ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 4

kavithaimani dinamani poem section | ஆட்டுக்குட்டியை நனைத்த மழை
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 4

ஆட்டுகுட்டியை நனைத்த மழை!

வெக்கையில் தகிக்கும்
பாலைவனத்திற்கு நிழல் பரப்ப
முளைத்துக் கொண்டது பேரீச்சைமரம்...

விரிந்த கடல்
நனைந்து விடாமல் காக்க
குடைப் பிடித்தது பறவையின் சிறகு

வேலியற்ற வெளிக்குத் தீப்பிடிக்காமல்
சுவர் எழுப்ப எத்தனித்தது
வெறுமை...

மலை முகட்டில்
உட்கார்ந்து இளைப்பாற முடியாமல்
தவித்து
கிழக்கிற்கும் மேற்குக்கும் அலைந்தது
சூரியன்...

முகிலினைக் கிழித்தெரிய முடியாமல்
அரற்றிக் கொண்டது
கொம்பு முளைத்த பிறை...

கூரையற்ற பட்டியில்
அடைப்பட்ட ஆடுகளுக்கு மேல் விழாமல்
குட்டிகளை நனைத்தது
மழை...

உண்மைகளை உண்மைகளும்
பொய்மைகளைப் பொய்மைகளும்
காக்கப் புரியாமல்
கடந்து கொண்டிருக்கிறது காலம்...

- கவிஞர்.கா.அமீர்ஜான்/திருநின்றவூர்.

**

அழகாய் இருப்பாய் 
அமைதியாய் இருப்பாய்  
என் ஆட்டுக்குட்டியே! 
ஏன் நனைந்தாய் மழையில்   
வீட்டின் கூடாரம்தான் இல்லையோ  
இல்லை கொட்டகைதான் இல்லையோ
உன்னை நனைந்தபின் பார்க்கையிலே! 
என் மனம் கூட நடு நடுங்குது குளிரில்
ஏன் நனைந்தாய் மழையில் 
என் ஆட்டுக்குட்டியே 
இறைவன் கொடுத்தான் 
எல்லோருக்கும் எதையும் தாங்கும் இதயத்தை 
உனக்கும் கூட.. வெடவெடக்க நிற்கையிலே 
என் குழந்தை போல அரவணைத்தேன் 
அமைதியாக நீ இருக்கையிலே 
பொறுமையைய் நான் கற்றுக்கொண்டேன்! 
நீ மழையில் நனைந்தாலும் 
மழை உன்னை நினைத்தாலும் நோய் 
எதிர்ப்பு சக்தியைக் கொடுத்திடு! 
இறைவா என் "ஆட்டுக்குட்டிக்கு"

- மு.செந்தில்குமார், திருநெல்வேலி

**
 
எத்தனை தவிப்புகள்
எனக்குள் இருந்தன,
என்றாவது என்னைப்
பெற்றவளின் கையால்
உணவருந்தி மடிமீது தலை வைத்து
தாலாட்டில் கண்ணுறங்கும்
வாய்ப்பு வருமா!
தவித்த மனதுக்கு
ஒத்தடமாய் என்னைத் தடவி
கொஞ்சி அழைத்த புது அன்னை
ஆனாதை விடுதி கடந்து
அழைத்துச் செல்ல
பனிமழையில் நனைந்த
உள்ளம் ஆனந்த கண்ணீரை
வடித்தது புதிதாய்........

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**
மலை முகட்டில் திரிந்து
நீறில்லா நெற்றி பாழ் போல்
நீரில்லா வனம் பாழ்
மனித பிசாசுகளின்
மானிடங் கெட்ட காசாசையால்
வெட்டி எறிந்து நெடிய வனம்
குற்றுயிராய் குறுகி
எத்தனை உயிர்களை வருத்தி
இயலை மாற்றியது,
பாவம் நாங்கள் புரியாத மடங்களே
புளுகிராஸ் அமைப்பால் எங்களுக்கு 
நன்மையா புரியவில்லை,
ஓ...கடவுளே உனணுவின் 
வடிவல்லவா நாங்கள்
காப்பாயா கதறிய 
ஆட்டின் தலையில்
பாதரசச் சொட்டாய்
தொடர்ந்து விழ
இறைவன் இருக்கிறான்
என நனைந்த மழையில்
துள்ளிச் சென்றது தூரமாய்
நனைந்தபடி புவியைக்
காப்பேனெனக் கூறி......

