ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 1

வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு சுட்டி  ஆடாகவே இருக்கும் ! 
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 1

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை 


மரங்களை வெட்டிய
மனிதர்களை கண்டித்து
வானப்பெண்,  
வெள்ளை மையால்
ஆட்டுடம்பில் எழுதிய
கண்ணீர் கவிதை –

- கவிஞர் டாக்டர்.  எஸ்.  பார்த்தசாரதி  -- MD DNB PhD

**

பதுங்கு குழிகளா..? சவக்குழிகளா...? என்கிற அளவில்
அளவில்லாமல் அள்ளப்பட்டிருந்த மணல் ஆற்றினைப்
பக்குவமாய் கடந்து ஆடுகளை மேய்த்திருந்தேன் -
அக்கறையில் உள்ள மேய்ச்சல் நிலத்தினில்......

உச்சி வெயில்தனில் - இளைப்பாரவும் உணவருந்தவும் 
இருந்த மரங்கள்யாவும்  ஏழ்மைக்கு விலைபோயிருந்தன -
வரவேண்டிய மழையும் - புதுவாகன ஓட்டிப்போல்
இடக்கரம் கைபோட்டு வலக்கரம் திரும்பிவிடுகிறது...

மாலையில் - தீடீரென மேகங்கள் சூழ்ந்ததால் -
மேய்த்த ஆடுகளோடு இல்லம் திரும்பினேன் -
இல்லமடைந்த பிறகு - ஆட்டுக்குட்டி ஒன்றுக்காணாமல் - 
வந்தவழியிலும் - மணலெடுத்த குழிகளிலும் தேடிச்சென்றேன்...

அப்பொழுதுவந்த தீடீர்மழையானது  -ஆற்றினை நனைக்காமல்
'ஆட்டிக்குட்டியை நனைத்த மழை'யாகவே இருந்தது...
குழியிலகப்பட்ட ஆட்டினை மீட்டெடுத்துவிட்டேன் - ஆனால்
இன்றுவரையிலும் மீட்கமுடியவில்லை  என் ஆற்றினை...!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**
"மழையே" என்  "மழையே"
ஒவ்வொரு துளிகளும் என் "உயிரே"
நனைந்தேன் நான் நனைந்தேன்!
மழை வரும் போதெல்லாம் நான் நனைந்தேன்!
மழையே என் மழையே
ஏன் நனைத்தாய் என் ஆட்டுக்குட்டியை - 
எங்களின் வறுமை வாசலைத் திறக்கிறாயா!
ஆட்டுக் கொட்டகை ஓட்டை என்று!!
வாடினேன்! நான் வாடினேன்!
என் ஆட்டுக்குட்டி வாடுகையில்!
  இச்சிறு மழையிலே உணர்ந்தேன் மழையால்
ஒரு ஜீவன் நடு நடுங்கயைிலே!
இறைவா கொடுத்திடு நீ கொடுத்திடு
உலக ஜீவன்களுக்கு
எதையும் அளவாய்.......

- செந்தில் குமார்.மு. ஓமன்

**

மரகத புற்பரப்பில்
மணிக்கழுத்தை கவிழ்த்தபடி
ஆழ்ந்த மேய்ச்சலில்
மூழ்கிய அச்செம்மறியை!

நீல் வானின்
நிரமற்ற நீர்த்துளிகள்
ஆட்டுக்குட்டியின்
ரோம வயல்களில்
தூங்கி வழிந்த
வெண்ணிற மயிர்களை
சொட்டு சொட்டாய்
தட்டித் தட்டி எழுப்புகின்றன !

தூக்கம் களைந்த
வெள்ளை மயிர்கள்
சிங்கப் பிடரியாய்
சிலிர்த்தபடி,
கூதைக் காற்றில்
கூண்குருகி 
நிச்சலமாய் நிற்கும்
அக்குட்டிக்கு
பாவமென்று போர்வைதனை
போத்திவிட்டுச் சென்ற
அந்த பேகன் யாரோ ?

