பார வண்டிக்காரர்கள் வயிறு புடைக்கத் தின்றபின், ஓசி வெற்றிலையும் வாங்கிப் போட்டுக் கொண்டு ஏப்ப முழக்கத்துடன் வெளியேறுவார்கள்.

"சுண்ணாம்பு சேத்திருக்கானப்பா, சோறு எடுக்கலை."

"இதெல்லாம் என்ன கிளப்பு... கிளப்புன்னுச் சொல்றதுக்கு குண்டத்தூர் நாய்க்கர் ஒருத்தர் திண்டுக்கல்லுல நடத்துறாரு. அதான். சாப்பாடுன்னாச் சாப்பாடு, இப்படி அப்பிடியினு சொல்ல முடியாது! தினசரி குடல் கறி, இல்லாட்டி தலைக்கறி, விசாலனுக்கு விசாலன் ராத்திரியில பிரண்டைக் குழம்பு வைப்பார். பாருங்க. அசல் கெளுத்தி மீன் குழம்புதான்!"

இம்பீரியல் சினிமாவுக்கு ஓர் அணா டிக் கெட். மாடியில் இருக்கும் 'சேர்' ஆட்கள் இடையிடையே, கீழே, தரையர்கள் மீது வெற்றிலை எச்சிலைத் துப்புவர். தரைப் பிரபுக்கள் சதைச் சொற்களால் ஏசிக் கண்டனம் தெரிவிப்பார்கள்: "டேய்.....!"

திரையில் எடிபோலோ, டக்ளஸ் பேர் பாங்க்ஸ் படங்கள்-"ஏய்! திரும்பிப் பார்ரா, எதிரி வர்றான்டா..! விடாதே, பிடி, குத்து, நல்லாக் குத்து..! டேய் உதவிக்காரா! ஓடியாடா, ஆக்கிட்காரியை எதிரி தூக்குறான்டா! இந்தா ஆக்கிட்காரன் வந்துட்டான்! குத்து, அப்படிக் குத்து, கும்மாங்குத்துக் குத்து!" விலாத் தெறிக்கச் சிரிக்க வைக்கும் அரைமீசை சார்லி சாப்ளின், கண்ணாடிக்கார ஹெரால்ட் லாயட்... குரலில்லா உருவங்கள் திரையில் கூத்தாடுகின்றன. 'காணத் தவறாதீர்கள், கத்திச் சண்டைகள், ஜம்பிங்குகள், மாஜிக் வேலைகள், காதல் சீன்கள் நிறைந்த மகத்தான படம். 'உதை மாஸ்டர் எடிபோலோவின் சவுக்கடி சீன் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்..."

சின்னத் தகரக் கொட்டகை, பெரிய தகரக் கொட்டகை - கந்தர்வகான கிட்டப்பா: 'நாற்பது வேலி நிலம் இன்னும் நட்டாகவில்லை'. இசையரசி சுந்தரம்பாள்: 'வெட்டுண்ட கரங்கள் வேதனையாக'. தேசபக்தர் விசுவநாத தாஸ்: 'கதர்க் கொடிக் கப்பல் தோணுதே."ராஜலட்சுமி, வேலாம்பாள், ருக்மணிபாய். 'ஹார்மோனியச் சக்ரவர்த்தி' காதர் பாட்சா, 'ஸ்திரீ பார்ட்' அனந்தநாராயண அய்யர், 'ஹிந்துஸ்தான் கவாய்' நடராஜ பிள்ளை; 'பபூன்' சண்முகம், 'காமிக்' சாமண்ணா, 'ஜோக்கர்' ராமுடு. ராஜாம் பாளே ராஜாம்பாளாய் நடிக்கும் 'ராஜாம்பாள்' ஸ்பெஷல் நாடகம். கன்னையா கம்பெனி 'தசாவதாரம்'. 'ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'களின் சவுக்கடி சந்திரகாந்தா, பம்பாய் மெயில், ராஜபக்தி...

வடக்கு மாசி வீதியில் சொக்கர் தேர்.

வடக்கு மாசி வீதியில் சொக்கர் தேர்.

பெரிய பாலம் கட்டுவதற்கு வெள்ளைக் கார என்ஜினீயர் கொடுத்த நரபலி; தலைச் சூலியான பிராமணப் பெண்ணைத் தத்தனேரி சுடுகாட்டில் பலி கொடுப்பதற்காக, நள்ளிரவில் அந்தர விளக்காய்த் தொங்கி அழைத்துச் சென்ற மலையாள மந்திரவாதியை சட்டைக்கார சார்ஜண்ட் பின்தொடர்ந்து போய் அக்கரை இறக்கத்தில் சுட்டுக் கொன்றது; பெரிய சண்டியர் கேருசாகிபை சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அடித்துக் கட்டி கரகரவென்று தெருப்புழுதியில் இழுத்துச் சென்றது. இவையெல்லாம் மாணவர்கள் அச்சவியப்புடன் பேசிக்கொண்ட மர்ம நிகழ்ச்சிகள்.

Story image

மதுரையில்தான் எத்தனை திருவிழாக்கள். சித்திரைத் திருவிழா, பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா... ஆ, மாரியம்மன் தெப்பத் திருவிழா... வண்டியூர்த் தெப்பக்குளத்துக்கும் வைகை ஆற்றுக்கும் இடையே உள்ள தோப்புகளில் விரிப்புகளைப் பரத்தி அமர்ந்து குடும்பம் குடும்பமாய்க் கட்டுணா உண்பார்கள். சிறு வர்கள் துள்ளி ஓடுவர்; பெண்கள் வெற்றிலைச் சிவப்பு வாயால் அதட்டுவார்கள்... மாலையில் குளக்கரை உள்தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எரிய, எண்ணற்ற தங்க வேல்களால் குத்துண்டதுபோல் தண்ணீர் குழம்பி மின்னும். மலர்ந்த பால் நிலவு தென்னை மரக்கொண்டைகளுக்கு மேலேறிக் குளிரொளித் தென்றல் பொழிந்து நிலத்தையும் மானிடரையும் மோகன மயக்கத்தில் ஆழ்த்தும் வேளையில் 'தெப்பம்' புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER