நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புணே வாரியர்ஸை வீழ்த்தியது சென்னை

சென்னை, ஏப்.19: ஐபிஎல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் புணே வாரியர்ஸை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.  முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:44 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஏப்.19: ஐபிஎல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் புணே வாரியர்ஸை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. சென்னையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற புணே கேப்டன் கங்குலி சென்னையை பேட் செய்ய அழைத்தார்.

 மோர்கல், முரளி விஜய் இல்லை:சென்னை அணியில் அல்பி மோர்கலுக்குப் பதிலாக போலிங்கரும், முரளி விஜய்க்குப் பதிலாக ரித்திமான் சாஹாவும் சேர்க்கப்பட்டனர். புணே அணியில் இடுப்பு வலி காரணமாக அசோக் திண்டா இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் முரளி கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

 சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸýம், பத்ரிநாத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டாலும், மெதுவாக விளையாடியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பில்லை. இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 116 ரன்கள் குவித்தனர். 48 பந்துகளைச் சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பத்ரிநாத்தும் ஆட்டமிழந்தார். 48 பந்துகளைச் சந்தித்த பத்ரிநாத் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.

 பின்னர் வந்த ரெய்னா, தான் சந்தித்த 2-வது பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அது கார்த்திக்கின் கையில் தஞ்சம் புகவே டக் அவுட்டானார். இதையடுத்து தோனியுடன் இணைந்தார் பிராவோ. 8 பந்துகளைச் சந்தித்த பிராவோ 1 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 அடுத்து ஜடேஜா களமிறங்கினார். மார்லான் சாமுவேல்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரின் 3-வது பந்தில் இமாலய சிக்ஸரும், 4-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார் தோனி. ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. தோனி 12 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார்.

 புணே தரப்பில் மார்லான் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டுகளையும், நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 பின்னர் பேட் செய்த புணே அணியில் உத்தப்பா 8, ரைடர் 9 ரன்களில் வெளியேறினர். மணீஷ் பாண்டே 6 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கங்குலியுடன் இணைந்தார் மார்லான் சாமுவேல்ஸ். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கங்குலி போலிங்கரின் 6-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். ஜகாதி வீசிய 10-வது ஓவரில் தூக்கியடிக்க முயன்றார் கங்குலி. ஆனால் அது ஸ்டெரய்ட் திசையில் நின்ற குலசேகராவிடம் தஞ்சம் புகுந்தது.

 26 பந்துகளைச் சந்தித்த கங்குலி, 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் கண்டார். 24 பந்துகளைச் சந்தித்த சாமுவேல்ஸ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்தார் ஏஞ்செலோ மேத்யூஸ். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாட 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எட்டியது புணே. கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிராவோ வீசிய 18-வது ஓவரில் 10 ரன்கள் எடுக்க, கடைசி இரு ஓவர்களில் புணேவின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன.

 போலிங்கர் வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் எல்லைக்கோட்டில் நின்ற டூபிளெஸ்ஸிஸ்ஸிடம் கேட்ச் ஆனார் ஸ்மித். அவர் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதையடுத்து புவனேஸ்வர் குமார் களமிறங்கினார். அந்த ஓவரில் 4 ரன்கள் எடுக்க முடிந்தது.

 இதனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய பிராவோ முதல் பந்திலேயே மேத்யூûஸ போல்டாக்கினார். 22 பந்துகளைச் சந்தித்த மேத்யூஸ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில் புணே அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. சென்னை தரப்பில் பிராவோ,குலசேகரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி பெற்ற 3-வது வெற்றி இது.

 புணே அணியின் தொடக்க வீரர்கள் உத்தப்பா, ரைடர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்திய குலசேகரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.



போட்டித் துளிகள்...

 * டூபிளெஸ்ஸிஸ் 7 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டார் முரளி கார்த்திக். இதனால் தப்பிப் பிழைத்த டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்கள் எடுத்தார்.

 * இந்த போட்டியில் முதல் அரைசதத்தை அடித்தார் பத்ரிநாத்.

 * மார்லான் சாமுவேல்ஸ் வீசிய கடைசி ஓவரின் 3-வது பந்தில் தோனி அடித்த சிக்ஸர், மைதானத்திற்கு வெளியில் பறந்தது. இந்த சிக்ஸர் 104 மீட்டர் தூரம் ஆகும். இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 3-வது பிரமாண்ட சிக்ஸர் இது. 106 மற்றும் 105 மீ. தூரத்தில் இரண்டு சிக்ஸர்களை கெயில் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 * சென்னை பேட்டிங்கின்போது ஆட்டம் மந்தமாக இருந்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்த ரசிகர்கள் பின்னர் சோர்வடைந்தனர். இதனால் மைதானம் நிசப்தமாக காணப்பட்டது.

 * புணேயின் பீல்டிங் சிறப்பாக இல்லையென்றாலும், சென்னையின் பீல்டிங் மிக அற்புதமாக இருந்தது. உத்தப்பா, ரைடர், பாண்டேவின் கேட்சுகளை முறையே அஸ்வின், பிராவோ, பத்ரிநாத் ஆகியோர் அற்புதமாக பிடித்தனர்.

 * இந்த ஐபிஎல் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை (24) பதிவு செய்தார் கங்குலி.

 * நடிகர் தனுஷ் போட்டியைக் காண மைதானத்துக்கு வந்திருந்தார்.

 இன்றைய ஆட்டம்

 கிங்ஸ் லெவன் பஞ்சாப் -

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 இடம் - மொஹாலி

 நேரம் - இரவு 8 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.