மனதில் உறுதி வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்!!

மனதில் உறுதி வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்!!". இது பாரதியின் சொல்..
மனதில் உறுதி வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்!!

ஜோதிடப் பார்வையில்.. 

"மனதில் உறுதி வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்!!". இது பாரதியின் சொல் வாக்கு. பாரதியாரின் வாக்கு இன்றளவும் இனிமையாக இருப்பதற்கு காரணம் அவர் பிறந்த தேதியும் (11.12.1882), மறைந்த தேதியும் (11.09.1921), எண் கணிதப்படி அவைகளின் கூட்டு தொகை 2-ஆக வருவதாலோ!! 

ஜோதிட ரீதியாக வாக்கு பற்றிச் சொல்லும் பாவம், 2-ம் பாவம் ஆகும். ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில், 2ஆம் பாவம் வாக்கு ஸ்தானமாக செயல்படும் போது, சுபக் கிரகங்கள் சம்பந்தப்பட்டிருப்பின் அவர் தம் வாக்கு வன்மையாகவும், மென்மையான மற்றும் அடுத்தவர்களைக் கவரும் விதமாகவும் இருக்கும். அதற்கு நேர் மாறாக அசுப கிரகங்கள் சம்பந்தப்பட்டிருப்பின் வாக்குத் தன்மை நிலை அற்றதாகவும் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவதாகவும் இருக்கும். 

ஒருவரின் ஜாதகத்தில், 2ஆம் பாவம் சூரியன் அல்லது செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டிருக்குமாயின் அவர்களின் வாக்கு கடுமையானதாகவும் மற்றவர்கள் மனம் கோணவேண்டியும் வரும். அதே சமயம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், ராகு 2-ஆம் பாவத்தில் இருந்தால் அவர் ரெட்டை நாக்கு உள்ளவர். காலையில் சொன்னதை மாலையில் மாற்றிப் பேசுபவராகவும். அப்படி சொல்லவே இல்லை என்று பொய் பேசுபவராகவும் இருப்பார். சிலருக்கு திக்கு வாய் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி இருந்தால், அந்த ஜாதகரின் பேச்சு கீழ்த்தரமானதாக இருக்கும். 

ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால், திக்கு வாய் இருக்கும். பணிவு இல்லாதவராய் இருப்பார். இவர் பரம்பரை சொத்துக்களை விரயம் ஆக்குபவராக இருப்பார். அதுவே சந்திரன் இருந்தால், குழலினும் இனிய குரல் வளம் உள்ளவர். வாக்கு என்பது ஒருவரின் வாசித்தலையும் குறிப்பதாகும் (அதாவது அடிப்படை கல்வி)  என்பதால் ஒருவர் குழந்தைப்பருவத்து முதல் கல்வியை கற்பாரா, மாட்டாரா என்பதனை தெளிவாக அறியலாம். 

ஒருவருக்கு பொதுவாக எப்பொழுது வாக்கில் இனிமை வரும் என்றால் அவர் உண்மை உரைக்கும் போது தான். ஆம், ஒருவரின் ஜாதகத்தில் புதன் 2ஆம் இடத்தில் இருப்பின் அவர் உண்மை உறைபவராகவே இருப்பார். குரு, 2 ஆம் இடத்தில் இருப்பின் அவர் ஒரு சிறந்த பேச்சாளராகவே இருப்பார். சுக்கிரன் இருந்தால், அவர் இசை மூலம் செல்வம் சேர்ப்பார் எனலாம். 2-ஆம் இடத்தில் சனி இருக்கும் ஒரு ஜாதகரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கீழ்த்தரமானதாக இருக்க வாய்ப்பு. ராகு இருப்பின் அவரின் பேச்சு போலித்தனமாக இருக்கும். உண்மை அற்று இருக்கும். வாயில் அல்லது முகத்தில் ஏதேனும் ஒரு நோய் இருக்கும். ரோஷமுடைய பேச்சுக்கு சொந்தக்காரர்கள். மேலும் இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வாய்ப்பு. அதே சமயம் ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் இடத்தில் கேது இருப்பாரே ஆயின் அவரின் வார்த்தைகள் இறைத் தன்மையோடு இணைந்திருக்கும். பேச்சு குறைவான அளவில் இருக்கும். 

