பாலாரிஷ்ட தோஷத்தை நீக்கும் சில பரிகாரங்கள்..!

பால என்றால் குழந்தைப் பருவம். அரீஷ்ட்டம் என்றால் பொதுவாக தோஷம் அல்லது..
பாலாரிஷ்ட தோஷத்தை நீக்கும் சில பரிகாரங்கள்..!

பால என்றால் குழந்தைப் பருவம். அரீஷ்ட்டம் என்றால் பொதுவாக தோஷம் அல்லது கண்டம் என்று பொருள். பாலாரிஷ்டம் என்றால் குழந்தைக்குக் கண்டம் என்பதாகும்.

குழந்தைகள் ஜாதகமாக இருந்தால், அந்த ஜாதகத்தின் உண்மை நிலையை அதாவது, பாலாரிஷ்டம், அற்ப ஆயுள், மத்திய ஆயுள், பூரண ஆயுள் போன்றவற்றை அறுதியிட்டு (MUST BE ASCERTAINED) பின்னரே மற்ற பலன்களை ஆராய வேண்டும். அதற்குப் பிறகு தான் இறப்பை செய்விக்கும் / அளிக்கும் கிரகம் எதுவென்பதை, தீர்மானிக்கப்பட வேண்டும். 

பாலாரிஷ்டம்:- (குழந்தை  தோஷம் / கண்டம்)

பின்வரும் கிரக கூட்டு / சேர்க்கையே பாலாரிஷ்டம் ஏற்படக் காரணமாகிறது. 

1. ஒரு ராசியின் கடைசி நவாம்சத்தில் பாவிகள்  (சாரமாக) அமையக் கூடாது. 

2. சந்திரன், கேந்திரத்தில் அமர்ந்து பாவிகளுடன் சேரக்கூடாது.

3. சந்திரன் லக்கினத்திற்கு, 7, 8, 12ல் பாவிகளுடன் இருந்து, சுபரின் பார்வை பெறாமலிருந்தால்.

4. 2, 6, 8, 12-ல், பாவிகள் இருந்தால்,

5. வலிமை குன்றிய சந்திரன், லக்கினத்திலோ அல்லது லக்கினத்திற்கு 8-லோ, மேலும் கேந்திரங்களில் அல்லது திரிகோணங்களில் பாவிகள் இருப்பது.

6. வலிமை குன்றிய சந்திரன், லக்கினத்திலோ அல்லது லக்கினத்திற்கு 8-லோ, மேலும் கேந்திரங்களில் அல்லது திரிகோணங்களில் பாவிகள் இருப்பது.

7. சந்திரன் லக்கினத்திலும், செவ்வாய் 8-யிலும், சூரியன் 9-யிலும், சனி 12-யிலும் இருப்பின்,

8. வலிமை குன்றிய சந்திரன் லக்கினத்தில், மேலும், 5, 8, 12-ம் இடங்களை தீய கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டிருக்குமாயின்.

9. சந்திரன் 8-லும், செவ்வாய் 7-லும், ராகு 9-லும், குரு 3-லும் இருந்தால்.

10. பிறக்கும் நேரத்தில், நிறையக் காலம் வகிக்கும் (MAJOR PERIOD)தசாநாதன், பல பாவிகளுடன், இணைந்திருப்பது. இது போல் நிறைய விதிகள் உள்ளது, அவை யாவற்றையும் பரிசோதித்து பின்னர், அவைகளுக்கு சில விதி விலக்குகளும் உள்ளதை அறிந்து பின்னர் தக்க பரிகாரங்களைச் செய்யச் சொல்லி அவர்களை மருத்துவர் எப்படி நோயின் தன்மை அறிந்து மருந்துகளை அளித்துக் காப்பாற்றுகிறாரோ அதுபோலவே ஒவ்வொரு ஜோதிடரும். இப்படிப்பட்ட சூழல் உள்ள குழந்தைகளை முடிந்தவரைக் காக்க முயற்சி செய்வர்.  

பொதுவாக ஆயுளை, 3 வகையாகப் பிரிக்கலாம். அதாவது,

அற்ப ஆயுள், மத்திம ஆயுள், தீர்க்க ஆயுள்

அற்ப ஆயுள் என்பது 33 வயதுக்குள் ஏற்படும் மரணம். 

மத்திம ஆயுள் என்பது 55 வயதுக்குள் ஏற்படும் மரணம் 

தீர்க்க ஆயுள் என்பது 100 வயதுக்குள் ஏற்படும் மரணம். 

ஆனால் இந்த பாலாரிஷ்டம் என்பது அற்ப ஆயுளில் வருவது. 

அற்ப ஆயுளை, மேலும் 3 வகையாகப் பிரிக்கலாம்

அதாவது அற்பத்தில் அற்பம் குழந்தை பிறந்து 12 வயதிற்குள் இறப்பது.  

அற்பத்தில் மத்திமம் குழந்தை பிறந்து 22 வயதிற்குள்  இறப்பது. 

அற்பத்தில் தீர்க்கம் குழந்தை பிறந்து 33 வயதிற்குள் இறப்பது. 

மத்திம ஆயுளை, மேலும் 3 வகையாகப் பிரிக்கலாம்

அதாவது மத்திமத்தில் அற்பம் 35 வயதிற்குள் இறப்பது. 

மத்திமத்தில் மத்திமம் 45  வயதிற்குள் இறப்பது.