அந்த அழகு செம்மறியை
நனைக்காத ஒவ்வொரு
மழைத்துளிகளும் 
சபிக்கப்பட்டவைகள் !

-அம்பேத் ஜோசப்

**

வாடும் பயிர்கள்
நாடி நிற்கும் பருவமழைக்காக
நாளும் தாகம் தணிக்க
தேடி அலையும் விலங்குகள்
நாடுவதோ தண்ணீர்!
மாட்டுக் கொட்டிலில்
மயங்கி சோர்ந்து நின்றது
வெயிலின் கொடுமையில்
வெள்ளை ஆட்டுக்குட்டி!
அது விரும்பியது குளுமை
அங்கு வீசியது வெம்மை
ஆட்டுக்குட்டி ஏங்கியது
சொட்டுபோடும் மழைக்காக!
இடிமுழக்கம் காணும்
கோடைமழை கண்டு
ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி
மழைநீரில் நனைந்தது!
குடத்துடன் அலையும் மக்கள்
தாகம் தணிக்கும்
கோடைமழை கண்டு
குதுகூலம் கொள்வர்!
மழைத்துளிகள் கண்டபின்
குளுமை தேடி
கொடைக்கானல் ஊட்டி
மக்கள் அலையமாட்டார் !
குமுறும் கோடைமழை
வியர்வைத்துளிகளை
விரைவில் நலமுடன்
துடைக்கும் மழைத்துளிகள்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

**

விரைந்தோடும் கருவுற்ற கார்முகில்கள்
காதலி(மரங்கள்) இல்லா வெற்றிடம் கண்டு
நெஞ்சம் குமுறி சிந்திய கண்ணீர்த் துளிகளே
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !!
மழை பொய்த்து போக - மண் வறண்டு
சோலைவனங்களும் பாலைவனங்களாக
வெப்ப சலனத்தால் பெய்த மழை
ஆட்டுக்குட்டியை மட்டுமே நனைத்து சென்றதே !
வஞ்சகமாய் வீசிய வலையில் சிக்குண்ட நாம்
நஞ்சென தெரிந்தும் பெப்சி கோக்குக்கு அடிமையாக,
ஆழ்துளைக் கேணிகள் தரணியை ஆட்கொள்ள
நிலத்தடி நீர் வற்றி போனதே !
மண் குளிர் பொழியவும் மறந்ததே மழை !
பொய்த்த மழையும் தூவானமாக,
ஆட்டுக்குட்டியை நனைத்த மழையானதே !

- தனலட்சுமி பரமசிவம்

**

கருவறையில் தண்ணீர்  குடத்தில்  
என்னை பொத்தி வைத்தாள்,
பின்பு மார்பிலே கட்டி  அணைத்தாள் ,
வளரும் பொழுது தன் கட்டுப்பாட்டுக்குள் 
ஒரு  ஆட்டுக்குட்டியாய் அணைத்து  வைத்தாள்!
பருவ  வயதில் என்னை என்  போக்கில் விடு 
நான்  துள்ளி ஓடியபொழுது ,
வாழ்க்கையின் சுக  துக்கம், நல்லது  கேட்டது  என்னை தாக்கியது!
உணர்ந்தேன், இந்த  ஆட்டுக்குட்டியையும்  நனைத்தது  மழை  என!
அம்மாவின்  ஆரவணைப்புக்கு  ஏங்கினேன்,  மீண்டும்!!

