Enable Javscript for better performance
Deepam poem by readers | தீபம் வாசகர் கவிதை பகுதி 4- Dinamani

சுடச்சுட

  
  amazingdiwalidecorationtips2-24-1477313158

  தீபம்

  கண்மூடி நீதூங்கும் பேரழகை
  கனிவோடு கண்டதுண்டு கண்ணால் – இன்று
  மண்மூடி நீதூங்கும் அவலத்தை
  மறந்திட முடியுமோ என்னால்?

  சாபத்தை நீக்கவந்த சரித்திரமே
  சாயாத கனவுகளின் புத்தகமே- குட்டித்
  தீபத்தைப் போலவந்த நாயகனே- மூன்றுநாள்
  சாப்பிட எதுவும் இல்லை என்பதால்
  சாவினை நீ ருசித்தாயோ?

  கருப்பைக்குள் ஏற்றிவைத்த தீபம் – தாய்மைக்
  கனவுகளை எரித்ததென்ன சாபம்? – மண்
  கருப்பை இல்லை என்பது புரிந்ததால்
  மீண்டும் நீ பிறந்துவர மறுத்தாயோ?

  சாமிக்கு நேர்ந்துவிட்ட பிள்ளைபோல்
  சாவுக்கு ஆசைப்பட்ட கிள்ளைபோல்

  பூமிக்கு மகனாகப் போனாயோ – ஏழைத்
  தாய்மடியில் இருப்பதனை வெறுத்தாயோ?

  இருட்டைத் தின்றுதீர்த்த தீபம்நீ – மரணத்தின்
  இருள் நீக்கச் சென்றாயோ? – இந்தக்
  குருட்டுலகில் துயர்ப்பட விரும்பாமல்
  கும்மிருட்டு மண்குழியில் நின்றாயோ?

  நீ தூங்கிவிட்டாய் அணைந்துவிட்ட தீபமாய்! - இனி
  நான் தூங்கமாட்டேன் அணையாத சிதைத்தீயாய்!

  (திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணறு காவுகொண்ட
  ஈராண்டுப் பசுந்தளிர் சுஜித் வில்சனுக்குத் தாய் உகுக்கும் கண்ணீரின்
  மொழிபெயர்ப்பு)

  - கவிஞர் மஹாரதி

  **

  தீப ஒளியில் தீவினைகள் அகல
  சஞ்சலங்கள் விலக நன்மைகள் சேர
  மங்கலங்கள் சேர்ந்து மனையும் செழிக்க
  அசுரனை அழித்த அற்புதநாளில்
  அன்னை தந்தை ஆசி பெற்று
  ஆடிப் பாடி குதூகல சிரிப்புடன்
  இதயத்தில் என்றும் அமைதி நிறைய
  ஈடிணையில்லா இன்பம் எங்கும் பரவ
  உவகை பொங்கும் இனிய நன்னாளில்
  உற்றமும் சுற்றமும் எம்முடன் இணைந்து
  எடுத்த காரியம் வெற்றியில் முடிய
  ஏனிப்படி எனாமல் ஏணிப்படியாய் முன்னேற
  ஐங்கரன் அருளும் ஆசியும் கிடைக்க
  ஒன்றே நாம் எனும் ஒற்றுமை ஓங்க
  ஓம் என்னும் மந்திரம் நாவினில் இனிக்க
  ஔவையின் ஆத்திசூடியாய் வாழ்வு மலரட்டும்!! 

  - உமா, நோர்வே

  **
  ஆலையிலிட்ட அனல் அதற்குள் அடங்கியிருக்கும்
  உலைக்கிட்ட தீ அடுப்புக்குள் அடங்கியிருக்கும்
  கூரையோலை இட்ட தீ குடிசையை அழித்திடும்
  அகலிலிட்ட தீ அழகாய் ஒளிவிட்டு இருள் நீங்கிடும்
  கட்டிவைத்திடு ஆசை மனஅகலில் ஒளிர்ந்திடும்
  கட்டுக்கடங்கா ஆசை கொண்டவனை அழித்திடும்
  குடியை அழிக்கும், கூடவிருப்போரை அழிக்கும்
  மட்டில்லா ஆசை மருள் பெருக்கி அருள் நீக்கிடும்
  அறவழி அளவாசை நல்வாழ்விற்கு ஒளிகாட்டும்
  ஆசையும் அகலும் வாழ்வுக்கு வழிகோலும்
  திசை காட்டித் திருப்பும் தீபங்களே! நமக்கு

  - மீனா தேவராஜன் – சிங்கை

  **

  அறியாமையிலிருந்து
  ஆன்ம ஒளிக்கும்
  இருளிலிருந்து
  ஈசத்துவத்திற்கும்,
  உண்மையிலிருந்து 
  எளிமையினால்
  ஏற்றத்திற்கும்
  ஐயப்படாது அகத்தது
  ஒழுக - ஒருமைக்கும்
  ஓர்மைக்கும்,
  ஒனவியமில்லா அகத்தில்
  ஆய்தமற்ற அன்பு கூட்ட 
  வரிசையாய் ஏற்றிய -தீப ஒளி
  தீபாவளி ஆனது இப்போது,
  ஏற்றுவோம் ஞானமெனும் தீபத்தை .
  போற்றுவோம் தாய் திரு நாட்டை .

  - செந்தில்குமார் சுப்பிரமணியன்

  **

  விளக்கின் ஒரு ஒளி அது தீபம்,
  எந்த ஒன்றிலும் நிலையாக நின்றால்;
  அது சொர்க்கம்

  ஒரு நாள் சோறு கிடைத்தால் போதும் சொர்க்கம் என்றும்,
  மறுநாள் காரு கிடைத்தால் தான் சொர்க்கம் என்ற மாறும் மனநிலை;
  அது நரகம்

  ஒரு வழியில் சென்றால் இலக்கு,
  உனக்கு பிடித்ததை நீ செய்யலாம்;
  வாழ்க்கை வளமாக

  பல  வழியில் சென்றால் வழக்கு,
  அது உன்னை மீறி உன்மீது திணிக்கப்படும்;
  வெறுப்பாக

  ஒன்றில் நிலைகொள்,
  சொர்க்கம் உனக்குள்.

  - ம.சபரிநாத்,சேலம்

  **

  புறஇருளை  அகற்றிடுமே தீபம் நல்ல
        புத்தொளியைக் காட்டிடுமே தீபம் உள்ள
  அறவழியைக் காட்டிடுமே சென்றால் நெஞ்சின்
        அகவிருளை ஓட்டிடுமே தீபம் யாவும்
  திறனறியும் நெருப்பன்றோ தீபம் செய்யுந்
        தீமைக்கும் சாட்சியன்றோ தீபம் நல்ல
  உறவெனவே கொண்டாட, தீபம் யார்க்கும்
        உதவிடுமே வெளிச்சப்பூ மலரு மன்றோ!

  தீபமொரு குறியீடு நல்லோர் உள்ளத்
        திசைசெய்யும் வழிபாடு சுடரை ஏற்றிப்
  பாபவிருள் போக்குகின்ற அழிப்பான் ஞானப்
        பக்குவத்தைப் போதிக்கும் ஏடு, கெட்ட
  ஆபத்தை நீக்குகின்ற வழியைக் காட்டும்
        அறிவதுதான் நாம்செய்யும் நன்மை நன்கு
  தீபத்தை நாளும்நீ ஏற்று, இல்லம்
        செழித்திடவே ஒளிபோற்று நலமே காண்பாய்.

  - கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை

  **

  ஏற்றுக தீபம்

  அறுநூறடிக் குழாய்க் கிணறொன்றை
  அவதானமாக மூடிவைக்காத,
  அறியாப் பாலகர் செல்வதைத் தடுக்க
  அரணாய் வேலி போட்டுவைக்காத
  அன்னையர் தந்தையர் அறியாமை நீங்க
  அனைத்திந்தியாவிலும் ஏற்றுக தீபம்.

  இருபத்தைந்தடி ஆழத்திற்குள்
  இருந்த குழந்தையை மீட்பதற்குப் போய்
  இன்னும் எழுபதடிக்குத் தள்ளிய
  இந்தியநாட்டுத் தொழில் நுட்பத்தின்
  இயலாமை நீங்கி அறியாமையென்னும்
  இருளகன்றிடவே ஏற்றுக தீபம்.
  ஆழக் கிணற்றில் வீழ்ந்த குழந்தையின்
  அவல நிலையை அரசியலாக்கி
  நாளும் பொழுதும் நயம் பெறப்பார்க்கும்
  நரிக் குணமழிய ஏற்றுக தீபம்.

  -சித்தி கருணானந்தராஜா

  **

  தீபங்களே ! நீங்களே மேலானவர்கள்
  உலகையாளும் பரிதியையும் இரவு
  அடக்கிவிடுகிறது நீங்களோ அந்த இருளையும்
  எதிர்த்து போராடுபவர்கள்
  காற்றின் உதவியால் இருள் உங்கள் மூச்சைப்
  பிடித்தாலும்
  முடிந்தவரை போராடி தான் அணைகிறீர்கள் !

  உங்கள் எரியும் மூலதனம் மாறினாலும்
  உங்களின் முகங்கள் மாறுவதில்லை
  உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்ற
  இறக்கமில்லா உங்களின் ஒளி நீதமானவை
  உங்களை குறைத்து வைத்தால் எறும்புகளுக்கும்
  ஏற்றி வைத்தால் கப்பல்களுக்கும் வழி
  காட்டுவீர்கள்
  இரவில் ஒளிரும் நீங்களே விண்ணவர்களுக்கு
  நட்சத்திரங்கள் !

  தீபங்களே ! நீங்கள் நேர்மையானவர்கள்
  அதனால்தான் திருடர்களும் பாவம்
  செய்பவர்களும் உங்களை அழித்து
  விடுகிறார்கள்
  உங்களின் ஆராதனை இல்லாமல் கடவுளும்
  முழுமை அடைவதில்லை
  ஒற்றுமைக்கு நீங்களே உதாரணம் உங்களால்

  ஒளி பெரும் மற்ற தீபங்களையும் சரிநிகர்
  ஒளிரவைத்து அழகு பார்ப்பீர்கள்

  புதுமணப்பெண்கள் உங்களை ஏற்றியே புது
  வாழ்வை தொடங்குகின்றனர்
  அதுவரை இலகுவாக வாழ்ந்த அவள் இப்போது
  போராடத் தொடங்குகிறாள்
  சிறிய ஒளிதானே என சிலர் ஊதி அணைக்க
  நினைக்கிறார்கள்
  பற்றி எரிந்தால் அணைக்கவியலா காட்டுத்தீயும்
  நீயென பலருக்குத் தெரிவதில்லை..!!