- சுழிகை ப.வீரக்குமார்

**

பசும்புல்லைத் தின்றாய் பசியோடு-அதை
…..பக்குவமாய் நீயும் அசைபோடு
பசுந்தழைகளைத் தின்றாய் தெம்போடு-நீயும்
…..பள்ளிசெல்லும் மழலையாய் நடைபோடு
பசியையும் மறந்து விளையாடு-ஆட்டுப்
…..பட்டிதான் நீவாழும் வீடு
பாசம் வைத்தநீ என்ஆடு-நாளும்
…..பிரியாமல் வாழ்வாய் என்னோடு
மேகம் மழையைப் பொழிந்தது-உன்
…..மேனியும் அதனால் நனைந்தது
சோகம் முழுவதும் மறந்தது-உன்
…..சோர்வும் உன்னை நீங்கியது
தாகமும் அங்கே பறந்தது-உன்
…..தேகமும் நீரால் மிதந்தது
சுகமாய் நிமிடமும் கழிந்தது-உன்னைச்
…..சுற்றியே புதுவாசனை கலந்தது

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

கிராமம் அதுவும் மலைஅடிவார கிராமம் சீரக வீடுகள் இல்லை
அங்கொன்றும் இங்கோன்றுமாக வீடுகளிருந்தன
இயற்கை எழிலுடன் எல்லோரையும் கவர்ந்தது,
ஆடு,கோழி,மாடு வளர்த்து விற்று வந்தாள் மூதாட்டி,அவளின்
ஆட்டுகுட்டி அழகானது அதை எல்லலோரும் விரும்புவார்
ஆட்டுக்கு நீராட்டி ஆடை அணிவித்து விளையாடுவர்
மூதாட்டி குட்டி ஆட்டை சிறார்களிடம் ஒப்பொடைத்திருந்தார்
அன்று ஒருநாள் சந்திரகிரகணம் கும்மிருட்டு கிராமத்தில்
ஆடிக்கொண்டே மூதாடியின் குடிசைக்குள் நுழைந்தார்கள்
ஆறு திருடர்கள் மூதாட்டியை மிரட்டி உணவருந்துகிறார்கள்
மீறினால் ஒரே சீவு என்று கத்தியைக்காட்டி சாப்பிட்டு வந்தனர்
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோழியாக சாப்பிடுமுடித்தனர்
அவர்களுக்கு ஆட்டுக்குட்டி இருப்பது தெரிந்தது கேட்டனர்
ஆட்டை க்காப்பற்ற குழந்தைகளைவிட்டு காப்பாற்றப்பாரித்தாள் 
முயற்சி பலித்தது மலையடிவாரத்தில் குட்டி  பராமரிப்பில்
பொத்தி பொத்தி வளர்த்த ஆட்டுக்குட்டி மலையடிவாரத்தில்
திடீர் என்று மழை கொட்டியது ஆடு நனைந்தது அதனால்
திருடர்களுக்கு காவு கொடுக்கபயந்தபாட்டி மழைவிழுங்கியது

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

ஆடுகள் நனைந்து கொண்டு தானிருக்கிறது,

அதிகாலை அடர்த்திக்கு வெயில் முகங்கழுவ,
பட்சிகளின் கூக்குரல்கள்
சாணத்தின் ஈரத்துடன் இணை கோர்க்க,
காற்றொன்று காதோரம் ரகசியம் கசிந்தளித்துச் சென்றது,
ஆடுகள் நனைகிறது என,

வேளைகள் வேலையை வாய்த்தளிக்க,
மதியத்தின் சுடுசுகமோ பாதம் பதிக்க,
எங்கிருந்தோ வீசிவந்த காய்ந்த 
அரளியும் சொன்னது ஆடுகள் நனைகிறது என,

