சிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்! யார் அவர்?

ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் எந்த உயரத்தில் இருந்தாலும், அவரை ஒரு படி கீழே தள்ளிவிடுவாராம் சனிபகவான்.
சிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்! யார் அவர்?
Published on
Updated on
2 min read


ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் எந்த உயரத்தில் இருந்தாலும், அவரை ஒரு படி கீழே தள்ளிவிடுவாராம் சனிபகவான். அதிலும், ஏழரை சனி பிடித்துவிட்டால் எந்த வழியிலும் ஜாதகரை சிக்கலில் சிக்கவைத்து விடுவதில் சனி மகாவல்லவர். ஒருவருக்கு ஏழரை சனியில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். ஆனால் கடனை அடைக்க முடியாமல் வாங்கியவர்களிடம் சிக்கி மகா அவஸ்தைப்பட வைத்து விடுவார். மிகவும் தந்திரமாக அவர் காரியத்தை முடித்துக் கொள்ளுவதில் சாமர்த்தியசாலி சனிபகவான். 

சரி, லோக மாதாவான பார்வதி தேவியை சனி எப்படி தன் பிடியில் சிக்கவைத்தார் என்று ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம். 

பார்வதி தேவி இமயமலையில் ஒரு மண்டபம் கட்டி வைத்து விட்டு எல்லா முனிவர்களுக்கும், மகிரிஷிகளுக்கும் அழைப்பு அனுப்பி ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தால். இந்த மண்டபத்தை ஒரு முனிவருக்குச் சுற்றிக் காண்பித்தார் பார்வதிதேவி. மண்டபம் எப்படி இருக்கிறது? என்று கேட்க அதற்கு முனிவர் இந்த மண்டபத்திற்கு சனியின் பார்வை இருக்கிறது. எனவே சனி இந்த மண்டபத்தை இடித்துவிடக்கூடும் என்றார். 

இதனால் அதிர்ச்சியுற்ற பார்வதி தேவி அப்படியா நான் கட்டிய மண்டபத்தை சனி இடித்துவிட்டால் வெகு அவமானம் வந்து சேரும். எனவே, சனி இடிப்பதற்குள் அதை நாம் இடித்துவிட வேண்டும் எனக் கூறினார் பார்வதி தேவி. நான் சனியிடம் பேசிப் பார்க்கிறேன். அதற்கு சனி ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அவன் இடிப்பதற்குள் நாமே இடித்து விடலாம் எனக் கூறினார் பார்வதி. 

அதுவும் சரிதான் ஆனால் நீங்கள் அவரிடம் பேசி அது தோல்விஅடைந்துவிட்டதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? என முனிவர் வினவினார். அதற்கு பார்வதி தேவி, அவனிடம் நான் பேசிப் பார்க்கிறேன் சனி படியவில்லை என் பேச்சை கேட்கவில்லை என்றால் என் உடுக்கையை நான் அடிப்பேன். அது எவ்வளவு தூரம் இருந்தாலும் கேட்கும் என்று சொல்லிவிட்டு சனியிடம் சென்றார் பார்வதி தேவி. 

சனி பகவான் பார்வதி தேவியைப் பார்த்தவுடன், தேவி நீங்கள் என்னைத் தேடி வரவேண்டுமா? அப்படி என்னிடத்தில் என்ன காரியம்? என்றார். உடன் பார்வதி தேவி நான் முனிவர்களும், ரிஷிகளும் தங்குவதற்காக கட்டிய மண்டபத்தில் உன் பார்வை படுகிறது. எனவே, மண்டபம் இடிந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவே நீ உன் பார்வையை அதில் பதிக்கக்கூடாது என்றார். 

சனிதான் சூதின் பிறப்பிடம் ஆயிற்றே. உடனே தாயே இதற்காக என்னிடம் வர வேண்டுமா? நீங்கள் சொல்லியனுப்பினால் போதுமே. நான் மண்டபத்தை இடிக்க மாட்டேனே என்று பவ்யமாக பதில் சொன்ன சனி பகவானைப் பார்த்து பெருமைப்பட்ட பார்வதி தேவியிடம், சனி வினயமாக, தாயே உங்கள் ருத்ர தாண்டவத்தை அடியேன் பார்க்கலாமா? என்று கேட்டான். 

வந்த வேலை முடிந்துவிட்ட சந்தோஷத்தில் பார்வதி தேவி ருத்ர தாண்டவம் ஆட உடுக்கை அடித்தாள். இந்த உடுக்கு சப்தம்(ஒலி) மண்டபத்தின் அருகே நின்று கொண்டிருந்த முனிவருக்குக் கேட்டது. சரி, பார்வதி தேவி தான் போன வேலை நடைபெறவில்லை எனவே உடுக்கு அடிக்கிறாள் என்று எண்ணிய முனிவர் ஆட்களை வைத்து மண்டபத்தை இடித்துவிட்டார். எப்படிப் பார்த்தீர்களா சனியின் திருவிளையாடலை? சனி, பார்வதி தேவியையே ஏமாற்றி அவர் கட்டிய மண்டபத்தை இடித்தவராயிற்றே.

லோக மாதாவான பார்வதி தேவியையே விட்டுவைக்காத சனிபகவானுக்கு நாமெல்லாம் அவருக்குச் சிறு துரும்பு போன்றவர்கள். நம்மைத் தாளித்து, வதைக்காமல் விட்டுவிடுவாரா என்ன? 

கூடுமானவரை ஏழரை சனி நடைபெறும் போது, தான, தர்மங்கள் செய்து, பாவச்செயல்களில் ஈடுபடாமல் இருக்கலாம். நாம் செய்யும் பரிகாரங்களையும் மிகவும் உஷாராகச் செய்ய வேண்டும். சனிபகவான், நம்மை கண்காணித்துக்கொண்டே இருப்பார், சிறு சருக்கல் ஏற்பட்டால் போதும் நம்மைப் பெரிய சிக்கலில் சிக்க வைத்துவிடுவார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com