  - ஹமி, தேனி மாவட்டம்

  **

  காலையும் மாலையும் ஏற்றுங்கள் தீபம்!
  அது.............
  நேற்று முடிந்த இறந்தகாலம்,
   இன்று  நடக்கும்  நிகழ்காலம்,
  நாளைய எதிர்காலம்   என
  முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி!
  காலையும் மாலையும் ஏற்றுங்கள் தீபம்!
  அது................
  நம்மை நல்வழி நடத்தி சென்று
  செம்மையான பாதை காட்டும் ஆசான் !
  காலையும் மாலையும் ஏற்றுங்கள் தீபம்!
  அது..........
  அவை தளர்ந்த  பொழுதில்
  நம் மனம் புதைத்தாலும்
   ஆன்மாவை விழிக்க செய்யும் நம்பிக்கை!
  காலையும்  மாலையும்  ஏற்றுங்கள் தீபம்!
  அது........
  இயற்கை செயல்களையும்
  செயற்கை  நகல்களையும்
  படம் பிடிக்க உதவும்  விஞ்ஞானி!
  காலையும்  மாலையும்  ஏற்றுங்கள் தீபம்!
  அது...........
  வாழ்க்கை என்ற  மேடையில்
  நடிக்க  சொல்லிக்  கொடுக்கும்
  துடிப்புள்ள இயக்குனர்!
  தினம் தீபம் ஏற்றுவோம்! வளமாக  !வாழ்வோம்! 

  - பிரகதா நவநீதன், மதுரை

  **

  அறியாமை அழகுருவில் அத்தனையும் அடித்துத்தள்ளும்,
  தீண்டாமை திருடன்போல ஊரெல்லாம் சுற்றித்திரியும்,
  கேள்வி கேட்கும் உரிமையெல்லாம் திகைத்துப்போய் திக்கிநிற்கும்,
  பொதுநலத்தின் குழந்தையை போக்கத்தவனாய் உலகம் நோக்கும்,
  அறிவிலிகள் ஆட்சிகளில் ஆந்தைக்கூட்டம் ஆட்டம்போடும்,
  ஆட்டுமந்தைக் கூட்டத்தின் ஓலம் மட்டும் காதைக் கிழிக்கும்,
  ஒளியெல்லாம் வற்றிப்போய் இருளெங்கும் சூழ்ந்து கொள்ளும்,
  விளக்கேற்ற விரும்புவபன் வீடெல்லாம் பற்றி எரியும்,
  இந்தநிலை உலகத்தில் என்றேனும் மாறாதோ!
  உறங்குபவன் உணர்ச்சியெல்லாம் விழித்துக்கொண்டு கேளாதோ!
  மந்தபுத்தி மனசுக்காரன் மண்டியிட்டு மடிந்துபோக..
  மாற்றதின் நற்பண்பை ஊருலகம் காணவேண்டி..
  பேச்சின்போதும் பேதத்தின் பெயர் சொல்ல மறந்துபோக..
  பேரின்பம் வாயில் திறக்க சிற்றின்பம் துறந்துபோக..
  கருமைவானம் வெளுத்துப் போக..
  காரிருளைக் கிழித்துக் கொல்ல..
  எழுச்சியென்னும் எண்ணெய் ஊற்றி..
  மனதைக் கொஞ்சம் திரித்து விட்டு..
  அறிவுச் சுடர் பற்றி எரியும் 
  உணர்ச்சித் தீபம் ஏற்றி வைத்து 
  உச்சிக்குளிர நொடியேனும் ஆடிடுவோம்!

  -சிவசங்கரி , சிவகங்கை

  **

  குழியில் விழுந்த சிறு குழந்தைக்கான தீபமிது
  குழியில்விழும் சோகங்கள் தீரவேண்டி ஏற்றும் தீபமிது
  விழுந்தவுடன் காக்க தவறியவர்களை கண்டிக்கும் தீபமிது
  வளர்ப்பின் அலட்சியங்களை சுட்டிக்காட்ட வந்த தீபமிது

  ஏட்டுச் சுரக்காயான விஞ்ஞானத்தை கண்டிக்கும் தீபமிது
  எத்தனைமுறை பட்டாலும் திருந்தாதவரை கண்டிக்கும் தீபமிது
  ஏங்கிய உள்ளங்களின் பரிதவிப்பில் குமுறும் தீபமிது
  எங்கும் காக்கும்வசதி வேண்டுமென்ற கோாிக்கை தீபமிது