சூரியன் சோர்ந்து வீடு திரும்ப,
துருவமோ நிறம் மாற்றி சாயம் பூச,
அவ்வழியே அண்ணாந்து வந்த அரைமதியும் சைகையில் 
சொன்னது ஆடுகள் நனைவதை,

மறுநாள் நேந்திருந்த கடன் தீர்த்து ,
இலை போட்டு இறை சுகித்து,
வீடுதிரும்பிய‌ பின்,
இல்லாத எந்த ஆடும் நனையவில்லை,
தலை சிலுப்பிய பின்...

- பரணி சுபாஷ், சிவகங்கை 

**

வேட்டுவைத்து வீழ்த்துகின்ற உலகம் இங்கே
வேதனைகள் தந்திடவே வினைகள் செய்வார்
காட்டுகின்ற அன்பினுக்குள் கலப்பே செய்து
காட்டுகின்றார் மனிதரெல்லாம் கயமை கொண்டே
வீட்டிலுள்ள உறவுகளும் விரிசல் காண
விரிந்தமன நேசமெல்லாம் வீழ்ந்தே போக
நாட்டினுக்குள் நற்கருணை பரிவும் கொண்டே
நனைந்திருக்கும் “ ஆட்டுக்குட்டி” காப்போர் உண்டோ

மனிதமென்ற மனமெல்லாம் மறைந்தே போக
மனிதரென்ற போர்வையிலே மாயம் ஆக
இனிதென்றே உயிர்நேயம் துளியும் இல்லை
இறைவனும்தான். மயங்குகிறான் உணர்வின் எல்லை
தனிஒருவன் உணவென்றே சொல்லிச் சொல்லி
தாக்குகின்றான் உயிர்களையே வேகம் கொண்டு
அணிசேர்ந்தே அலைகின்றான் சதையைத் திண்ண
“ஆட்டுக்குட்டி” நனைந்திருக்க விடுவார் உண்டோ ?

 கவிஞர் நம்பிக்கை நாகராஜன்.

**

ஆறு மாதத்திற்குப் பிறகு பெய்த மழை
ஆட்டை நனைத்தது! மாட்டை நனைத்தது!
ரோட்டை நனைத்தது! வீட்டை நனைத்தது!
வீட்டுக் குழாயின் நாவை நனைக்கவில்லை!
அதன் தாகம் தணிக்கவில்லை!

மழையே!
ஆறுமாதமாய் வராமல் அடம் பிடித்தாய்!
ஆறு நாளாய் வந்ததும் ஓட்டம் பிடித்தாய்!
ஏரியும் குளமும் ஏங்கிக் கிடக்குது!
ஆறும் குட்டையும் காய்ந்து கிடக்குது! உனக்காக!
மழையே! நீ வானம் கொடுத்த பரிசு! - அது
கிடைக்காத நிலமோ தரிசு!

ஆட்டை நனைத்த மழையே! நீ !
ஆற்றை நனைத்திருந்தால் –அது
ஊற்றை நனைத்திருக்கும்! அதனால்
பல பயிர்கள் நனைந்திருக்கும்!
பல உயிர்களும் நனைத்திருக்கும்!
உலககே மகிழ்ந்திருக்கும்!

பணம் கொடுப்பவனுக்குத்தான்
தண்ணீர் கொடுக்கிறது லாரிகள்!
காசுபணம் என்னவென்றே தெரியாத
உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்க
மழையே! உன்னைத் தவிர யார் உண்டு!

-கு.முருகேசன்

**

அப்படியே முழுவதையும் காப்பி செய்து
ஒரே முறை பேஸ்ட் செய்யுங்கள்..வடிவம் மாறாது
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை..!
அறுசீர் விருத்தம்
மாட்டுக் கன்றுக் குட்டியும்
……………மானைப் போலத் துள்ளுது.!
வீட்டுள் சுற்றும் பூனையும்
……………வெளியே வந்து கத்துது.!
ஆட்டுக் குட்டி நனையுது
……………அன்பால் பொழியும் மழையிலே.!
கோட்டை போல வீட்டிலே
……………குருவி காக்கை சொந்தமே.!
.

