சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது ஆஸ்திரேலியா.

News image
Updated On :26 பிப்ரவரி 2013, 12:59 am

ஏ.வி. பெருமாள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது ஆஸ்திரேலியா.

இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், 7-வது வீரராக களம்புகுந்த மோய்சஸ் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து அந்த அணியை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

சென்னையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 133 ஓவர்களில் 380 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் தோனி 206, புவனேஸ்வர் குமார் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கேப்டன் தோனி 224 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 6 மணி நேரம், 5 நிமிடங்கள் களத்தில் இருந்த தோனி 265 பந்துகளில் 6 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். தோனி-புவனேஸ்வர் குமார் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து இஷாந்த் சர்மா களம்புகுந்தார். இந்த ஜோடி மேலும் 8 ஓவர்கள் தாக்குப்பிடித்தது. புவனேஸ்வர் குமார் 38 ரன்கள் எடுத்திருந்தபோது சிடில் பந்துவீச்சில் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 572 ரன்களில் முடிவுக்கு வந்தது. 97 பந்துகளைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியத் தரப்பில் பட்டின்சன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சரிவுக்குள்ளான ஆஸ்திரேலியா: முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வயிற்றுக் கோளாறு காரணமாக டேவிட் வார்னர் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. இதனால் ஷேன் வாட்சனும், எட் கோவனும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ûஸத் தொடங்கினர். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். மைதானம் முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால் அஸ்வின், ஜடேஜா, ஹர்பஜன் ஆகியோரையே தோனி பெரும்பாலும் பயன்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. இந்த நிலையில் அஸ்வின் வீசிய 16-வது ஓவரின் கடைசிப் பந்தில் வாட்சன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கோவனுடன் இணைந்தார் வார்னர். இந்த ஜோடி 13 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 97 பந்துகளைச் சந்தித்த கோவன் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்த பிலிப் ஹியூûஸ ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியேற்றினார் ஜடேஜா.

காப்பாற்றிய ஹென்ரிக்ஸ்: இதன்பிறகு வார்னர் 23, மேத்யூ வேட் 8 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் கிளார்க்குடன் இணைந்தார் மோய்சஸ் ஹென்ரிக்ஸ். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 131 ரன்களை எட்டியபோது கிளார்க்கின் விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய (50-வது ஓவரின் 3-வது பந்து) துல்லியமான பந்தை கிளார்க் தடுத்தாட முயன்றபோதும், கண் இமைக்கும் நேரத்தில் அவரின் பேடை (காலுறை) பந்து பதம்பார்க்கவே எல்பிடபிள்யூ ஆனார். 51 பந்துகளைச் சந்தித்த கிளார்க் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.

இதனால் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா. அப்போது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட ஆஸ்திரேலியா 61 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஒருபுறம் பீட்டர் சிடில் 2, பட்டின்சன் 11, மிட்செல் ஸ்டார்க் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சிறப்பாக விளையாட இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நெருங்கியது ஆஸ்திரேலியா.

கடைசி விக்கெட்டாக நாதன் லியான் களமிறங்கியபோது, அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

லியான் ஒரு முனையில் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்ற, மறுமுனையில் ஹென்ரிக்ஸ் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். இதனால் 73-வது ஓவரில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது ஆஸ்திரேலியா.

இதைத் தொடர்ந்து ஹர்பஜன் ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தப் போட்டியில் 2-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் ஹென்ரிக்ஸ். 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹென்ரிக்ஸ் 124 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 75, நாதன் லியான் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

கடைசி நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை விரைவாக வீழ்த்தும்பட்சத்தில், இந்திய அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக வெற்றி பெற முடியும்.

அறிமுகமா, அனுபவமா?

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹென்ரிக்ஸ், முதல் இன்னிங்ஸில் 7-வது வீரராக களமிறங்கி 68 ரன்கள் எடுத்ததோடு, கேப்டன் கிளார்க்குடன் சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவித்து அணியைச் சரிவிலிருந்து மீட்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

முதல் இன்னிங்ûஸப் போலவே, 2-வது இன்னிங்ஸில் தனி நபராகப் போராடி ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து காப்பாற்றியதோடு, தற்போது 40 ரன்கள் முன்னிலை பெறவும் வைத்துள்ளார். மேலும் அறிமுகப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கண்ட 5-வது ஆஸ்திரேலிய வீரர்; சர்வதேச அளவில் 7-வது வீரராக களமிறங்கி இரு இன்னிங்ஸ்களிலும் 60 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தனது பொறுமை மற்றும் நேர்த்தியான ஆட்டத்தால் 4-வது நாளில் முடிய வேண்டிய போட்டியை 5-வது நாளுக்கு கொண்டு சென்றுவிட்டார். டெஸ்ட் போட்டிக்கு அறிமுக வீரராக இருந்தாலும், அனுபவமிக்க வீரரைப் போன்று விளையாடி ஆஸ்திரேலியர்களின் பாராட்டை பெற்றதோடு மட்டுமல்லாமல், சென்னை ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் இந்த 26 வயது ஹென்ரிக்ஸ்.

