கிரகப்பார்வைகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஒரு லக்கினம், ராசி மற்றும் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள் ஜாதகரின் பாவ காரகத்தின் பலத்தை மெருகேற்றும் அல்லது பலவீனமாக்கும்.
கிரகப்பார்வைகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்
Published on
Updated on
4 min read

ஒரு லக்கினம், ராசி மற்றும் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள் ஜாதகரின் பாவ காரகத்தின் பலத்தை மெருகேற்றும் அல்லது பலவீனமாக்கும். அந்த பாவ அதிபதிக்கு நேர்மறையா அல்லது எதிர்மறையா (positive or negative) என்று ஆராய்ந்து தான் சொல்லப்பட வேண்டும். எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை என்பது பொது வரைமுறை; அது தவிர குரு, சனி, செவ்வாய், மற்றும் சாயகிரகங்களுக்கு இரண்டு விசேஷ கூடுதல் பார்வை உண்டு. ஒருசில கிரகங்கள் மற்ற கிரகத்தோடு சேருவதை  விடப் பார்வைக்கு அதிக பலம் உண்டு என்பது ஜோதிட விதி. சுபரில் முக்கியமான குரு, அவரின் பார்வை எப்பொழுது கிட்டும் என்று அனைவருக்கும் ஒரு ஏக்கம் உண்டு.

ஜோதிடத்தில் சுபர் பார்க்கும் பொழுது நேர்மறை ஆற்றலும், அசுபர் பார்வை படும்பொழுது எதிர்மறை ஆற்றலையும் ஏற்படுத்தும். இவற்றில் அந்த ஜாதகரின் லக்ன சுபர் பார்வை அதிக சாதகமான பலத்தை உயர்வுபடுத்தும். எடுத்துக்காட்டாக  குரு பார்க்கக் கோடி நன்மை என்றும், கர்ம காரகன் சனியின் பார்வை பெற்றால் அவரவர் கர்மாவின் அளவுக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்தும் . 

கிரக பார்வையின் மற்றொரு கோணத்தில் நாம் ஜோதிட சூட்சமத்தைப் பார்க்க வேண்டும். குருவோ சனியோ அல்லது மற்ற கிரகங்களோ அவர்கள் பார்க்கும் வீடு ஒருவரின் நிறைய பாவங்கள் சூழ்ந்த இடம் அங்கு பிரச்னை கட்டாயம் வெளிப்படும். அதற்கு அதே கிரகங்கள் தீர்வுக்கு வழியோ அல்லது கர்ம வினையை அனுபவிக்கும் நிலையைக் கொடுக்கும். அந்த கர்ம பலனைப் பாரபட்சம் இல்லாமல் அனைவரும் அனுபவித்து ஆகவேண்டும் என்பது ஜோதிட விதி.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமானால் குரு இருக்கும் அதாவது அவர் அமரும் இடத்தை விட அவர் பார்க்கும் 5,7,9  பாவங்களைப் பலப்படுத்தும் என்பது உண்மையே. அவரின் பார்வை பட்டவுடன் கோடி நன்மை தரும். ஆனால் அவர் கோடியைத் தந்துவிட மாட்டார். காசு இல்லாதவனுக்கு 100 அல்லது 1000 ரூபாயும் அல்லது கோடீஸ்வரனாக மாற்றவும் வாய்ப்பு உண்டு. அதனால் கர்மாவின் பலனுக்கு ஏற்ப பத்து ரூபாயா அல்லது பல கோடியா என்பது அவரவர் கொடுப்பினை ஆகும்.

குருவை பணம், திருமண மற்றும் சுப நிகழ்ச்சியை மட்டும் ஏற்படுத்தும் கிரகம் என்றும் சொல்லிவிட முடியாது. குருவின் பார்வை என்பது ஒருசிலருக்கு மறைந்து ஒளிந்து இருந்த நோயின் தாக்கம் வெளிப்படும் நேரம். இங்கு நோய் கொடுத்தார் என்று சொல்லுவதை விட, கண்டறிய முடியாத நோயை சரியான முறையில், மருத்துவ உதவியுடன் கண்டுபிடித்து அதற்கு சரியான சிகிச்சைக்கு வழி காட்டுவார் என்றும் கூறலாம்.

இன்றும் நிறைய பேர் நோயின் தாக்கம் இதனால் என்று காரணம் கண்டறியாவண்ணம் குழம்பி சரியான சிகிச்சை இல்லாமல் தவிக்கின்றனர். இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் உடலில் ஏற்படும் கொப்பளம், கொழுப்பு  அல்லது வீக்கம் என்ற காரக கிரகம் குரு ஆவார். அவர் 6,8ல் உள்ள பாவத்தையோ அல்லது பாதகாதிபதி உடன் சேர்க்கை கொண்டு பார்த்தாலோ, அந்த ஜாதகருக்கு சிறிதாக இருந்த வீக்கம் வெளிப்பாடு பெரிதாக தென்படும். அதுவும் செவ்வாய், ராகு சனி தொடர்பு இருந்தால் அழுக்கு கொண்ட கேன்சர் செல் பாதிப்பும் அதிகம் வெளிப்படும்.

