/

டேவிஸ் கோப்பை: பயஸ் - பூபதி ஜோடி அபார வெற்றி

சென்னை, செப். 18: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி அபார வெற்றி பெற்றது. உலக டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:51 pm

சென்னை, செப். 18: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி அபார வெற்றி பெற்றது.

உலக டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்தியாவின் பயஸ் - பூபதி ஜோடிக்கும், பிரேசிலின் மார்செலோ மெலோ - புருனோ சோரஸ் ஜோடிக்கும் இடையே இரட்டையர் ஆட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய ஜோடி 6-4, 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய ஆட்டம் 2 மணி 19 நிமிடங்களில் முடிவுற்றது ஆபார ஆட்டம்: இந்திய ஜோடி ஆரம்பம் முதலே ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதல் செட்டில் இரண்டு பிரேக் பாயின்ட்களை இந்திய ஜோடி பெற்று, 6-4 என்ற புள்ளிகளில் எளிதாக செட்டைக் கைப்பற்றியது.

இரண்டாவது செட் ஆட்டத்தில் பிரேசில் ஜோடி முழுத் திறனை வெளிப்படுத்தி ஆடியது. இந்த செட்டின் 4-வது சுற்றின் போது மார்செலோ மெலோ அடித்த பந்து மையக் கோட்டுக்கு வெளியே விழுந்தது.

ஆனால், நடுவர் தவறுதலாக ஏஸ் முறையில் பிரேசில் அணிக்கு புள்ளி கொடுத்தார். இதனால் நடுவருடன் மகேஷ் பூபதி வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். இருந்தபோதும் பிரேசிலுக்கு புள்ளி தரப்பட்டது.

பின்னர் ஆட்டம் டை-பிரேக் வரை நீண்டது. இதில் 7-5 என்ற புள்ளிகள் பெற்று இந்திய ஜோடி போராடி செட்டைக் கைப்பற்றியது.

மூன்றாவது செட் ஆட்டத்தின் போது பிரேசில் ஜோடி சற்று சோர்ந்த காணப்பட்டது. அதே நேரம் பயஸ், பூபதி ஜோடி மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ஜோடிக்கு இந்த செட்டில் இரண்டு பிரேக் பாயின்ட்கள் கிடைத்தது. இதனால் 6-1 என்ற புள்ளிகளில் எளிதாக செட்டைக் கைப்பற்றி இந்திய ஜோடி போட்டியை வென்றது.

ரசிகர்கள் ஆரவாரம்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளின் போது, மிகக் குறைவான ரசிகர்களே அரங்கில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சனிக்கிழமை அரங்கு நிறைந்து காணப்பட்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே, பயஸ் ரசிகர்களைப் பார்த்து சிரித்தபடி மகிழ்ச்சியாக காணப்பட்டார். வெற்றிக்கு ரசிகர்களின் ஆதரவும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இன்றைய போட்டி (ஒற்றையர் ஆட்டம்)

முதல் போட்டி - காலை 11.30: சோம்தேவ் - தாமஸ் பெல்லுசி

இரண்டாவது போட்டி - பிற்பகல் 03.00:

ரோகன் போபண்ணா - ரிகார்டோ மெலோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.