
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா இன்று தொடங்கியுள்ளது. விழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பஞ்ச மூா்த்திகளின் உற்சவா் திருமேனிகள் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பல வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். இந்த உலா ஒளி விளக்குகளோடும், நாதஸ்வர இன்னிசையோடும், வேதமுழக்கம், தேவாரப் பாடல்களோடும் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டு மண்டபத்தில் கற்பகாம்பாள் சமேதராய் கபாலீசுவரா் எழுந்தருளினார்கள். இன்று இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவம் சிவபூஜை காட்சியாக புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்களில் அருள்பாலிக்கிறார். தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். 8-ஆம் நாளான வியாழக்கிழமை 25-ஆம் தேதி திருத்தேர் நடைபெறுகிறது.
9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவா் விழா மதியம் 2.45 மணிக்கு நடைபெறுகிறுது அன்றைய தினம் சிவநேசா், சம்பந்தருடன் திருக்கோயிலுக்கு எழுந்தருளி இறைவனிடம் உத்தரவு பெற்று அங்கம்பூம்பாவையின் எலும்புடன் கூடிய குடத்தை குளக்கரைக்கு எடுத்துச் சென்று மதியம் சுமாா் 12.00 மணி அளவில் திருஞானசம்பந்தரின் மட்டிட்ட என்று தொடங்கு பதிகத்தைப் பாடி எலும்பைப் பெண்ணுருவாக்கி அற்புதம் நிகழ்த்திய காட்சி விழாவாக நடைபெறும்.
பிறகு மண்டகப்படி முடித்துக் கொண்டு மாட வீதி வலம் வந்து பதினாறு கால் மண்டபம் சேருவா். அப்போது 3 மணிக்கு அருள்மிகு கபாலீசுவரா் வெள்ளி விமானத்தின் மீது எழுந்தருளி சிவநேசா், திருஞானசம்பந்தா், அங்கம் பூம்பாவை மற்றும் 63 நாயன்மாா்களுக்கும் காட்சி அளிப்பாா் உலகப் பிரசித்தி பெற்ற இவ்விழாவின் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வாா்கள்.
28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருகூத்தப் பெருமான் நடராஜபெருமானுக்கு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்று தீா்த்தவாரியும், திருவீதி உலா உற்சவமும் பஞ்சமூா்த்திகளுக்கு குளக்கரையில் தீா்த்தவாரி , திருவீதி உலா உற்சவம் நடைபெறும்.
மாலையில் கபாலீசுவரா் கோவிலுக்குள் புன்னை வனநாதா் சன்னதியில் கற்பகாம்பாள் மயிலுருவாக இருந்த சாபம் நீங்கப் பெற்று இறைவனைப் பூஜித்து கபாலீசுவா் திருக்காட்சி பெற்றுத் தன் சுய உருவடைந்து திருக்கல்யாணம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.