ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 2

நனைத்த மழை" தெளிந்தெழ வைக்க குட்டி வானை நோக்கி நன்றி என்றது 
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 2

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை

போதுமான மழை என்றும்
யாவருக்கும் பொதுவான மழை.
மாரி என்று வர்ணிக்கப்படும் மழை
மாறிவிட்டது.
ஊரில் சாலையில் அதிகமாகவும்
அதே ஊரில் சோலையில் குறைவாகவும்
சில இடங்களில்
சிறு சிறு துளிகள்..
இது யார் செய்த மாற்றங்கள்?
ஏரிகள் ஏரியா ஆனது.
மலைகள் மடுவாக ஆனது.
மரங்கள் விறகாகிப்போனது.
சோலைகள் சாலைகளானது.
இதனால் இன்று
ஆட்டுக்குட்டியை நனைத்த மழையாக
மழை மாறிவிட்டதே.
இது மாறுமா???????

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**

சிலுசிலு வெனவொரு சாரல் வந்தது
குளுகுளு காற்றையும் கூட்டியே வந்தது
பளபள மின்னலும் அங்கே வானிலே
கருகரு மேகமும் காட்சியில் படுதே
கிடுகிடு யென்றொரு இடியும் கேட்குதே
கமகம மண்மணம் துளைக்குது நாசியை
திருதிரு வெனநின்ற செம்மறிக் குட்டியை 
மளமள அம்மழை  நனைத்தே போனது!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

வெயில் கனன்று அடித்த ஒரு 
வெளிச்ச நாளில்...
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
தன் கைகளில்
அழகான கண்ணாடிக்கோப்பையில்
ஏதோ ஒரு பண்பட்ட மதுவை ஏந்திக் கொண்டிருப்பதாய்
நீடித்த நினைவுகளுடன் சுற்றித் திரிந்தவன்
மழை முடிந்து வரும் வர்ணஜாலமாய் உன்னைப் பார்த்தேன்...
கண்ணுக்குள் ஏதோ...காதலாய் படிந்து...
இந்த ஆட்டுக்குட்டியை நனைய வைத்த மழை...

- கீதா சங்கர்

**

நீர் தேடி ஆழமாய் சென்றது
ஆழ்துளை கிணறு போல..
அரச மரத்தின் வேர் 
பல மணிநேரம் காத்திருக்கும்
குடிநீர் லாரியானது
கட்டப்படும் மரத்தழைகள்
வற்றிய சுனையானது
தாய் ஆட்டின் மடி
பற்கள் இரை தேடின 
வளரும் மரங்களை 
கடிக்கவில்லை பசித்த போதும்
தாய் மடிந்தது இறை இல்லாமல்
கரை புரண்டோடியது
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை!

- க.துள்ளுக்குட்டி

**
    மழைக்காப்புச்  சட்டை  யோடு
          மறியிங்கே  நிற்றல்  கண்டால்
     அழையாத  விருந்தா  யிங்கே
          அடைமழைதான்  வந்து  போச்சோ?
     தழைத்திட்டப்  புல்லைக்  கண்டால் 
          தண்மழையின்  சுவடும்  உண்டே!
     பிழைக்கட்டும்  ஆடுமா  டென்று 
          பெய்ததுவோ   கருணை   மாரி!

     மறியாடு  மகிழ்ச்சி  யாக 
          மழைநனைந்து  நிற்றல்  கண்டால் 
     சிறிதாக  மாந்தர்  நெஞ்சுள் 
          சேர்கிறதே  நம்பிக்  கைதான்;
     பறிபோன  வாழ்வை   விட்டுப் 
          பாரிலினி   மழைநீர்  சேர்ப்போம்!
     அறியாது  பிழைசெய்  திட்டோம்;
          அணைத்திடநீ   வாம  ழையே!

- கே.பி.பத்மநாபன்

**

வராது வந்த கோடைமழையை எல்லோரும்
வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது!

ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்
அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் !

தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்
தாவி வந்து பிடித்து வைத்தனர் மழைநீரை!

குடை ஏதும் பிடிக்காமல் சிலர் வந்து 
குதூகலமாக மழையில் நனைந்து மகிழ்ந்தனர்!