  மெத்தனப்போக்கை மொத்தமாய் கண்டிக்க வந்த தீபமிது
  ஔியில்லா இருள்சூழ்ந்த தீபாவ'(ளி)லி கண்ட  தீபமிது
  விழியற்ற நிலையில் ஔியேற்றி வாழும் தீபமிது
  வழியற்ற நிலையில் மாற்றம்வேண்டி மன்றாடும் தீபமிது

  இது வலியோடு கண்ணீரால் ஏற்றப்பட்ட தீபமிது
  இது பெருங்காற்றெனும் துயரில் சிக்கிய தீபமிது
  இது இழப்புகள் வராதிருக்க - தவம்கிடக்கும் தீபமிது
  இது ஔிரும் இந்தியாவில் மழுங்கிய தீபமிது

  இது வரலாற்றில் என்றும் வாழும் தீபமிது
  இது வருமுன் காப்போம் என்றுணர்த்திய தீபமிது
  இது ஈடு இனணயற்ற தெய்வீக தீபமிது
  இது எல்லோர் நெஞ்சத்திலும்வாழும் மழலை தீபமிது

  -கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

  **
  இருளினை இடித்து
  வெளிச்சம் இரைக்க,
  .
  அறியாமை நீங்கி
  அறிவு வளர,
  .
  வெறுமை நீங்கி
  நிறைவு போங்க,
  .
  வறுமை அகன்று
  செழுமை வர,
  .
  துன்பம் துவண்டு
  இன்பம் பெறுக,
  .
  அநியாயங்கள் விலகி
  நியாயங்கள் அருக
  .
  ஏற்றுவோம்
  கல்வியெனும்
  தீபத்தை!.
  .

  - இரா.வெங்கடேஷ், இராஜபாளையம்

  **
  விண்ணகத்து   வீட்டினிலே   ஏற்றிவைத்த   தீப(ம்)
           விரிகதிரால்   பகல்பிறந்து   உயிர்வாழ  வைக்கும்;
  விண்ணகத்து   வீட்டினிலே  இருள்விரட்ட   இரவில்
            தண்ணொளியை   வீசுகின்ற  வெண்ணிலவு   தீபம்;
  மண்ணுலக    வறுமையிருள்   ஓட்டுகிற   உழவர்
           மங்காத   உழைப்பினொளி   பெருந்தீப   மாவர்;
  உண்டியுந்தாம்   சுருங்கிடாமல்   உணவுண்ண   வேண்டி
          உருவான  வடலூரில்   வள்ளலாரின்   தீபம்!


  இல்லறத்தை   நல்லறமாய்    வடிவமைக்கும்   நல்லாள்
          இல்லறத்தில்   ஈடில்லா  வாழ்வியலின்   தீபம்;
  எல்லையிலே    நாட்டினையும்   காக்கின்ற   வீர
         இணையற்றப்   போர்மறவர்   நாட்டினது தீபம்;
  எல்லையின்றி   அறிவியலை  விரிவாக்கி  வெற்றி
          ஏந்திட்ட  அறிவியலார்  கலாமுமொரு   தீபம்;
  அல்லல்கள்  அகற்றிடவே   தனையீந்த  சான்றோர்
           அனைவருமே   நாட்டினது    ஒளிமிகுந்த   தீபம்!


  தொழுநோயால்   துடித்தவர்க்குத்   துயர்துடைத்த   அன்னை
           தெரசாவும்   நோயாளி   மக்களுக்கு  தீபம்;
  வழுவாமல்   ஏழையர்க்குக்   கல்வியொளி  ஈந்த
           வளமனத்தர்   காமராசர்   மங்காத  தீபம்;
  பழுதாகி   இருந்திட்ட   பாரதத்தின்   அடிமை
            போக்கியதால்   விடுதலைக்கோ  காந்தியொரு  தீபம்;
  விழுதாக    நாட்டினையும்  தாங்கிநின்ற   மொத்த
            மாமேதை   எல்லாமே   நாட்டினது  தீபம்!

  - நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

  **

  TAGS
  Poem
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai