நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒலிம்பிக் பதக்கமா, வறட்டு கௌரவமா?

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நான்கிலும் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய டென்னிஸ் நட்சத்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:12 pm

ஏ.வி. பெருமாள்

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நான்கிலும் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.

கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை, அமெரிக்க ஓபனில் இரு முறை, விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனில் தலா ஒருமுறை, கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் நீங்கலாக 6 முறை பட்டம் வென்றுள்ளார். 40 வயதை நெருங்கிவிட்டபோதிலும், சாம்பியன் பட்டம் மற்றும் பதக்கத்தின் மீதான பயஸின் தாகமோ (தாக்கமோ) குறையவில்லை.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் விளையாடிவிட்டு உடனடியாக இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் களமிறங்கியதால், செர்பியாவின் டிப்சரேவிச்சால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனாலும், பயஸ் தனிநபராகப் போராடி எதிர்ஜோடியை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக்குடன் இணைந்து பட்டம் வென்றார்.

அவருடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான். ஆம் தனது 6-வது ஒலிம்பிக்கில் விளையாடக் காத்திருக்கிறார் இந்த வங்கத்துப் புலி. இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

1996-ல் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றாலும், இரட்டையர் பிரிவில் இதுவரை பதக்கம் வென்றதில்லை. லண்டனில் ஜூலையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வேட்கையில் இருக்கிறார் பயஸ். ஆனால் அவருடன் இந்த ஒலிம்பிக்கில் ஜோடி சேர்ந்து விளையாடப்போவது யார் என்பதுதான் இப்போது எல்லோரிடத்திலும் எழுந்துள்ள கேள்வி.

கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் பிரிந்தாலும், கடந்த ஒலிம்பிக்கில் சேர்ந்து விளையாடிய பயஸýம்-பூபதியும் காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்-ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஜோடியிடம் தோல்வி கண்டனர்.

இந்த நிலையில் 2011-ல் மீண்டும் இணைந்த பயஸýம்-பூபதியும், அந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் பிரிந்தனர். சர்வதேச போட்டிகளில் ஒருநாட்டு வீரர், மற்ற நாட்டு வீரர்களுடன் ஜோடி சேரலாம் என்றாலும், ஒலிம்பிக்கில் அது சாத்தியம் கிடையாது. அந்தந்த நாட்டு வீரர்கள் மட்டுமே இணைந்து விளையாட முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பயஸýக்கு இணையான வீரர் என்றால் மகேஷ் பூபதிதான். அடுத்ததாக ரோஹன் போபண்ணாவை சொல்லலாம். பயஸýம்-பூபதியும் இணைந்து விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இல்லை. சமீபத்தில் பிரிந்தபோது, "அது பயஸின் முடிவுதான். என்னுடையதல்ல. இனிமேல் அவருடன் இணைந்து விளையாடமாட்டேன்' என்று மகேஷ் பூபதி கூறிவிட்டார்.

ஒலிம்பிக்கைப் பொறுத்தவரையில், யாருடன் யார் இணைந்து விளையாடுவது என்பதை இந்திய டென்னிஸ் சங்கம்தான் முடிவு செய்யும் என்றாலும், வீரர்கள் மனதளவில் தயாராக இல்லாதபோது அவர்களை இணைந்து விளையாட வைப்பதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது.

போபண்ணாவை, பயஸýடன் இணைந்து விளையாட வைக்கலாம் என்றால் அதுவும் கடினமான முடிவாகவே அமையும். ஏனென்றால் பயஸýடனான கூட்டணியை முறித்தபிறகு சர்வதேச போட்டிகளில் போபண்ணாவுடன் இணைந்து பங்கேற்று வருகிறார் மகேஷ்.

மேலும் "தானும், போபண்ணாவும் ஒலிம்பிக்கைக் கருத்தில் கொண்டே பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக' சமீப காலமாக ஊடங்களிடம் பேசி வருகிறார் மகேஷ். ஒலிம்பிக்கில் போபண்ணாவுடன் இணைந்து பங்கேற்க விரும்புவதையே மகேஷ் பூபதி இப்படி சூசகமாகத் தெரிவித்து வருகிறார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் போபண்ணா சிறப்பாக ஆடியபோதிலும், பூபதியின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பூபதி சரியாக விளையாடாததற்கு கூட்டணி மாற்றம்கூட காரணமாக இருக்கலாம். ஆனால் பயஸோ, யாருடன் இணைந்தாலும் சிறப்பாக ஆடுகிறார். சென்னை ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றில் வெவ்வேறு வீரர்களுடன் இணைந்துதான் பட்டம் வென்றார் பயஸ்.

இந்த ஒலிம்பிக்கில் மகேஷ் பூபதியும், போபண்ணாவும் இணைந்து பங்கேற்றால், நல்ல உத்வேகத்தில் உள்ள பயஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பது சிக்கலாகிவிடும். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்திய டென்னிஸ் சங்கம்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டபோதிலும், சீனாவில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பயûஸயும், பூபதியையும் அனுப்பிவைத்தது இந்திய டென்னிஸ் சங்கம். ஆனால் அதில் காலிறுதியோடு வெளியேறியது இந்த ஜோடி. வீரர்களை ஜோடி சேர வற்புறுத்தக்கூடாது என்று முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜும் கூறியுள்ளார்.

இரட்டையர் பிரிவு அணியைத் தேர்வு செய்யும் அதிகாரம் டென்னிஸ் சங்கத்துக்குத்தான் இருக்கிறது என்றாலும், அதற்கு இசைவு தெரிவிப்பதோ, மனதளவில் இணைந்து விளையாடுவதோ வீரர்களின் கையில்தான் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் டென்னிஸ் சங்கம் வீரர்களிடையே பேசி, சமரசத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்படி செய்துவிட்டு அணியை அறிவிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.

வீரர்களும், தங்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டைவிட நாட்டின் நலன்தான் முக்கியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரட்டையர் பிரிவில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்க சகோதரர்களான மைக் பிரையன்-பாப் பிரையன் ஜோடியை பயஸ்-பூபதி ஜோடி கடந்த ஆண்டில் இருமுறை வீழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச்சுற்றிலும் பயஸ்-ரடேக் ஜோடி பிரையன் சகோதரர்களைத் தான் வீழ்த்தியது.

இந்திய டென்னிஸ் வரலாற்றில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் பயஸ், பூபதி ஆகியோர் தங்களின் டென்னிஸ் வாழ்க்கையில் சற்றேறக்குறைய கடைசிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு லண்டன் ஒலிம்பிக் சரியான தருணம் மட்டுமல்ல, கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம். எனவே இப்போது முக்கியம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதா அல்லது தங்களின் வறட்டு கௌரவமா என்பதில் இருவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமிது.

26 பட்டங்கள்...

பயஸும், பூபதியும் இணைந்து இதுவரை 3 கிராண்ட் ஸ்லாம், 23 ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் பட்டங்கள் வென்றுள்ளனர். சென்னை ஓபனில் மட்டும் இவர்கள் இருவரும் இணைந்து 5 முறை பட்டம் வென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.