வானிலிந்து வருகை தந்திட்ட வரம்  மழை  
வளரும் செடிகளுக்கு உயிரூட்டிய உரம் மழை!

இல்லாதபோது தான் அருமை புரியும்
இனிய மழை பெய்யாதபோது புரிந்தது!

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் உணர்ந்தனர்
மழைநீர் மனித இனத்தின் உயிர்நீர்!

மாமழை போற்றுவோம் மாமழை போற்றுவோம்
மரங்களை நட்டுவைத்து மாமழை பெறுவோம்!

- கவிஞர் இரா .இரவி

**

செடி துளிர்த்தால்
வளர்கிறது;
ஆடு துளிர்த்தால்
வெட்டப்படுகிறது

நம்பிக்கை துளிர் விட்டால்
வாழ்க்கை வளம் பெறுகிறது;
அவநம்பிக்கையால்,
வாழ்க்கைப்பாதை அடைபடுகிறது

மனிதா எந்த சூழ்நிலையிலும்,
உன் சொந்த நம்பிக்கையை,
தக்க வைத்துக்கொள்;
அதற்குப்பெயர் தன்னம்பிக்கை 

தன்னம்பிக்கையால் உன்,
வாழ்வு வளம் பெறும்,வாழ்க்கை நலம் பெறும்;
உன் குலம் தலைத்தோங்கும்,
ஊர் உலகெலாம்  உன்னை போற்றும்.

- ம.சபரிநாத்,சேலம்

**

பஞ்ச பூதங்களு லொன்று நிலம்
பசுமை வளர்த்து குளிர்ந்துவிடும் 
நிலத்தாயே நீவளர்க்கும் பசுமையே எங்களுக் காகாரம் என்பதினால் 

இனிக்கி யுண்டேன் தவறோ கூறும் 
எம்மினம் கூட்டமாய் செத்து மடிகிறோம்
ஆனாலும் குடிக்கும் தண்ணீரதனை 
உள்ளே இழுத்து க்கொண்டிடாதேயும் 

என்று கூறி மயங்கி சாயந்திட்டது நிலத்தி லோராட்டுக்குட்டி யதனைக் 
கண்ட ஐம்பூதங்களுள் ஒன்றான 
ஆகாயம் மனதிரங்கியே கார் 

மேகங்களை ஒருங்கிணைத்து நீரை 
பொழியச்செய்து " ஆட்டுக்குட்டியை 
நனைத்த மழை" தெளிந்தெழ வைக்க 
குட்டி வானை நோக்கி நன்றி என்றது 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

வாட்டும் வெயில் மாறுபாடு பார்ப்பதில்லை
காட்டிலும் பசும்புல்லிலும் முகம் பார்க்கிறது
நாட்டில் பல்லுயிர் படும்துன்பம் பாவமல்லவா
கூட்டில் வாழும் பறவையும் கொடிய வெயிலிலே

பிறந்து நிலத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியொன்று
இறந்து விடாதிருக்க தாயாடும் தவிக்கின்றதே
கறந்த பாலை கன்றுக்குத் தரும் மனமில்லையே
திறந்த வெளியில் எங்கும் குடிக்க நீரீல்லையே

வானத்தில் மேகங்கள் கூடாது போனதெங்கே
ஞானத்தில் அமர்ந்து உலகத்தை உய்விக்கவா
தானத்தில் சிறந்தது தாகம் தீர்க்கும் நீரன்றோ
கானம்பாடி களத்தில் இறங்கி வாருங்களேன்

கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்த்த மேகங்கள்
காப்பதற்காக களம் இறங்கி வானில் கூடின
தோப்பாக அடர்ந்து கருநிறம் கொண்டனவே
மூப்படைந்து மழைச்சாரலாகி மழையானதே

தாகத்தால் தவித்த ஆட்டினையும் குட்டியையும்
தேகத்தோடு சேர்த்தணைக்க வந்ததே மழை
சோக முக ஆடும் குட்டியும் நனைந்தனவே
ராகம்பாடி மழையை வரவேற்றுக் குதித்தனவே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com