"மேஜிக்' மென்டோஸா!
வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு என ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற 2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர்


வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு என ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற 2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எஃப்.சி. அணி புதிய சாம்பியனாகியிருக்கிறது.
இந்த தொடரின் பாதி லீக் ஆட்டங்கள் முடிந்திருந்தபோது சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கடைசி 4 லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடிய சென்னை அணி, கேரளம், தில்லி, மும்பை, புணே அணிகளை வீழ்த்த அனைவருடைய கணிப்பும் பொய்யானது. சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதன்பிறகு சென்னை அணி கோப்பையை வெல்லலாம் என ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். அரையிறுதியின் முதல் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியபோது அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது. ஆனால் இறுதி ஆட்டம் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதில் 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது சென்னை.
கோல் கீப்பர் இடெல் அபூலா, ஸ்டிரைக்கர் ஜேஜே, மிட்பீல்டர்கள் பெலிசாரி, இலானோ, பின்கள வீரர்கள் மென்டி, வாடூ என அனைவரும் ஒவ்வொரு விதத்தில் சென்னையின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தார்கள். ஆனால் முன்னணி ஸ்டிரைக்கரான மென்டோஸாவோ "மேஜிக்' நிகழ்த்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சீசனின் ஆரம்பத்தில் தடுமாறிய மென்டோஸா, அடுத்த சில ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் களம் திரும்பியபோது அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இதனால் பயிற்சியாளர் மெட்டாரஸியின் நம்பிக்கையைப் பெற்ற மென்டோஸா, தொடர்ச்சியாக கோல் மழை பொழிந்தததோடு, இரண்டு முறை ஹாட்ரிக் சாதனை படைத்தார். சக வீரர்களுக்கும் கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். அதனால்தான் ஜேஜே போன்ற இந்திய வீரர்கள் ஜொலிக்க முடிந்தது.
தொடர்ந்து அபாரமாக ஆடிய மென்டோஸா எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் எதிரணிகள் திக்குமுக்காடின. அதிவேகமாக ஓடும் ஆற்றல் பெற்றவரான மென்டோஸாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணியின் பின்கள வீரர்கள் விழிபிதுங்கினர்.
குறிப்பாக கேரளத்துக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்தது, கடந்த 1-ம் தேதி சென்னையில் கொட்டும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே கோலடித்து மும்பைக்கு நெருக்கடி ஏற்படுத்தியது போன்றவை அவருடைய அசாத்திய ஆட்டத்துக்கு சான்றாக அமைந்தன. கொட்டித்தீர்த்த மழையால் பந்துகூட விழுந்த இடத்தில் இருந்து மேலே எழாமல் சோதித்தபோதும், சற்றும் அசராமல் அதற்கேற்றவாறு ஈடுகொடுத்து ஆடினார் மென்டோஸா.
கோவாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும்கூட அவரால்தான் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 2-வது பெனால்டி வாய்ப்பில் பெலிசாரியை பந்தை எடுக்கவிடாமல் தானே எடுத்து அதை கோட்டைவிட்டதால் கடும் நெருக்கடியை சந்தித்த மென்டோஸா, கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோலை அடித்து அதற்கு பரிகாரம் தேடிக்கொண்டார்.
கால்பந்து விளையாட்டில் ஒருவர் சொதப்பினால்கூட ஓர் அணி வெற்றியை இழந்துவிடும். தனியொருவரை நம்பியிருக்க முடியாது. ஆனால் சென்னை எஃப்.சி. அணியோ, மென்டோஸாவை நம்பியே களமிறங்கியது. அவர் இல்லாவிட்டால் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது என்பது சென்னை அணிக்கு கடினமானதாகவே இருந்திருக்கும். வேறு யாராலும் அவருடைய இடத்தை நிரப்பியிருக்க முடியாது. கோலடிப்பதில் மென்டோஸாவைப்போல் மற்றவர்கள் "மேஜிக்' நிகழ்த்தவும் வாய்ப்பில்லை!
மொத்த ஆட்டம் 16
விளையாடிய நிமிடங்கள்1216
அடித்த கோல் 13
கோல் அடிக்க உதவியது3
இலக்கை நோக்கி உதைத்தது42
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...