ஏட்டில் நாமும் படிக்கிறோம்
……………எல்லா உயிரை மறக்கிறோம்.!
கூட்டு வாழ்வால் சிறக்கிறோம்
……………கூடி வாழ மறுக்கிறோம்.!
பாட்டுப் புலவன் சொன்னதை
……………பாடி மகிழ மறக்கிறோம்.!
வாட்டும் கவலை மறக்கவே
……………வாழும் உயிரை மதித்திடு.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
கல் இடறி வழிதவறி
விழிபிதுங்கி மொழிமறந்து
நாவறண்டு கானகத்தில் தடம்மாறிய
ஆட்டுக்குட்டி
காத்துக்கொண்டிருக்கிறது
யாருக்காக என்று அதற்குத்
தெரியாது
காத்துக்கொண்டிருப்பது மட்டும் தெரியும்
எவர் வருவாரோ அவர் வந்தபின்
அதற்குத்தெரியும் யாருக்காக
நிகழ்த்தப்பட்டது இந்தக் காத்திருப்பு என்று
யுகங்கள் காத்திருக்கின்றன
நகங்கள் உதிர்வது போல
நாட்கள் உதிர்ந்து உதிர்ந்து
ஆட்டுக்குட்டியின் மேனியில்
ரோமங்களாகக் கிடக்கின்றன
நீர்த்தாகம் தாக்கி நாநீண்டு விட்டது
ஓர்நாளில் ஒருவன் வந்தான்
தன்னை மேய்ப்பன் என்றான்

அள்ளியணைத்து முத்தமிட்டான்
கொண்டுசென்றான்
தூக்கிலிடப்பட்டு
பிணமாவான் மனிதன்
பிணமாகித்
தூக்கில் தொங்குகிறது
ஆட்டுக்குட்டி
இப்போது வந்தது தாகம் தீர்க்க
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை

- கவிஞர் மஹாரதி

**

பெண்பார்க்கும் படலந்தான் மீண்டு மின்று
பெற்றவர்கள் எதிர்பார்ப்பு முடியு மென்றே
கண்களிலே ஏக்கமுடன் தலைகு னிந்து
காண்பதற்கு வந்தவர்முன் வந்து நின்றேன்
உண்கின்ற தட்டுகளைப் பார்ப்ப தைப்போல்
உடன்வந்தோர் எனைப்பார்த்தே முறுவ லித்தார்
மண்பார்க்கும் என்முகத்தைப் பார்த்த பின்பு
மனக்கருத்தை எழுதுவதாய் சொல்லிச் சென்றார் !
வணக்கங்கள் பரிமாற்றம் நாளும் நாளும்
வணங்கியகை வலித்ததன்றி வேறு யில்லை
மணக்கின்ற மஞ்சளினைப் பூசிப் பூசி
மதிமுகந்தான் ஒளிர்ந்ததன்றி வேறு யில்லை
கணக்கின்ற பட்டுடைபோல் நெஞ்ச மெல்லாம்
கனவுகளால் கணத்ததன்றி வேறு யில்லை
பிணந்தின்னும் கழுகுகளாய் மணம கன்கள்
பிறந்தவீட்டார் பிய்த்ததன்றி வேறு யில்லை !
வெள்ளைமுடி வந்ததென்று தலையைப் பார்த்து
வேதனையில் துடிக்கின்ற ஏழை அப்பா
எள்ளலுக்கே என்னவரம் வாங்கி வந்தாய்
எனக்குமைந்து குமுறுகின்ற அன்பு அம்மா
உள்ளத்தை மயக்கியொரு காதல் செய்தே
உடன்செல்லத் துப்பில்லை என்னும் அண்ணன்
குள்ளநரி முன்மழையில் நனைந்த ஆடாய்க்
குலைநடுங்கத் துடிக்கின்றாள் வாழ்விற் காக !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com