குரு நல்லவர் வல்லவர் என்று சொன்னாலும், சிலசமயம் ஒரு சில லக்கினகரருக்கு குரு பாவியாக இருந்து ஒருசில துன்பத்தை தரவல்லவர். குரு பாவியாக இருந்து அசுப ஆதிபத்திய பாவத்தைப் பார்த்தால் அவர் அசுப தன்மையை தரவல்லவர்.

ஒருசில ஜாதகருக்கு திக்பலம் பெறும் கிரகங்கள் நல்ல பலனைக் கொடுக்காமல் இருக்கும் அதற்கு காரணம் ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்ந்து பார்வை இருந்துகொண்டே இருக்கும்.  அதுவே அந்த பாவத்தைச் சேர்ந்த அதிபதிகள் சர்வாஷ்டக வர்க்கத்தில் அதிக பரல்கள் இருந்தால் ஜாதகரின் பலம் விளைவுகள் அதிகம் ஏற்படுத்தாது.

பாவ தொடர்பு கொண்ட பார்வை வெற்றியையும் சொல்லும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு காதல் ஆசை தூண்டும் 5ம் பாவ அதிபதியும்,  11ம் அதிபதியும்  (7க்கு 5ம் பாவம்) ஒன்றுடன் ஒன்று பார்வை, சேர்க்கை மூலம் தொடர்பு பெற்றால் அவர்களின் காதல் திருமணத்தில் முடியும். அதுவே அசுப பாவ தொடர்பு பெற்றால் வெற்றி கிட்டாது.

ஒரு சில சமயம் முழு பாவர் எனப்படும் சனியின் பார்வை என்பது ஜாதகரை முழு நேரத் துன்பத்தைக் கொடுத்து, அவரை பிரட்டி போட்டு வறுத்துத் தள்ளிவிடும். சிலசமயம் வாழ்வின் முடிவுக்கும் சென்று விடுவார்கள். அதாவது அவரவர் கர்மாவிற்கு ஏற்ப துன்பங்கள் தசாப்புத்திக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கும். இதுவும் நம் பாவ கணக்கை இந்த ஜென்மத்தில் கொஞ்சம் கழிக்கப்படும்.

லக்கினம் மற்றும் பாவங்களைப் பார்வையிடும் கிரகங்கள், ஒருவித நன்மை தீமைகளை சூட்சமமாக சொல்லும். அது தவிர சந்திரன் நின்ற ராசியில் கிரகங்களில் பார்வை பற்றி ஜாதக அலங்காரம் நூலில் பாடல்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக.. கடக சந்திரன் மீது கிரகங்களின் பார்வை பலகளை பார்ப்போம்.

"தங்கிய நண்டில் இந்து
தன்னைவக் கிரன்தான் காணில்
பொங்கிய குசலை செய்து
பொருபவன்! புதனின் வித்தை!

துங்கமன் பார்க்க ஞானி
சுங்கன்பார் வைக்கு மன்னன்!
செங்கதிர் நோக்கக் கண் நோய்!
திறல்சனி இருமல் உய்ப்பான்!"
                    (ஜா. அ., ப -293)

விளக்கம்: கடக ராசியில் சந்திரனை செவ்வாய் பார்வையிட்டால் பெரும் வீரதீர சாகசங்கள் செய்து சண்டையிடுவதில் வல்லவன். புதன் நோக்கினால் கல்வி கேள்விகளில் வல்லவன். உயர்வான குரு பார்த்தால் மெய்யறிவு வாய்க்கப் பெறுவான். சுக்கிரன் சிருஷ்டித்தால் வேந்தன். சூரியன் பார்வையை செலுத்தினால் கண் வியாதிக்காரன். சனி பார்த்தால் இருமல் நோய்காரன். இவற்றில் கடக ராசியில் சூரியன் சனி பார்வை நன்று அல்ல என்று கூறப்படுகிறது.

அதேபோல் மற்ற ராசிகளில் பார்வை பலன் பற்றி ஜாதக அலங்காரம் என்ன கூறுகின்றது என்று சுருக்கமாகப் பார்ப்போம். 

மேஷ ராசியில்  சூரியன் பார்வை பெற்றால் பொன் அற்றவனாகவும், சனி பார்த்தால் திருடனாகவும் கூறப்படுகிறது. அதுதவிர மற்ற கிரக பார்வைகள் சுப தன்மையாகக் கூறப்படுகிறது.

ரிஷப ராசியில் - செவ்வாய் பார்வையிட்டால் அந்த ஜாதகன் பொன் அற்றவனாகவும், புதன் நோக்கினால் திருடனாகவும், சூரியன் காண்பானாகில் ஏவல் தொழில் செய்பவனாகவும் கூறப்படுகிறது. அந்த ராசியில் மற்ற கிரகப்பார்வை சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

மிதுன ராசியில் - சூரியன் பார்த்தால் தரித்திரமாகவும் மற்றவர்கள் பார்வை சுப தன்மையும் மற்றும் அவரவர் காரக பலன்களை தரவல்லவர்கள்.