அதிரவைத்த அஸ்வின்

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தனது அற்புதமான சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின், 2-வது இன்னிங்ஸிலும் அந்த அணியின் 5 முன்னணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வீழ்த்தி மைதானத்தை அதிர வைத்தார். இந்தப் போட்டியில் அஸ்வின் இதுவரை (இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து) 193 ரன்களைக் கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2-வது முறையாக அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக அவர் 85 ரன்களைக் கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஒரு போட்டியில் அவரின் சிறந்து பந்துவீச்சாகும்.

கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்தும்பட்சத்தில் அதுவே டெஸ்ட் போட்டியில் (இரு இன்னிங்ஸ்கள் சேர்த்து) அஸ்வினின் சிறந்த பந்துவீச்சாக அமையும். 2-வது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க்கை வீழ்த்தியபோது டெஸ்ட் போட்டியில் 75-வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். 13-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

சச்சின் சாதனையை தகர்த்த தோனி

இந்தப் போட்டியில் தோனி எடுத்த 224 ரன்களே டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஒருவர் ஓர் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்னாகும். முன்னதாக 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக சச்சின் எடுத்த 217 ரன்களே இந்திய கேப்டன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.

இதேபோல் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தோனி 3-வது இடத்தைப் பிடித்தார். ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் (232) முதலிடத்திலும், இலங்கையின் சங்ககாரா (230) 2-வது இடத்திலும் உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் தோனி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கு அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் சேவாக் (319), சுநீல் கவாஸ்கர் (236) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் உள்ளனர்.

தோனி எடுத்த இந்த 224 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியர் ஒருவர் ஓர் இன்னிங்ஸில் எடுத்த 4-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். விவிஎஸ்.லட்சுமண் (281), சச்சின் (241), திராவிட் (233) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். இதுதவிர விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக இருந்து ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத் துள்ளார்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ் - ஆஸ்திரேலியா-380

இந்தியா

முரளி விஜய் (பி) பட்டின்சன் 10

வீரேந்திர சேவாக் (பி) பட்டின்சன் 2

சேதேஷ்வர் புஜாரா (பி) பட்டின்சன் 44

சச்சின் டெண்டுல்கர் (பி) நாதன் லியான் 81

விராட் கோலி (சி) ஸ்டார்க் (பி) லியான் 107

எம்.எஸ்.தோனி (சி) வேட் (பி) பட்டின்சன் 224

ரவீந்திர ஜடேஜா (பி) பட்டின்சன் 16

அஸ்வின் (பி) நாதன் லியான் 3

ஹர்பஜன் சிங் (பி) ஹென்ரிக்ஸ் 11

புவனேஸ்வர் குமார் (சி) கிளார்க் (பி) சிடில் 38

இஷாந்த் சர்மா நாட் அவுட் 4

உதிரிகள் 32

மொத்தம் (154.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 572

விக்கெட் வீழ்ச்சி:  1-11 (முரளி விஜய்), 2-12 (சேவாக்),

3-105 (புஜாரா), 4-196 (சச்சின்), 5-324 (கோலி), 6-365 (ஜடேஜா), 7-372 (அஸ்வின்), 8-406 (ஹர்பஜன் சிங்), 9-546 (தோனி),

10-572 (புவனேஸ்வர் குமார்).

பந்து வீச்சு: மிட்செல் ஸ்டார்க் 25-3-75-0, பட்டின்சன் 30-6-96-5,

பீட்டர் சிடில் 24.3-5-66-1, நாதன் லியான் 47-1-215-3,

மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 17-4-48-1, மைக்கேல் கிளார்க் 8-2-25-0

டேவிட் வார்னர் 3-0-19-0.

2-வது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

எட் கோவன் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 32

ஷேன் வாட்சன் (சி) சேவாக் (பி) அஸ்வின் 17

டேவிட்வார்னர் எல்பிடபிள்யூ (பி) ஹர்பஜன் 23

பிலிப் ஹியூஸ் (சி) சேவாக் (பி) ஜடேஜா 0

மைக்கேல் கிளார்க் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 31

மேத்யூ வேட் (பி) ஹர்பஜன் சிங் 8

மோய்சஸ் ஹென்ரிக்ஸ் நாட் அவுட் 75

பீட்டர் சிடில் (பி) ஜடேஜா 2

பட்டின்சன் (சி) சேவாக் (பி) அஸ்வின் 11

மிட்செல் ஸ்டார்க் (சி) சச்சின் (பி) அஸ்வின் 8

நாதன் லியான் நாட் அவுட் 8

உதிரிகள் 17

மொத்தம் (84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 232

விக்கெட் வீழ்ச்சி: 1-34 (வாட்சன்), 2-64 (கோவன்),

3-65 (பிலிப் ஹியூஸ்), 4-101 (வார்னர்), 5-121 (மேத்யூ வேட்),

6-131 (கிளார்க்), 7-137 (பீட்டர் சிடில்), 8-161 (பட்டின்சன்),

9-175 (மிட்செல் ஸ்டார்க்).

பந்து வீச்சு: அஸ்வின் 28-4-90-5, ஹர்பஜன் சிங் 27-6-55-2,

ரவீந்திர ஜடேஜா 26-5-68-2, இஷாந்த் சர்மா 3-1-2-0

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.