இதுவே இரண்டாம் பாவ அதிபதி 3-ஆம் பாவத்தில் இருப்பின் அந்த ஜாதகர், மிகுந்த தைரியசாலியாகவும் நல்ல புத்திசாலியாகவும் இருப்பதுடன், மிகுந்த மன உறுதி கொண்டவராயும் இருப்பர். இந்த தைரியம் மற்றும் மனஉறுதி சில சமயம் தீய பழக்கத்திற்கு அடிமையாக வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் அசுபர்களின் பார்வை இருப்பின் அவர்களின் மனஉறுதி நாத்திகராகிவிடும். 

வாக்கால் சிக்கல் ஏற்படும் ஜாதகர்கள் யார் யார்?

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 2ஆம் பாவத்தில் லக்கினம் அல்லது இயற்கை பாபிகள் இருப்பின் அல்லது பார்வை, சேர்க்கை இருப்பின் அவரின் வாக்கில் / பேச்சில் சிக்கல் நிச்சயம் இருக்கும் அல்லது ஏற்படும். சிலருக்கு கோள் சொல்லும் ஆற்றல் இருக்கும். அதாவது ராகு இங்கு 2-ஆம் இடத்திலிருந்து, அவர் வாங்கிய சாரம் கேட்டை, மூலம், திருவோணம் நட்சத்திர சாரம் பெற்றிருப்பது. அல்லது கேது இங்கு 2-ஆம் இடத்திலிருந்து கேட்டை, அஸ்தம் நட்சத்திர கால்களில் நிற்பதாலும் ஒருவருக்கு கோள் சொல்லும் தன்மை ஏற்படும்.

சில லக்கினகாரர்களும் அவர்களின் பேச்சு (வாக்கு) திறமையை அறியலாம்:-

மேஷ லக்கினகாரர்களுக்கு, சுக்கிரனும், புதனும் 7ஆம் இடத்தில் இருந்தால் பேச்சு சரியாக வராது. அதோடு இவர்களுக்கு 2-இல் ராகு அல்லது கேதுவும் இருப்பின் ஜாதகர் ஊமை என்றே சொல்லாம். புதனும், சுக்கிரனும் 3-ஆம் இடத்தில் இருந்தால் திக்கிப் பேசுபவராக இருப்பார். அதே போல் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் சரியாக திருத்தமாக ஜாதகரால் பேச முடியாது.

கடக லக்கினகாரர்களுக்கு 3, 12க்குரிய புதன் 2ஆம் இடத்தில் இருந்தால், பிச்சை எடுத்து உண்பார் என்பது விதி. அல்லது அவ்வளவு கெடுதல் நேரிடாவிட்டாலும், அந்நியர் தயவால் பிழைப்பை நடத்துவார். கேது 2ல் இருந்தால், கெட்டவார்த்தை பேசக்கூடியவராயும், பழையதும், கெட்டு போனதுமான உணவை உண்பவராயும் இருப்பார். கும்ப லக்கினகாரர்களுக்கு, புதன் 2இல் இருக்க பிறந்த ஜாதகர், இனிமையாகப் பேசக்கூடியவர். ஆனால், இவரின் காமத்தால் பல பெண்களை நாடி பொருளை இழப்பார். கேது 2ல் இருப்பின் குரூர ஸ்வரூபமும், கெட்ட வார்த்தைகளைப் பேசுபவராகவும் இருப்பார்.

மீன லக்கின காரர்களுக்கு, செவ்வாய், சுபருடன் (இயற்கை அல்லது லக்கின) கூடி உத்தம நவாம்சத்தில் இருந்தால் கணீர் என்று பேசக்கூடியவராயும், வாக்கு சுத்தம் உடையவராயும் இருப்பார்கள். உண்மையே பேசுவதோடு அல்லாமல், கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்களாய் இருப்பார்கள். மேலே கூறியவை ஒரு சிலவே. மேலும் அந்த அமைப்புகளும் நல்ல நவாம்சத்தில் (நட்பு, சமம், ஆட்சி)  இருப்பின் பலன் நற்பலனாகவும், பகை மற்றும் நீச்ச நவாம்சம் பெறுகிறபோது, மேற்சொன்ன தீய பலன்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. சில சுபக் கிரக பார்வை மற்றும் தொடர்புகளால் பாதிப்புகள் குறையவே செய்யும்.

மொத்தத்தில் வாக்கில் இனிமையுடன் நடந்து கொள்வது பல்வேறு பிரச்னைகளை நீக்குவதாகவே இருக்கும். எனவே எது எப்படி இருப்பினும் இனிமையுடன் பேச மனதில் உறுதி கொள்வோம், வாக்கினிலே இனிமையுடன் பேசி பழகி அனைவருடனும் இன்பமாய் வாழ்வோம்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com