சிம்ம ராசியில் அனைத்து கிரகங்களின் பார்வையும் நன்மை பயக்கும். 

கன்னி ராசியில் உள்ள சந்திரனை- சூரியனோ சனியோ செவ்வாயோ பார்வையிட்டால் பெண்களை அண்டிப் பிழைப்பான், மற்ற 3 கிரகப்பார்வை நன்மை பயிக்கும். 

துலா ராசி - அசுபர்களான சூரியனோ சனியோ செவ்வாயோ பார்வையைச் செலுத்தினால் அநேக பேரை வெவ்வேறு விதமாக ஏமாற்றுவான். மற்ற சுபக் கிரக பார்வை நன்மை பயக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களை புதன் பார்த்தால் ஜாதகனுக்கு தந்தைமார்கள் இருவர். சனி பார்த்தால் உடல் ஊனம். சூரியன் பார்வை வறிய நிலை ஏற்படுத்தும். சுக்கிரன் பார்த்தால் சலவை போன்ற தொழில் புரிபவன். மற்ற கிரகப்பார்வை நன்மை பயக்கும்.

தனுசு ராசியில் செவ்வாய் அல்லது சூரியன் அல்லது சனி பார்வையிட்டால் இருமல் நோய்கராகன். சுக்கிரன் பார்த்தால் பலரும் சேர்ந்து அந்த ஜாதகனைப் போற்றி அவன் வழி நடப்பர். குரு, புதன் பார்வை வேந்தன், மெய்யறிவு கொண்ட பண்டிதனாகத் திகழ்வான்.

மகர சந்திரனை சூரியன் பார்த்தால் அறிஞனாவான், அதே சமயம் சூரியன் சிருஷ்டித்தால் ஏழை என்றும் சொல்லப்படுகிறது. மற்ற கிரக பார்வை நன்மை பயக்கும்.

கும்ப ராசியில் - புதன் அல்லது குரு பார்வை நன்மை பயக்கும். ஆனால் சூரியனோ, சனியோ, செவ்வாயோ, சுக்கிரனோ பார்வை மாற்றான் மனைவி மீது தகாத ஆசை கொள்வான் என்று நூலில் கூறப்பட்டுள்ளது.

மீன ராசிகாரர்களுக்கு சூரியனோ/ செவ்வாயோ/ சனியோ பார்வையிட்டால் தீய செயல்கள் புரிபவனாகவும் மற்ற கிரகப் பார்வை நன்மை தருவதாகவும் ஜாதக அலங்காரத்தில் சொல்லப்படுகிறது. ஜாதக அலங்காரத்தில் சொல்லப்பட்ட சூட்சமத்தில் சூரியன், சனி, செவ்வாய் பார்வை அதிக அசுப தன்மையைத் தருகிறது.

மேலே கூறப்பட்ட ஜோதிட விதி மற்றும் விளக்கங்கள் அனைத்தும் மனதில் கொண்டு அன்றைய கோசாரம் மற்றும் தசா புத்தி கணக்கின் அடிப்படையில் சரியான முறையில் ஆராய்ந்து பலன்களை சொல்ல வேண்டும். முக்கியமாக லக்கினம், ராசி, கிரகங்கள் அமரும் சார புள்ளி / பாகை அடிப்படையில் பார்வையின் பலன்கள் மாறுபடும். பலனைத் தரக்கூடிய கிரகங்கள் அஷ்டவர்க்கத்தில் பலம் பெற்றால் அசுபர்களின் பார்வை, ஜாதகரின் துன்பம் தூசு போல பறந்து செல்லும். ராசியை ஒரு கிரகம் பார்க்கிறதா அல்லது 2,3 கிரகம் பார்வை செலுத்துகிறதா, அன்றைய கோசார அடிப்படையில் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

எடுத்துக்காட்டாக நாம் வீடு கட்ட அல்லது திருமணம் செய்யும் காலம் குரு சுக்கிரன் பார்வை நன்று. படிக்கும் பொழுது புதன் குரு பார்வை சேர்க்கை தேவை. அந்தந்த காலத்திற்கு ஏற்ப நமக்கு அந்தந்த சுபக் கிரகங்கள் பார்வை நமக்கு ஒரு ஊட்டத்தைக் கொடுக்கும்.

ஜனன ஜாதகத்தில் ஒரு நீச்சம், அஸ்தங்கம் பெற்ற கிரகத்தை அதே கிரகம் கோசாரத்தில் பார்க்கும் பொழுது அந்த ஜாதகர் அந்த ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தன்னை பலப்படுத்திக்கொள்ளக் கிரகங்கள் துணை நிற்கும். ஜோதிட சூட்சமங்கள் ஓரே வரியில் சொல்ல முடியாது. அவற்றை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து சொல்லப்பட வேண்டிய ஒன்று.  

மேலும் தகவலுக்கு: Whatsapp:8939115647, vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com