
ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என இரு முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கப்படும் நிலையில், இன்று (மார்ச் 29) திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்க உள்ளார்.
இன்று பெயர்ச்சியாகும் சனியால் மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் நன்மை பெறும் ராசிகளாகும்.
ரிஷபம், விருச்சிகம் ஆகிய ராசிகள் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகளாகும்.
மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகளாகும்.
சனிபகவானுக்கு உரியப் பரிகாரத் தலமாகத் திகழும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், பிராணேஸ்வரி திருக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அடுத்தாண்டு 2026 மார்ச் 6-ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறவிருப்பதாக திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுவான பரிகாரங்கள்
• தினமும் விநாயகர் - ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
• தினமும் விநாயகர் அகவல் - ஹனுமான சாலீசா - சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.
• அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சனேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.
• தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.
• தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
சனி காயத்ரீ மந்திரம்
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!
சனி ஸ்லோகம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!
அர்த்தம்:
கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.