- ப்ரியா ஸ்ரீதர்

**
புல்வெளியில் பனி மழையில் தனித்தனியாய் திரியும்,
கருப்பு - சிகப்பு மாய் கலவை அது வண்ணம்,
விறுப்பு - வெறுப்பற்று எங்கும் மறுப்பின்றி திரியும்,
சிறு. சிறு விளையாட்டுக்களால் சீண்டி அது நிற்கும். அதன் வருகையை சிறு மணி கழுத்தில் உணர்த்தும்,
வகுப்பில் இருந்தவாறிதை
கவனிக்கும் மனம்,
மாலையில் மிக வருந்தும் - மழையில் நனையுமே- ஆட்டுக்குட்டி யென,
மறுநாள் பள்ளிக்கு வந்ததும் வராமல் ஆட்டுக் குட்டியைத் தேடும் ,
இந்த உள்ளம் - பிறிதொரு முறை -பிரியாணி சாப்பிடுகையில் - இருக்கவில்லை. 
அந்த ஆட்டுக்குட்டியின் மணியான நினைவை _ மீண்டும் உணர்த்தியது - கவிதை மணி.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
வறுமையின் விரல் பிடித்து
நெடுவாழ்வின் நெடுகோட்டில்
நகரும் சிறுமியின் விரலை
விடாது நக்கியபடி நகரும் 
ஆட்டிற்கு தெரிந்திருக்கவில்லை
பத்தாத தன் சோற்றின்
பாகத்தை பகிர்ந்தளித்து
அளப்பரிய அன்பளந்து
அதனுடனே சிறகடிக்கும்
அவளுக்கும் தெரிந்திருக்கவில்லை 
நள்ளிரவின் மென்னிருளில்
நாளைய நாக்களில் அசையாகும்
நிலையறியா அசைபோடும் 
ஆட்டினை ஆதூரமாய் அள்ளி
தூரத்தில் தொலைத்துவிட்டது
அச்சிறுமி(கை) 
எங்கிருப்பினும் உயிர் கொண்டு
இருத்தலையே விரும்புகிறது அன்பின்
அறுதி நிலை
தொலைத்த நிறைவில் விடிந்த 
காலையின் திண்ணையில் 
நனைந்தபடி கத்தும் 
ஆட்டிற்கு தெரிந்திருக்கவில்லை 
எதுவும்
நனைந்தது ஆடுமட்டுமல்ல
அனைவரும்

- பவித்ரா ரவிச்சந்திரன், மேலூர்

**

வாட்டும் வெயிலில் வதைந்தாலும் வரிந்தே புல்லைத் தான்மேயும் !
கூட்டும் கொடுமை என்றாலும் கூட்டுக் குள்ளே அடங்காது !
நோட்டம் விட்டே ஓடோடும் நொடியும் எங்கும் தங்காது !
ஆட்டுக் கூட்டம் அதனோடே அழகுக் குட்டி பலஓடும் !

அங்கும் இங்கும் கூட்டத்தில் அழகாய் ஓடி முந்திவரும் !
தொங்கும் மரத்தில் செடிகொடியில் துணிவாய் நின்றே தழைதின்னும் !
எங்கே பசுமை என்றேதான் எங்கும் ஓடி ஏமாறும் !
தங்க நிழலும் இல்லாமல் தவித்தே கத்தித் தடுமாறும் !

தண்ணீர் இன்றி ஊரெல்லாம் தவியாய்த் தானே தவிக்கிறது !
கண்ணீர் விட்டு மக்களுமே கலங்கி வானம் பார்க்கின்றார் !
கண்ணில் காணும் குளம்குட்டை காண வில்லை காய்ந்தெங்கும் !
மண்ணில் தண்ணீர் இல்லாமல் மாயும் உயிர்கள் கணக்கில்லை !

மண்ணில் உயிர்கள் படும்பாட்டை மனதில் எண்ணித் தான்வதைந்தே
கண்ணீர் விட்டு வானம்தான் கதறி மழையாய்ப் பெருகிற்றே !
அன்பு ஆட்டுக் குட்டியதும் அடடா மழையில் நனைந்தோடி
இன்பத் தோடு குதிக்கிறதே இனிதே குளித்து சிலிர்க்கிறதே !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி

**

பூக்களின் கீழிருந்த காம்பினையும்,
மீசைக்குக் கீழிருந்த உதடுகளையும்,
கைகளால் குடைபிடிக்கப்பட்ட நெற்றியையும்,
சேலை முந்தானையால் மறைக்கப்பட்ட குழந்தையையும்,
நெகிழிப்பையால் மூடப்பட்ட இட்லிகளையும்,
குடைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டுமல்லியையும்,
மாடத்தில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கையும்,
தொப்பையின் நிழலில் ஒளிந்திருந்த கட்டை விரலையும்,
நனைக்காமலே போய் விட்டது
வா, வா, என்றழைத்த ஏழை
விவசாயியின் வேண்டுகோளை விலக்கியும்
வராதே, வராதே என்று வேண்டிக்கொண்ட 
தெரு வியாபாரிகளின் வேண்டுதலை ஏற்றும்
வராமலே நின்று விட்டது 
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**

வெண்ணிற மயிர் சிலுப்பி
வெளிவந்த செம்மறிக்குட்டி
பச்சை வனாந்தரத்தில்
அங்குமிங்கும் திரிந்து மேய்கையில்!

செவ்வரக்கு வானம்
மெல்ல களைந்தோடி
கார்குழலின் இருளைவாங்கி
மேனி முழுதும் தடவிக்கொண்டன
நீர்க் கொப்பளங்கள் !

கொப்பளங்களுக்குள் இருக்கும்
நீர் மூட்டைகளின் முடிச்சு 
மெல்ல அவிழ்கையில்
நுனிப்புல்லை கீறிமேயும்
அக்குட்டியும்,
புற்களை போத்திய 
அந்த பச்சைக்காணியும்
தலை குளிக்கையில் !

அங்கே ! விழுந்து விழுந்து
உயிர் விடும், ஒவ்வொரு 
மழைத்துளியையும் கண்டு
மெல்ல மெல்ல வெளிவருகின்றன 
ஆட்டுக்குள் ஒளிந்திருந்த குளிரும் !
காட்டுக்குள் ஒளிந்திருந்த தளிரும் !

- அம்பேத் ஜோசப்

**
இலைஅடர்ந்த மரம் செடி 
எதுவும் இல்லை 
எங்கு நோக்கினும் 

குட்டியைத் தேடிவந்த 
தாய் ஆட்டின் உயிரைக் குடித்து ஓடியது ஒரு முரட்டு வாகனம்

அந்த ரத்தத்தை நக்கிப் பசிதீர்க்க முயன்று தோற்றது  தெருவோரத்து நாய்

தாயை மரணம் கொத்திச் சென்றதை
அறிந்திருக்கவில்லை வழிதவறிய குட்டி ஆடு

ஆண்டுக்கணக்கில் வராத மழை
அன்று
ஆட்டுக் குட்டியை நனைத்துச் சென்றது 
வான்பால் அருந்து என!

- கோ. மன்றவாணன்

**  
வருண பகவான் தன்  கண்கள் திறந்து 
கருணையுடன்  நோக்கினால் 
மறுபேச்சின்றி  அக்கண்ணிலிருந்து  
விறு விறுவென   வரும்  நீரே 
உன் பெயர்தான்  மழை  என்று 
என் முன்னோர்  சொல்லி அறிவேன்!
இப்போது......................
ஆட்டுக்குட்டியின்  மேல் 
மட்டும் தெளிக்கும்  நீரை 
வருண பகவான் தெளித்த  மழையாக  
கருணையின்றி  நினைப்பது 
எப்படி  நியாயம்..........
எவ்வுயிரும்  இவ்வுலகில்  ஜனிப்பது 
வாழத்தானே........அந்த  வாழ்வை 
கோழைத்தனமாக  கடவுளுக்கு  கொடுப்பது 
பிழையன்றோ........தன்னிலையறியா 
ஆட்டுக்குட்டிக்கு தெளிக்கும்  மழையால் 
 சிலிர்த்து  தலையாடுவது 
வேண்டாம்  என்னை நனைக்கும் 
இம்மழை  வேண்டாமென 
கதறுவது  கேட்கவில்லையா?
ஆட்டுக்குட்டியின்  குரல்  
கேட்டு நனைக்கும்  மழையை  நிறுத்தி 
வாழ்வு  கொடுப்பதே........
கடவுளுக்கு     நாம்  சொல்லும்  நன்றி!

