கோயில்களில் சித்ரா பெளர்ணமி திருவிழா

கருவேப்பம்பூண்டி கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த  மகா பக்ரஹா காளிதேவி சிம்மவாஹினி அம்மன்.
சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த  மகா பக்ரஹா காளிதேவி சிம்மவாஹினி அம்மன்.
Updated on
2 min read

கருவேப்பம்பூண்டி கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கருவேப்பம்பூண்டி கிராமத்தில் ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, உலக மக்களின் நன்மை வேண்டி அதிகாலை சிறப்பு யாகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. தேவி சிம்மவாஹினிக்கு 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. 
முன்னதாக, சனிக்கிழமை இரவு ரத ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, தேவி சிம்மவாஹினிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பல்வேறு கிராமத்தினர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
செங்கல்பட்டு கோயில்களில்...
 செங்கல்பட்டு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில்களில் சித்ரா பெளர்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை துணை ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி ஞாயிற்றுக்
கிழமை காலை சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. 
பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் செய்யப்பட்டது. மாலையில் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் இரவு பக்திக் கச்சேரியும் நடைபெற்றன. இரவு வாண வேடிக்கைகளுடன் சக்தி விநாயகர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் வீதியுலா நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் திரளாக வந்து சக்தி விநாயகரை தரிசித்தனர். 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், மேலாளர் நரசிம்மன் மற்றும் கோயில் பணியாளர்கள், விழாக்குழுவினர் உள்ளிட்டோர் செய்தனர். 
இதேபோல், செங்கல்பட்டு பெரியநத்தத்தில் உள்ள சேப்பாட்டியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குழந்தைகள் சுவாமி வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 
இதுபோல், ஓசூரம்மன் கோயில், ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில், கங்கையம்மன் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகர் கோயில், நீதி விநாயகர் கோயில், என்ஜிஓ நகர் சித்திவிநாயகர் கோயில், வல்லம் வேதாந்தீஸ்வரர் குடைவரைக் கோயில், புலிப்பாக்கம் வியாக்ரபுரீஸ்வரர் மலைக்கோயில், காட்டுநாயக்கன்பாளையம் செம்மலை முருகன் கோயில், திருப்போரூர் செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோயில், பாலாம்பிகை மஹாதிரிபுரந்தரி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சித்ரா பெளர்ணமி சிறப்பு நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெற்றன. 
திருக்கழுகுன்றத்தில்....
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ஞாயிற்றுக்
கிழமை மாலை ஆரம்பித்த கிரிவலம் திங்கள்கிழமை காலை வரை தொடர்ந்தது. கிரிவலப் பாதையைச் சுற்றி ஆன்மிக அன்பர்கள் அன்னதானம் செய்தனர். பக்தர்களுக்கு நீர் மோர், தண்ணீர், பால், குளிர்பானம் ஆகியவையும் வழங்கப்பட்டன. சிவனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன் செய்திருந்தார். 
அனுமந்தபுரத்தில்....
இதேபோல், செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள அகோர வீரபத்ர சுவாமி கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்காரம் என இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 
அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் அனுமந்தபுரத்தில் தங்கி, தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோயில் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க உதவினர். 
இது தவிர, பக்தர்கள் ஆட்டோ, வேன், இருசக்கர வாகனங்கள் ஆகியவை மூலம் திங்கள்கிழமை வரை வந்து கொண்டிருந்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், பூசாரி செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
திருப்போரூரில்....
இதேபோல், திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வந்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நற்சோணை, மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்திருந்தனர்.
தேவி கருமாரி அம்மன் கோயிலில்...
 மாதவரம் அருகே, தேவி கருமாரி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி பால்குடப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொளத்தூர், திருமலை நகர் முதல் பிரதான சாலையில் தேவி கருமாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி நடைபெற்ற பால்குடப் பெருவிழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, கருமாரி அம்மனுக்கு 63 மகா அபிஷேகங்கள் நடைபெற்றன. 
இதையடுத்து, உற்சவர் கருமாரி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து பக்தி இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், மாதவரம், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
அருணாதீஸ்வரர் கோயிலில்...
அரையப்பாக்கம் அருணாம்பிகை உடனுறை அருணாதீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி பாலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மதுராந்தகத்தை அடுத்த அரையப்பாக்கத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்து சந்நிதிகளில் உள்ள சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. குளக்கரை கங்கையம்மன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க அம்மனுக்கு சீர்வரிசைப் பொருள்களுடன் 108 சுமங்கலிப் பெண்கள் பால் குடம் ஏந்தி வந்தனர். அவர்கள் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com