இந்திய அணிக்கு காத்திருக்கிறது சவால்!
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் திங்கள்கிழமை (நாளை) தொடங்குகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடுவது, சச்சினின் 100-வது சதம் போன்றவற்றால் எதிர்பார


இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் திங்கள்கிழமை (நாளை) தொடங்குகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடுவது, சச்சினின் 100-வது சதம் போன்றவற்றால் எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் உள்ளாகியிருக்கிறது இந்த டெஸ்ட் தொடர்.
இது மட்டுமின்றி, கடைசியாக அன்னிய மண்ணில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-0 என்ற கணக்கில் படுதோல்வி கண்டு நாடு திரும்பியது. அதன்பிறகு இப்போது ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது நிச்சயம் பெரும் சவால். மேலும் இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி, தோல்வி ஆஸ்திரேலியாவின் தரவரிசையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரை டிரா செய்தாலோ அல்லது இழந்தாலோ தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியை 3-வது இடத்துக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை தென் ஆப்பிரிக்கா பிடித்துவிடும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனமானதுதான் என்றாலும், பெüலிங்கில் அந்த அணி மிக பலமாகவே உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அந்த அணியில் சமீப காலமாகவே சொல்லிக் கொள்ளும் அளவில் யாரும் விளையாடவில்லை.
ஆனால் பெüலிங்கில் பீட்டர் சிடில், பென் ஹில்பெனாஸ், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்செல் ஸ்டார்க் என அதிகவேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா. இவர்களில் ஜேம்ஸ் பட்டின்சன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இளம் வீரர்கள் என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமாக பந்துவீசி அச்சுற்றுத்தலை ஏற்படுத்தினர். இவர்களின் பந்துவீச்சு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. வழக்கமாகவே வேகப்பந்து வீச்சை சமாளிக்கும் திறன்பெற்ற நியூஸிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட இவர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா டிரா செய்ததற்கு பெüலர்கள்தான் காரணம். இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் ஆஸ்திரேலியா பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டாலும், எதிரணியை விரைவாக சுருட்டியதால்தான் தொடரை இழக்காமல் தப்பித்தது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய பெüலிங் துறையில் பட்டின்சன், ஸ்டார்க்கின் இளமை ஒருபுறம் என்றால், பீட்டர் சிடில், ஹில்பெனாஸ் ஆகியோரின் அனுபவம் ஒருபுறம் பலம் சேர்க்கிறது. டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள மெல்போர்ன், சிட்னி, பெர்த், அடிலெய்டு மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவையே. காலங்காலமாகவே இங்கு வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனால் இந்த மைதானம் மட்டுமின்றி, சொந்த ஊர் என்பது ஆஸ்திரேலிய பெüலர்களுக்கு நிச்சயம் கூடுதல் பலம்தான்.
இதனால் இளமையும், அனுபவமும் நிறைந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக இந்தியா ரன் குவிப்பது கடினமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் இந்தியாவின் அனுபவமிக்க திராவிட், சச்சின், லட்சுமண், சேவாக்கூட ஜேம்ஸ் பட்டின்சனின் வேகத்தை எதிர்கொள்ள தடுமாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர்கான், இஷாந்த் சர்மா ஆகியோர் இன்னும் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாமல் போராடி வருகின்றனர்.
இவர்கள் இருவரைத் தவிர இந்தியாவின் மற்ற பெüலர்கள் அனைவருமே அனுபவமற்ற புதுமுகங்கள்தான். பெüலிங் துறை பலவீனமாக உள்ள நிலையில், இந்திய அணி பேட்டிங்கையே முழுமையாக நம்பியுள்ளது. ஆனால் இந்திய பேட்டிங்குக்கு சவால் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சு உள்ளது. டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டெழலாம். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய பெüலர்கள் நிச்சயம் சவாலாகத் திகழ்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் சவாலை சமாளிப்பார்களா, ஆஸ்திரேலிய மண்ணில் முத்திரைப் பதிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பீட்டர் சிடில்
பீட்டர் சிடில் சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்துக்கு எதிரான தொடர்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிடில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் சராசரி 31.63.
ஹில்பெனாஸ்
ஜான்சன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெறாத நிலையில், அனுபவத்தைக் கருத்தில் கொண்டே பென் ஹில்பெனாஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 55 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரின் சராசரி 34.65. குறிப்பாக ஹில்பெனாஸ், பீட்டர் சிடில் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சையே பதிவு செய்துள்ளனர்.
மிட்செல் ஸ்டார்க்
இதேபோல் மிட்செல் ஸ்டார்க்கும் சிறப்பாகவே பந்துவீசியுள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், அவரின் சராசரி 50. ஸ்டிரைக் ரேட் 84.
ஜேம்ஸ் பட்டின்சன்
நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய 21 வயதான ஆஸ்திரேலியாவின்
ஜேம்ஸ் பட்டின்சன் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி
நியூஸிலாந்து அணியை 150 ரன்களுக்கு சுருட்டி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்து அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் ஆனார். இரண்டாவது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் என மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 14 விக்கெட் வீழ்த்தி தொடர்நாயகன் விருதையும் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...