- பிரகதா நவநீதன்.  மதுரை  

**

இறைவன்  கேட்காமலேயே 
இரையிடும்  "ஆட்டுக்குட்டியை"
பலியிடும் முன் நனைக்கும் 
"கிலியான"  மழைதான் 
"ஆட்டுக்குட்டியை  நனைக்கும்  மழை!"
இந்த  மழையில்  இல்லையே 
எந்தவித  மகிழ்ச்சியும்!
வான வீதியில்  உருளும்  மேகங்கள் 
கானமென்ற  இடியுடன் 
பூமியை  நோக்கி  வரும்  மழையில் 
சாமியின்  கருணையை  காணலாம்!
இம்மழையில்  ஆட்டுக்குட்டி   மட்டுமல்ல 
எவ்வுயிரையும்  நனையச்  செய்வதால் 
இவ்வுலகமே  இன்பக்கடலில்  
நீராடுமே..............................
கடவுள்   படைத்த உயிரை  என்றுமே 
அவர் பலியாக  கேட்பதில்லையே!
இதில்  ஒன்றுமறியா  ஆட்டுக்குட்டியை  
நனைக்கும்  மழையை  உங்கள் 
நினைவிலிருந்து    தூக்கியெறி  மானுடனே!
இதில்...... ஓர் உயிர் மட்டுமல்ல  
பதில்  அறியா  கேள்விகளுக்கு 
பதிலினை  அறியலாம்! 

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**
நீண்ட வறட்சிக்குப் பிறகு
கண் திறந்தது வானம் .....
கருமேகங்கள் கனிந்தன!
அக்னிச் சூரியனை
அணைத்து ஆரவாரத்துடன் 
பெய்யத் தொடங்கியது மழை !
எப்போதும் போல்
எல்லாவற்றையும்  நனைத்த மழை
ஆற்றுப்படுகையோரம்
வழி தவறி வந்த
ஆட்டுக்குட்டி யையும்
நனைத்தது .
முன்னங் கால்களைத்தூக்கி
முதுகை சிலுப்பியது அது .
சின்னத் துளிகள்
சிலிர்த்து சிதறின.
மனதைக் களிப்பூட்டும்
மழை அழகு !
மழையில் நனைந்த ஆட்டுக்குட்டியோ 
கொள்ளை அழகு!
அறியா வயதில் 
அன்று மழையில் நனைந்து
ஆட்டம் போட்டதும்
அம்மா திட்டிக்கொண்டே
தலையைத் துவட்டி  விட்டதும்
ஏனோ நினைவில் வந்து
ஏக்கத்தில் நனையத் தொடங்கியது மனது! 

- ஜெயா வெங்கட்

**

முப்போகம் விளைய, மும்மாரி பொழிந்த, கைம்மாறு கருதாத மழையே !
முத்து முத்தாகக் கதிர்கள் விளைந் துழவன் மகிழ, அமிழ்தான மழையே !
ஆறு, குளம், ஏரி, கடல் நிறையத்,  தாயான வான மழையே !
ஆவினமும், புள்ளினமும், கானகமும், மாந்தரும் வாழ வந்த மழையே !
நீ தடம் மாறினாய் ; உன் குணம் ஏன் மாறினாய் ; பொழிதல் குறைத்தாய் !
நீதி பிறழ்ந்து , நீ ஆட்டுக்குட்டியை நனைத்த மழை யாயினாய் !
அள்ளி, அள்ளிக் கொடுத்த கைகள், கிள்ளிக் கொடுத்ததேனோ ?
அருவியாய், ஆகாய ஊற்றாய், பருவத்தேப் பொழியாததேனோ ?
உயிர்களுக்கெல்லாம் வாழ்வு தந்துப் பசியைப் போக்கிடுவாயே ! - ஆனால், 
உயிர் உய்யச், செயும் தவமும், நல்தானமும் தவற வைத்தாயே !
ஆனைக் கட்டிப் போரடித்தக் களத்தில், ஆட்டுக்குட்டிகள் பார்த்தாயோ ? - மழையே,
ஆட்டுக்குட்டியை நனைத்தால் போதுமது அகிலத்துக்குமென நினைத்தாயோ ?
வானமதுப் பொய்த்தால், வாழ்வேப் பொய்க்கும் ; நாடே நலியும் ;  அறியாயோ ?
வாராய் மழையே, சினந் தவிர்த்து; ஏரி, குளம் செப்பனிடுவோம், இனி பொழிவாயோ ?
இல்லந்தோறும் நீ தரும் நீரமுதம் சேகரிப்போம் ; பொய்க்காதுப் பொழிவாய் மழையே !
இனி வரும் தலைமுறைக்கும்  உன்னருமை
உரைப்போம் ; வா, வா, மழையே வா, வா.

- கவி. அறிவுக்கண்.

**

கொடுமையிலும் கொடுமையாகக் கூடிவெயில் வாட்டிடும் !
கடுமையிலும் கடுமையாகக் காய்ந்தெரித்தே சுட்டிடும் !

செடிகொடியும் மரங்களுமே செத்ததுபோல் நின்றிடும் !
அடிவேரும் அற்றதுபோல் அருகம்புல் காய்ந்திடும் !

நீர்நிலைகள் எல்லாமும் நீரின்றிக் நெகிழ்ந்திடும் !
வேர்விட்டத் தாவரங்கள் 
விழிக்குருடாய்ப் வீழ்ந்திடும் !

ஆடுமாடு எல்லாமும் அரும்பசியால் அலைந்திடும் !
காடுகழனி எல்லாமும் காணாமல் கருகிடும் !

சோலையிலே பூக்களெல்லாம் சுருங்கிக்கீழ் வீழ்ந்திடும் ! 
பாலையாகிச் சோலையெலாம் பார்த்துமனம் வாடிடும் !

சிற்றூரில் பேரூரில் திகைக்கின்றார் நீரின்றி !
பற்றுள்ளார் நீர்வாங்கப் பணமிருந்தும் நீரின்றி !

நீரில்லா உலகத்தில் நிலைத்தெந்த உயிர்வாழும் ?
நீரில்லேல் எப்பணிதான் நிலையாக நடந்தேறும் ?

முப்பங்கு நீரிருந்தால் முன்னேற்றம் கிட்டிடுமா ?
உப்பான நீரதனால் உயிர்த்திடுமோ மன்னுயிர்கள் ?

காடழித்து நாடாக்கிக் களித்திருந்தோம் மழையில்லை !
நாடகந்தான் காடாகின் நமக்கேது நல்லநிலை ?

அடடடடா வானந்தான் அழுகிறதே பார்த்தெல்லாம் !
உடனிருந்த ஆட்டுக்குட்டி ஓடிமழை நனைந்தபடி !

மரங்களினை வெட்டிவிட்டோம் மரச்செடிகள் நட்டிடுவோம் !
உரம்நீரும் அதற்கிடுவோம் உயிராக நாம்காப்போம் !

மரம்வளர்ப்போம் மழைபெறுவோம் மண்ணகத்தை மலர்விப்போம் !
மரமாக நாமிருப்போம் மன்னுயிர்த்தே நிலைநிற்போம் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு 
சுட்டி  ஆடாகவே இருக்கும் ! 
மழையில்  அது நனைந்தாலும் 
சிலிர்த்து குதிக்கும்  மகிழ்ச்சியில் !
ஆட்டுக்கு தெரியும் மழை  அதை 
நனைக்குமே  தவிர சிதைக்காது ஒருபோதும் 
என்று ...! மழை  ஒரு  ஓநாயும் அல்ல 
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !
ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள் 
மனித வடிவில்  நம்  வீட்டு செல்லக் 
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !
எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ? 
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத்  தெரியும் 
நாய் எது ஓநாய் எது என்று !
நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும் 
அல்ல ...நமக்கே தெரிவதில்லையே 
மனித வடிவில் மிருகம் யார் நம் 
அருகில் என்று ?

- K .நடராஜன் 
 

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com