
புனகன் என்னும் அசுரன் கடும் விரதமிருந்து தவம் செய்தான். இதனால், புனகனுக்கு நினைத்த நேரத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் ஆற்றலை ஈசனிடமிருந்து பெற்றிருந்தான். புனக அசுரன், ஒரு நாள் புனுகுப் பூனையாக மாறினான்.
பூனையின் குணாதியசத்தில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கருவறைக்குள் சென்றான். அப்போது, புனுகுபூனை தன் உடம்பிலிருந்து, ஒரு வகை வாசனைத் திரவியத்துடனான புனுகு என்னும் நறுமணமான பொருளை சிதற விட்டது. இந்தப் புனுகுவின் வாசனைத் திரவியம் ஈசனுக்கும் பிடித்திருக்க, ஈசன் மகிழ்ந்திருந்தார்.
ஈசனுக்குப் பிடித்தமான வாசனையைப் பரப்பியதன் மூலம், இந்தப் புண்ணிய செயலின் காரணமாக, அந்த புணக அசுரனுக்கு மேலும் ஆற்றல் அதிகரித்தது. இதனால், ஆணவம் பெருத்து தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். இதைத் தாளாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். தேவர்களின் துயர்துடைக்க ஈசன் விரும்பினாலும் வாசனைத் திரவியம் அளித்த புனகாசுரனை வதைக்க விருப்பம் இல்லை.
இதற்கு மாறாக அவனுக்குச் சொர்க்க பதவி அளிக்க முடிவெடுத்தார். அதன்படி அசுரனின் முன் தோன்றிய அண்ணாமலையார், புனுகு பூனையாக மாறி தொண்டு செய்த உனக்கு, வாழும் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்றார். ஈசனே!, நான் உயிரை விடுவதற்கு அஞ்சவில்லை. ஆனால், அதற்கு முன் என் விருப்பம் நிறைவேற அருள்புரிய வேண்டும் என்றார்.
விருப்பத்தைக் கூறு, ஆகுவன அளிக்கிறோம் என்றார் ஈசன். உமக்கு வாசனைத் திரவியமான புனுகு சாத்தும் வழிபாடு எப்போதும் இங்கு நடக்க வேண்டும் என்றார். புனுகணி ஈசன் (புனுகு அணிந்த சிவன்) என்னும் சிறப்பு பெயரும் உமக்கு ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உயிர் நீத்தான்.
இதன்படி, அண்ணாமலையாருக்கு புனுகுப் பூனையின் நினைவாக, சந்தன அபிஷேகத்தின் போது புனுகு சாத்தும் வழக்கம் இப்போதும் இருந்து வருகிறது.
- கோவை.கு.கருப்பசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.