ஆட்டுக் குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 3

அன்பான குட்டி ஆடே; ஓடிப்போய் ஒட்டிக் கொள்ளேன் உன் அன்னை ஆட்டை!
ஆட்டுக் குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 3

ஆட்டுக் குட்டியை நனைத்த மழை!

‘மழை நனைத்த ‘மா’ நிலமாய் பரந்து விரிந்த பூமிதனில்
நடுங்கி நிற்கும் குட்டி ஆடே; உன் அன்னை ஆட்டை எங்கே காணோம்?
சுக்குப்பால் தட்டிப்போட்டு கொஞ்சம் குடிக்கத் தரச் சொல்லி கத்தேன்;
ஆட்டுப்பாலும் அரைப்படி கடலையும் மென்று தின்ற காந்தித் தாத்தா
கைராட்டை சுற்றிக் கொண்டே வாஞ்சை காட்டி அருகழைத்து
அகத்திக் கீரை தின்னத் தருவார்;
ஒரே ஒரு இந்தியா, ஒரே ஒரு ஒற்றைக் காந்தி!
அகத்திக் கீரை நீட்டுபவரெல்லாம் காந்தியென்று நம்பி விடாதே;
கழுத்தறுக்கும் கோஷ்டி ஒன்று கடவுள் பெயர் சொல்லி அலையுது
கிடாவெட்டும் சாக்கில் நாக்கைப் பட்டை தீட்டும் வேலை நடக்குது
அன்பான குட்டி ஆடே; ஓடிப்போய் ஒட்டிக் கொள்ளேன் உன் அன்னை ஆட்டை!
இளஞ்சூட்டு மடி அணைத்து ஒட்டி நின்று காத்துக் கொள்’
கொலை வாள் காத்திருக்குது நேரம் காலம் கூடி வர;
அதற்குள்;
மழை நனைந்த மாந்தளிரே இலையுதிரேன் ஆடு தின்ன;
மழை நனைந்த பசும்புல்லே செழித்து வளரேன் ஆடு தின்ன’
மழை நனைந்த மாமனிதா கொஞ்சம் பொறு ஆட்டைத் தின்ன!’

- கார்த்திகா வாசுதேவன்

கொடுமையிலும் கொடுமையாகக் கூடிவெயில் வாட்டிடும் !
கடுமையிலும் கடுமையாகக் காய்ந்தெரித்தே சுட்டிடும் !

செடிகொடியும் மரங்களுமே செத்ததுபோல் நின்றிடும் !
அடிவேரும் அற்றதுபோல் அருகம்புல் காய்ந்திடும் !

நீர்நிலைகள் எல்லாமும் நீரின்றிக் நெகிழ்ந்திடும் !
வேர்விட்டத் தாவரங்கள் விழிக்குருடாய் வீழ்ந்திடும் !

ஆடுமாடு எல்லாமும் அரும்பசியால் அலைந்திடும் !
காடுகழனி எல்லாமும் காணாமல் கருகிடும் !

சோலையிலே பூக்களெல்லாம் சுருங்கிக்கீழ் வீழ்ந்திடும் ! 
பாலையாகிச் சோலையெலாம் பார்த்துமனம் வாடிடும் !

சிற்றூரில் பேரூரில் திகைக்கின்றார் நீரின்றி !
பற்றுள்ளார் நீர்வாங்கப் பணமிருந்தும் நீரின்றி !

நீரில்லா உலகத்தில் நிலைத்தெந்த உயிர்வாழும் ?
நீரில்லேல் எப்பணிதான் நிலையாக நடந்தேறும் ?

முப்பங்கு நீரிருந்தால் முன்னேற்றம் கிட்டிடுமா ?
உப்பான நீரதனால் உயிர்த்திடுமோ மன்னுயிர்கள் ?

காடழித்து நாடாக்கிக் களித்திருந்தோம் மழையில்லை !
நாடகந்தான் காடாகின் நமக்கேது நல்லநிலை ?

அடடடடா வானந்தான் அழுகிறதே பார்த்தெல்லாம் !
உடனிருந்த ஆட்டுக்குட்டி ஓடிமழை நனைந்தபடி !

மரங்களினை வெட்டிவிட்டோம் மரச்செடிகள் நட்டிடுவோம் !
உரம்நீரும் அதற்கிடுவோம் உயிராக நாம்காப்போம் !

மரம்வளர்ப்போம் மழைபெறுவோம் மண்ணகத்தை மலர்விப்போம் !
மரமாக நாமிருப்போம் மன்னுயிர்த்தே நிலைநிற்போம் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

பசுமை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com