மத்திமத்தில் தீர்க்கம் 55 வயதிற்குள் இறப்பது. 

தீர்க்க ஆயுளை, மேலும் 3 வகையாகப் பிரிக்கலாம்

அதாவது தீர்க்கத்தில் அற்பம் 77 வயதிற்குள் இறப்பது.

தீர்க்கத்தில் மத்திமம் 88 வயதிற்குள் இறப்பது, 

தீர்க்கத்தில் தீர்க்கம்  100  வயதிற்குள் இறப்பது . 

இதில், பிறந்தது முதல், 12 வயதிற்குள் இறப்பதைத் தான் பாலாரிஷ்டம் ஆகும். பாலாரிஷ்டம் இருவகைப்படும். 

1. சௌம்ய பாலாரிஷ்டம். அதாவது, குழந்தை பிறந்த உடனேயே அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்குள் இறப்பது. அல்லது குழந்தைப் பிறந்து 1வருடத்திற்குள் இறப்பது. 

2. சத்யோ பாலாரிஷ்டம். அதாவது, குழந்தை பிறந்து, முதல் தசை முடிவதற்குள் இறப்பது. எனவே, குழந்தை பிறந்த உடனேயே தங்களின் குழந்தைக்கு, பாலாரிஷ்டம் உள்ளதா என ஜோதிடரை அணுகி, விளக்கம் கேட்டு, அதற்கான பரிகாரங்களைச் செய்வதன் மூலமாக இதனை, தடுக்கலாம். அல்லது மனதைத் திடப்படுத்திக்கொள்ளலாம்.  

பாலாரிஷ்ட தோஷத்தை நீக்கும் சில பரிகாரங்கள்

1. தெய்வ பக்தியுடன், ஒவ்வொரு மாலையிலும் கையில் ஒரு செப்பு பாத்திரத்தில் நீரை வைத்துக்கொண்டு விநாயகர் துதி செய்து அல்லது போற்றி வழிபாடு செய்து அந்த நீரைக் குழந்தையின் தலையில் தெளித்தால் இந்த தோஷம் போக்க வல்லது. கேதுவால் ஏற்படும் தோஷத்திற்கும், இது  மிகவும் சரியான பரிகாரம் ஆகும். 

2. தெய்வ பக்தியுடன், ஒவ்வொரு மாலையிலும் கையில் ஒரு செப்பு பாத்திரத்தில் நீரை வைத்துக்கொண்டு துர்கா தேவியை துதி செய்து அல்லது போற்றி வழிபாடு செய்து அந்த நீரைக் குழந்தையின் தலையில் தெளித்தால் இந்த தோஷம் போக்க வல்லது. சந்திரன், ராகுவால் ஏற்படும் தோஷத்திற்கும், இது மிகவும் சரியான பரிகாரம் ஆகும். 

3. குழந்தையின் ஆயுள் நீட்டிப்பிற்கு திருக்கடையூர் அபிராமி அம்பாளுக்குச் சிறப்புப் பூஜை செய்வதும் இந்த தோஷ நிவர்த்தி பரிகாரம் ஆகும். 

4. எந்த கிரகத்தினால் இந்த தோஷம் ஏற்படுகிறதோ அந்த கிரகத்திற்குரிய தானியத்தை, குழந்தையின் எடைக்கு எடை துலாபாரமாக குருவாயூர் கோவிலிலோ, திருப்தியிலோ அல்லது அவரவர் குலதெய்வ கோவிலிலோ செலுத்துவது மிகச் சிறந்த பரிகாரம்.

5. மிகவும் கடினமான பாலாரிஷ்ட தோஷத்திற்கு, அம்பாள் படத்திற்கு முன் அமர்ந்து, சௌந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தின் 38-வது ஸ்லோகத்தைத் தினமும் 5000 வீதம் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதோடு, நைவேத்திய பொருளாக உலர் திராட்சை, ஏதாவது பழவகைகளை, சர்க்கரை கலந்த இனிப்பு கட்டிகளை (SUGAR CANDY) வைத்து வணங்கி ஏழை குழந்தைகளுக்கு தர, தோஷ நிவர்த்தி ஆகும். 

6. ஆயுஷ் ஹோமம், ம்ருத்துஞ்சய ஹோமம் போன்றவற்றைச் செய்ய நிவர்த்தி ஆகும். ஆயுள் நீடிக்கும். 

7. மேலும், ஆண் குழந்தை எனில் ஆண் வெள்ளி உருவும், பெண் குழந்தை எனில் பெண் வெள்ளி உருவும், குருவாயூர் அப்பன் கோவிலிலோ, திருப்தியிலோ, அவரவர் குலதெய்வ கோவிலிலோ, உள்ள உண்டியலில் செலுத்தினால், தோஷ நிவர்த்தி ஆகும். இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் யாதெனில், இப்படி தோஷம் பெற்ற குழந்தைகள், தோஷ நிவர்த்தி ஆனதும், அதன் எதிர்காலத்தில் மிகவும் சிறப்புப் பெற்று விளங்குவதைக் காண நேரிடுகிறது. 

இக்கட்டுரையின் நீட்சி கருதி, ஓரளவு மட்டுமே குறிப்பிட முயற்சித்துள்ளேன். அனைத்தும் நமது கர்மாவுக்கேற்ற பலன்களும், இறைவனின் லீலைகளும் என்றால் வேறு ஏதுமில்லை. சாயியை பணிவோம் அணைத்து நலன்களும், வளங்களும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com