/

சாரதாவின் டபுள் டார்கெட்

மகளிர் 100 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம் என இரண்டிலும் பதக்கம் வெல்வதே இலக்கு என்கிறார் தமிழக தடகள வீராங்கனை சாரதா நாராயணன்.

News image
Updated On :28 ஜூன் 2013, 6:02 pm

ஏ.வி. பெருமாள்

மகளிர் 100 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம் என இரண்டிலும் பதக்கம் வெல்வதே இலக்கு என்கிறார் தமிழக தடகள வீராங்கனை சாரதா நாராயணன்.

புணேவில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீராங்கனைகளில் சாரதாவும் ஒருவர். தேசிய ஓபன் தடகளப் போட்டியில் 2006 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் 100 மீ. ஓட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர்.

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் சீனியர் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி வரும் சாரதா நாராயணன், ஆசிய தடகளப் போட்டிக்காக பெங்களூரில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

100 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம் என இரு பிரிவுகளிலும் பங்கேற்கவுள்ளார். 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் கேரளத்தின் மெர்லின், ஒடிசாவின் சர்வானி நந்தா, மேற்கு வங்கத்தின் ஆஷா ராய் ஆகியோருடன் சேர்ந்து களமிறங்குகிறார்.

ஆசிய தடகளப் போட்டி குறித்து சாரதா நாராயணனிடம் கேட்டபோது, அவர் கூறியது: 100 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம் இரண்டிலும் பதக்கம் வெல்ல வேண்டும். சிறந்த நேரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் எனது இலக்கு அல்ல.

இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் இப்போட்டியில் இரு பிரிவிலும் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும். அதுவும் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் என்றெல்லாம் கிடையாது. ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

எங்களுடைய பிரிவு போட்டிகளில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எப்படியானாலும் பதக்கம் வெல்ல வேண்டும் அவ்வளவுதான். 100 மீ. ஓட்டத்தைப் பொறுத்தவரையில் வழக்கம்போல் இந்த முறையும் கடும் போட்டி இருக்கும். 100 மீ. ஓட்டத்தில் 11.38 விநாடிகளில் இலக்கை எட்டியதே இந்தியாவில் தேசிய சாதனையாக உள்ளது. அதை முறியடித்தால் மட்டுமே தங்கப் பதக்கம் வெல்ல முடியும்.

100 மீ. ஓட்டத்தில் எனது "பெஸ்ட் டைமிங்' 11.50 விநாடிகள். இன்னும் இரு மைக்ரோ விநாடிகளை குறைத்தால் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது. இந்தப் போட்டியில் ஏறக்குறைய 11.30 விநாடிகளுக்கு உள்ளாக இலக்கை எட்டுபவர்தான் தங்கம் வெல்வார்.

2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிப்பவர்கள் பெரும்பாலும் 11.6, 11.7, 11.8 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தவர்களாகவே இருப்பார்கள்.

ஜப்பானின் சிஸாட்டோ ஃபுகுஷிமா இப்போட்டியில் பங்கேற்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஆசிய அளவிலான போட்டிகளில் அவர்தான் கோலோச்சி வருகிறார். அவர் பங்கேற்காத பட்சத்தில் என்னைப் போன்றவர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். புகுஷிமா பங்கேற்கும் பட்சத்தில் அவருக்குத்தான் தங்கப் பதக்கம்.

4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தைப் பொறுத்தவரையில் முதலில் நான் ஓடுகிறேன். அதன்பிறகு மெர்லினும், அவரைத் தொடர்ந்து சர்வானி நந்தா, ஆஷா ராய் ஆகியோரும் ஓடுகின்றனர். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் ஆஷா ராய் தங்கமும், மெர்லின் வெள்ளியும் வென்றனர்.

நாங்கள் 4 பேரும் தற்போது பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பயிற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. பதக்கத்தோடு திரும்பி வருவோம் என்றார்.

வென்ற பதக்கங்கள்: ரயில்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏராளமான தங்கப் பதக்கங்களை குவித்திருக்கிறார் சாரதா.

2008-ல் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டிகளில் 100 மீ. ஓட்டத்தில் 3 வெண்கலம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். 2009-ல் வியத்நாம் மற்றும் சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டிகளில் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

2006 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 6 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் 100 மீ. ஓட்டத்தில் தங்கமும், 2012-ல் நடைபெற்ற தேசிய ஓபன் தடகளப் போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 100 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம் ஆகிய இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டிகளிலும் ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.