

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை நிறைவையொட்டி ருத்ர ஆவர்த்தி ஹோமும் நாளை செப்.15-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை மற்றும் உலக அமைதி வேண்டி வரலாற்றிலேயே முதல் முறையாக ருத்ர மந்திரத்தை லட்சம் முறை ஒதி பாராயணம் செய்யும் லட்ச ருத்ர பாராயணமும், கோடி அர்ச்சனையும் வருகிற ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. நாளை செப்.15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
தினமும் நாள் ஒன்றுக்கு 100 தீட்சிதர்கள் பங்கேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ருத்ர மந்திரத்தை 22 முறை பாராயணம் செய்தனர். 100 பேர் கோடி வில்வ அர்ச்சனையும் செய்தனர். நிறைவு நாளான நாளை செப் 15-ம் தேதி லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ர நாம ஹோமம் மற்றும் ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. ஹோமத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்லதி, நர்மதா, காவிரி, சிந்து ஆகிய சப்த நதிகளிலிருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹோமத்தை முன்னிட்டு கோயிலில் பொற்கூரை போன்ற அமைப்பில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இன்று மகாபிஷேகம்: ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை (செப்.15-ம் தேதி) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. ஹோமத்திற்கு பின்பு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு சென்று கனகசபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களான பட்டு தீட்சிதர், ராஜா சோமசேகர தீட்சிதர் மற்றும் சென்னையைச் சேர்ந்த காயத்ரி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.