முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குருப்பெயர்ச்சி 2026: கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

குருப்பெயர்ச்சி 2026: குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இன்று பெயர்ச்சியடைந்தார்.

News image

ஆலங்குடி குருபகவான் - file photo

Updated On :26 மே 2026, 11:47 am IST

குருபகவான் இன்று (மே 26-ம்) தேதி செவ்வாய்க்கிழமை மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் அருகேயுள்ளது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில். இக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் . நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

பார்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.

அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களைக் களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் எனப் பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனைத் திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது.

மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்குத் தத்தம் செய்து தரும்படி கேட்க ,மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.

தல மூர்த்திகள்

கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், ஏலவார்குழலி அம்மை, உமையம்மை. குரு தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்திகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம்தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்சியடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு (இன்று 26-ம்) செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி நடந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பக்தர்களின் நலனைக்கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு வசதிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகன சந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. விழா ஏற்பாடுகளை அறநிலைய இணை ஆணையர் ரா. செந்தில்குமார், கோயில் தக்கார் சி. வீரபாண்டியன், செயல் அலுவலர் சு. ராஜா இளம்பெருவழுதி, கண்காணிப்பாளர் தா. அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் வலங்கைமான் போலீஸார் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு நேற்று திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு உலகநன்மை வேண்டி சிறப்பு குரு பரிகார ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Summary

Lord Jupiter transited from the sign of Gemini to the sign of Cancer. To mark this occasion, the Guru Peyarchi (Jupiter Transit) festival was held at the Alangudi Apatsahayeswarar Guru Remedial Temple. A large number of devotees participated in the event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.